Home>>இந்தியா>>டெஸ்ட் உலகக்கோப்பையில் தோல்வியை தழுவிய பிசிசிஐ அணி
இந்தியாஉலகம்கட்டுரைகள்விளையாட்டு

டெஸ்ட் உலகக்கோப்பையில் தோல்வியை தழுவிய பிசிசிஐ அணி

டெஸ்ட் உலகக்கோப்பை – டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டு தோன்றி ஏறத்தாழ 144 ஆண்டுகள் ஆகின்றன. 1877ல் ஆஸ்திரேலியாவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே மெல்போர்ன் நகரத்தில் நடைபெற்றது முதல் டெஸ்ட் போட்டி. அதன்பின் கிரிக்கெட் பல வடிவங்களாக மாறியுள்ளது ஒரு நாள் ஆட்டம் (60 மற்றும் 50 ஓவர்கள்), இருபது ஓவர் ஆட்டம் என.

ஆனால் கடந்த ஐம்பது வருடங்களுக்குள் தோன்றிய ஒரு நாள் போட்டிக்கும், பதினைந்து வருடங்களுக்கு முன் தோன்றிய 20 ஓவர் போட்டிக்கும் உலக கோப்பை தொடர் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் கிரிக்கெட்டின் அனைவரது திறமையையும் உண்மையிலேயே டெஸ்ட் செய்யும் டெஸ்ட் போட்டிகளுக்கு ஏன் இன்னும் உலக கோப்பை தொடர் நடத்தப்படவில்லை என்ற கேள்வி நீண்ட காலமாகவே கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழும்பியது.

டெஸ்ட் கிரிக்கெட் என்பது 5 நாட்கள் கொண்ட மிக நீண்ட ஒரு விளையாட்டு வடிவம் எனவே அதிகாரப்பூர்வமான டெஸ்ட் அணிகள் 9 நாடுகளையும் ஒருவருக்கொருவர் விளையாட வைத்து எப்படி தொடர் நடத்த முடியும் என்று ஒரு கேள்வி எழுந்தது.

அதை ஐசிசி மிக அருமையாக கையாண்டு நாடுகளுக்கு இடையே டெஸ்ட் தொடர்கள் ஏற்படுத்தி அதன்மூலம் புள்ளிகளையும் வழங்கி அதற்கு இரண்டு ஆண்டுகள் கால அவகாசமும் கொடுத்து மிகச் சிறப்பாக டெஸ்ட் உலக கோப்பை தொடரை நடத்தியுள்ளது.

2019 முதல் கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்ற முதலாவது உலககோப்பை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும், நியூசிலாந்து நீங்களும் முதல் இரண்டு இடத்தை புள்ளிகள் அடிப்படையில் பெற்றனர். அதிலும் குறிப்பாக பிசிசிஐ கட்டுப்பாட்டில் இருக்கும் இந்திய ஒன்றிய அணி மிகச் சிறப்பாக விளையாடி முதலிடத்தைப் பெற்றது. இதில் வரலாற்று சிறப்புமிக்க ஆஸ்திரேலிய தொடரின் வெற்றி அடங்கும். அந்த வெற்றியே ஒரு உலகக் கோப்பை வாங்கியதற்கு இணையான ஒன்றுதான்.

இருந்தாலும் யார் முதல் டெஸ்ட் சாம்பியன் என்ற போட்டி கடந்த ஜூன் 18ம் தேதி இங்கிலாந்து நாட்டில் சவுத்தாம்டன் நகரில் நடந்தது. ஆனால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தரும் வகையில் மிக மோசமான வானிலை நிலவியது. கனமழை காரணமாக முதல் நாள் ஆட்டம் ரத்தானது.

தொடர்ந்து வரும் அனைத்து நாட்களும் வானிலை மோசமாகவே இருக்கும் என்ற வானிலை அறிக்கை வேறு கிரிக்கெட் ரசிகர்களை கவலை கொள்ளச்செய்தது. வெற்றி பெறுவது யாராகினும் பரவாயில்லை. ஆனால் ஆட்டம் நடைபெறாமலே கோப்பையை பகிர்ந்து கொடுப்பது என்பது நல்ல விளையாட்டுக்கு அழகல்ல என்ற எண்ணம் அனைவரிடமும் இருந்தது.

அதற்கு ஏற்றார் போல் இரண்டாம் நாள் வானிலை விளையாட்டிற்கு ஒத்துழைத்தது. பூவா, தலையாவில் வென்ற நியூசிலாந்து அணி தலைவர் வில்லியம்சன் மோசமான வானிலை காரணமாக பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். மிகவும் நல்ல முடிவு இது.

