Home>>இந்தியா>>பெட்ரோலுக்கான மாநில வரியை குறைக்க முன்வருமா தமிழ்நாடு அரசு?
இந்தியாசெய்திகள்தமிழ்நாடுபோக்குவரத்து

பெட்ரோலுக்கான மாநில வரியை குறைக்க முன்வருமா தமிழ்நாடு அரசு?

பெட்ரோல் வரி – எந்த அரசாங்கம் ஆட்சி செய்தாலும், விலைவாசி உயர்வில் ஏற்ற இறக்கம் இருந்தாலும், கச்சா எண்ணெய் விலை சரிவு அடைந்தாலும் பெட்ரோல் விலை உயர்வு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாவே உள்ளது.

இதன் காரணம் என்ன என்று பார்த்தால், அரசாங்கம் தன் நிதி தேவைக்கு மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கு பெரிதும் நம்பி இருப்பது பெட்ரோலைத் தான்.

பெட்ரோல் என்பது மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் ஒரு விற்பனைப் பொருள் மட்டும் அல்ல.
அது அரசாங்கத்தின் தேவை யை நிறைவு செய்யும் ஒரு கருவி. இன்னும் சொல்லப் போனால் அது அரசு நிர்வாகத்திற்காக மக்கள் மீது சுமத்தப் படும் ஒரு வகையான வரி. வீட்டு வரி, குடிநீர் வரி மற்றும் வருமான வரி போல் பெட்ரோல் என்பது ஒரு “வரி விதிப்பு”. எப்படி என்று விரிவாக பார்ப்போம்.

பெட்ரோல் என்பது நேரடியாக கிடைக்கும் ஒரு பொருள் அல்ல. கச்சா எண்ணெயில் இருந்து பிரித்து எடுக்கப்படும் ஒரு திரவம். டீசல், மண் எண்ணெய், தார் இவை யாவும் அப்படியே. ஆனால் நம்மிடம் அந்த கச்சா எண்ணெய் கிடையாது. எனவே அரபு நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி (2018, பிப்ரவரி) ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 65.5 அமெரிக்கன் டாலர் மதிப்பிற்கு வாங்கப் படுகிறது. அதாவது இந்திய மதிப்பிற்கு 4200ரூ.

ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 159 லிட்டர் கொள்ளளவு கொண்டது.
அப்படி பார்க்கும் போது ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் ரூ26.42.

பின் அதற்கான நுழைவு வரி, சுத்திகரிப்புக்கு ஆகும் செலவு, இறக்குமதி செலவு மற்றும் இதர செயல்முறை செலவுகள் எல்லாம் சேர்த்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 4.75. (டீசலுக்கு இது இன்னும் அதிகம்).

பின் எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும் எண்ணெய் இழப்பீட்டு செலவு (omc margin), போக்குவரத்து செலவு, கப்பல் போக்குவரத்து செலவு இவை எல்லாம் சேர்த்து ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ 3.31 (டீசலுக்கு இது சற்று குறைவு).

ஆக மொத்தம் வாகனங்களுக்கு பயன்படும்படி உள்ள பெட்ரோலின் மொத்த விலை ரூ 34.48. என்ன நம்ப முடியவில்லையா? இது தான் இறுதியான பெட்ரோல் விலை. இந்த விலைக்கு தான் நம் அண்டை நாடுகள் நேபாளம், இலங்கை போன்ற நாடுகள் நம்மிடம் இருந்து வாங்குகிறார்கள். ஆனால் நாம் தற்போது இந்திய ஒன்றியத்தில் பெட்ரோலுக்கு கொடுக்கும் விலையை விட அவர்கள் குறைவாகவே விற்கிறார்கள். இதன் காரணம் என்ன என்று பார்ப்போம்.

இந்த 34.48 ரூ பெட்ரோல் விலையோடு ஒன்றிய அரசின் உள் நாட்டு பொருள் வரி (excise duty) மற்றும் சாலை வரி (road cess) சேர்க்கப் படுகிறது. இந்த வரி 1 லிட்டருக்கு 19.48 ரூ சேர்க்கப் படுகிறது.இது பெட்ரோலின் அடக்க விலையில் ஏறக்குறைய 57% ஆகும். (டீசலுக்கு சற்று குறைவான வரியே)

அப்படி பார்க்கையில் இப்போது பெட்ரோல் விலை ரூ 53.96.
பின் பெட்ரோல் பம்ப் பங்கீடு செய்பவர்களுக்கான நிதி (dealer commission) ரூ3.59.
எனவே இப்போது பெட்ரோலின் விலை ரூ57.55.
அதான் எல்லா வரியும் முடிஞ்சுடுச்சே. அப்பறம் என்ன இதே விலைக்கு கொடுக்கலாமே என்று தானே நினைக்கிறீர்கள்.

அப்புறம் மாநில அரசுக்கு என்ன லாபம்?

திரைப்பட நடிகர் வடிவேலு நகைச்சுவை போல, ஒன்றிய அரசு பெட்ரோல் விலையை மூச்சு திணறும் அளவிற்கு அடித்து நொறுக்கிய பின் மாநில அரசிடம் கை மாற்றிவிடுகிறது. இப்பொழுது மாநில அரசு எப்படி மூச்சு திணற திணற அடிக்கிறது என்பதை பார்ப்போம்.

மாநில அரசு மதிப்பு கூட்டு வரி என்ற பெயரில் (VAT) 27% பெட்ரோலுக்கும், 16.75% டீசலுக்கும் விதிக்கிறது. இது ஒவ்வொரு மாநிலத்திற்கும் சிறிய அளவில் மாற்றம் உண்டு.மேலும் இதனோடு 25 பைசா மாசு வரியாக விதிக்கிறது.

இது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.15.54/- ஆகும்.

இப்படியாக பெட்ரோல் பம்ப்க்கு வரும் பெட்ரோலின் விலை ரூ.73.09/- (இந்த கட்டுரை எழுதும் நேரத்துல) ஆகிறது. ஆக வெறும் ரூ35 ல் இருந்து பெட்ரோல் விலை ரூ73/- ஆனது இப்படித் தான்.

நம் எல்லோர் மனதில் தோன்றும் கேள்வி ஒன்று உண்டு. அதெல்லாம் சரிங்க. வரி என்பது நிலையானது. ஆனால் கச்சா எண்ணெய் விலை மாறக்கூடியது தானே. அப்படி என்றால் அதன் விலை குறையும் போது பெட்ரோல் விலை குறைய வேண்டுமே என்ற மிக மிக நியாயமான கேள்வி அனைவர் மனதிலும் தோன்றலாம். சரியான கேள்விதான்.

நான் முன்பே இந்த கட்டுரையில் குறிப்பிட்டது போல பெட்ரோல் என்பது மக்களின் தேவையை நிறைவு செய்யும் ஒரு விற்பனைப் பொருள் மட்டுமல்ல. அது அரசின் வருவாயை தீர்மானிக்கும் ஒரு மாபெரும் சக்தி. அதை ஒரு வரியாக மட்டுமே அரசு பயன்படுத்தும்.

உதாரணமாக, கச்சா எண்ணெய் விலை ஒரு லிட்டர் 30 ரூ என்று வைத்து கொள்வோம். அதற்கான அரசின் வரி 50% என்று வைத்து கொள்வோம். இப்போது அரசுக்கு கிடைக்கும் வருவாய் ரூ.15/-.

ஒருவேளை கச்சா எண்ணெய் விலை சரிவு ஏற்பட்டு ரூ20 என்று ஆகும் போது அரசு அதே 50% வரியை விதித்தால், அரசுக்கு வருமானம் ரூ10 மட்டுமே. லிட்டருக்கு ரூ5 இழப்பு. எனவே அதை இழக்க விரும்பாத மத்திய மாநில அரசுகள் வரியை 75% ஏற்றி விடும். இப்போது அதே 15 ரூ கிடைத்து விடும். இதே போல் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஏற்படும் போது அதற்கான வரியின் மதிப்பு அதிகமாகும். எனவே வரி குறைய வாய்ப்பு உள்ளது.ஆனால் கச்சா எண்ணெய்க்கு கூடும் செலவை மக்கள் தலையில் தான் கட்ட முடியும். எனவே பெட்ரோல் விலை ஏறத்தான் செய்யும். இது தான் பெட்ரோல் விலை யின் உயர்வு மாறாமல் இருக்க காரணம்.

வேறு வழியே இல்லையா என்று கேட்டால், பெட்ரோல் விற்பனையில் “இரட்டை விலை கொள்கை”யை தான் பின் பற்ற வேண்டும். இது ஏற்கனவே விவாதிக்கப்பட்ட ஒரு வழிமுறைதான்.

அதாவது மக்களுக்கு மிக அவசியமாக பயன்படும் ஆம்புலன்ஸ், பேருந்து, சரக்கு லாரி, ஆட்டோ போன்ற வாகனங்களுக்கு நியாயமான விலையும், கார், வேன், இரு சக்கர வாகனம் போன்றவற்றிற்கு கொஞ்சம் அதிக விலையும் விதிக்கலாம்.

ஆனால் அது நடைமுறை சாத்தியத்தை பொறுத்தது.
ஆக பெட்ரோல் என்பது மக்கள் மீது சுமத்தப்படும் ஒரு வரி என்பது சரிதானே!.

இந்த கட்டுரையின் படி, 2018 பிப்ரவரியில பெட்ரோல் விலை லிட்டர் 73 ரூக்கு விற்கும் போது அப்போது உள்ள கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 65.5 அமெரிக்கன் டாலர் மதிப்பிற்கு வாங்கப்பட்டது. அதாவது இந்திய மதிப்பிற்கு 4200ரூ.

ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 159 லிட்டர் கொள்ளளவு கொண்டது.
அப்படி பார்க்கும் போது ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் = ரூ26.42.
அந்த வகையில் தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 54.41 டாலர், டாலருக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பு 73.13 டாலர், இதனால் ஒருபேரல் கச்சா எண்ணெய்யில்விலை 3979 ரூபாய் (159 லிட்டர்).
ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் தற்போதைய விலை = 25 ரூ.

கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை உயரக்காரணம் என்ன??

கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு,போக்குவரத்து, டீலர் commission விலைகளில் பெரிதாக மாற்றம் இல்லை.ஆனால் அப்போதைய ஒன்றிய அரசு வரி 19.48 ரூ, மாநில அரசு வரி 15.54 ரூ.

ஆனால் தற்போது மத்திய அரசு வரி 11 ரூ ஏற்றி 30 ரூ அளவிலும், மாநில அரசு வரி 19 ரூபாயும் ஏற்றி 34 ரூபாயாகவும் உள்ளது. இதுவே பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம். 2018 ஐ விட 30 ரூ வரை பெட்ரோல் ஏறி உள்ளது. அதில் இந்திய ஒன்றிய அரசை விட, மாநில அரசுகள் தான் மிக அதிகமாக வரியை ஏற்றியுள்ளனர்.

எனவே பெட்ரோல் விலை ஏற்றம் என்பது ஒன்றிய அரசு சம்பந்தப்பட்டது மட்டும் அல்ல, மாநில அரசும் சம்பந்தப்பட்டது தான்.


கட்டுரை:
மன்னை செந்தில் பக்கிரிசாமி

பட உதவி:
Lemon Pepper Pictures . on Unsplash

Leave a Reply