ஆனால் அவர் எடுத்த முடிவு தவறு என்று எண்ணும் வகையில் இந்திய ஒன்றிய BCCI அணியின் துவக்க ஆட்டம் சிறப்பாக அமைந்தது 65 ரன்கள் வரை விக்கெட் இழப்பின்றி ஆடினர். ஆனால் அதன்பின் விரைவாக மூன்று விக்கெட்டுகள் விழுந்தன. இருந்தும் கேப்டன் கோலி மற்றும் ரகானே சிறப்பாக ஆடி ஓரளவுக்கு நல்ல நிலைக்கு அணியை கொண்டு வந்தனர். ஆனால் மூன்றாம் நாள் ஆட்டம் இந்தியாவிற்கு சாதகமாக இல்லை அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 217 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளும் விழுந்தன. அதில் குறிப்பாக கடைசி மூன்று விக்கெட்டுகள் வெறும் 5 ரன்களில் விழுந்தன. இந்திய அணிக்கு உள்ள மிகப்பெரிய பிரச்சினையே இந்த கடைசி 3 ஆட்டக்காரர்கள் ஆடும் விதமே அவர்களால் எந்த வித பங்களிப்பும் வழங்க முடியவில்லை பேட்டிங் மூலம்.

அதை இந்த ஆட்டமும் தொடர்ந்தது. அதிகபட்சமாக ரகானே 49 ரன்கள் எடுத்தார்.

பின்னர் ஆடிய நியூஸிலாந்து ஏறக்குறைய இந்தியா விளையாடிய அதே முறையில் ஆடியது. இங்கே கோலி, ரகானே ஆடியது போல அங்கே வில்லியம்சன், கான்வாய் ஆடினார்கள். எல்லாமே ஒரே மாதிரி இருந்தாலும் கடைசி மூன்று விக்கெட்டுகள் 57 ரன்கள் வரை சேர்த்து அணியின் மொத்த ஓட்டத்தை 249க்கு உயர்த்தி முதல் இன்னிங்ஸ் லீட் 32 கொண்டு வந்தார்கள். இங்கு தான் பிசிசிஐ அணி தோல்வி அடைந்தது. நாம் ஆடும் போது கடைசி மூன்று விக்கெட்டுக்களால் வெறும் ஐந்து ரன்களே எடுக்க முடிந்தது அதே நேரத்தில் நாம் பந்துவீசும் போது கடைசி 3 விக்கெட்டுகளை 51 ரன்கள் வரை அடிக்கவிட்டது. இங்குதான் ஆட்டம் நியூசிலாந்துக்கு சாதகமாக சென்றது.

மோசமான வானிலையால் நான்காம் நாள் ஆட்டம் ரத்தான போது ஆட்டம் டராவை நோக்கி செல்லுமா என்று நினைத்தபோது ஆறாம் நாள் ஆட்டம் உண்டு என்று ஒரு தளர்வு ஆட்டத்தை சற்று உயிர்ப்போடு வைத்தது.
இரண்டாம் இன்னிங்சில் எதிர்பார்த்தது போலவே பிசிசிஐ அணியின் ஆட்டம் படுமோசமாக இருந்தது குறிப்பாக துவக்க ஆட்டக்காரர் கில், கேப்டன் கோலி, ரகானே, புசாரா இவர்களின் ஆட்டம் படுமோசமாக இருந்தது ரிசப் பண்ட் மட்டும் ஓரளவுக்கு நன்றாக ஆடி இந்திய அணியின் ஸ்கோரை 170 வரைக்கும் கொண்டு செல்ல உதவியாக இருந்தார். இந்த முறையும் கடைசி 3 விக்கெட்டுகள் சொற்ப ரன்களில் குவித்தனர்.

பின்னர் 138 அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நியூசிலாந்து வீரர்கள் எளிமையாகவே துரத்தி வெற்றி பெற்றனர்.

இதன் மூலம் முதல் உலக டெஸ்ட் போட்டியை நியூசிலாந்து அணி வென்று சாதனை படைத்துள்ளது. நியூசிலாந்து அணி முதன் முதலாக ஒரு உலககோப்பையை வில்லியம்சன் தலைமையில் பெற்றுள்ளது.

வாழ்த்துக்கள் கேப்டன் ice cool வில்லியம்சன். ஒரு அற்புதமான கேப்டன், அபாரமான பேட்ஸ்மேன், நல்ல மனிதர் என்று அனைவராலும் நேசிக்கப்படும் வில்லியம்சனுக்கு முழுத்தகுதி உடைய வெற்றி இது.

2019ல் மோசமான விதிமுறை காரணமாக பறி போன கோப்பை இந்த முறை கிடைத்தது சிறப்பு. அதே நேரத்தில் இந்திய அணியும் மிக அற்புதமான ஆட்டத்தை ஆடி இறுதி போட்டி வரை தகுதி பெற்றனர். மிகச்சிறப்பான விடயம்.

உலகின் தலை சிறந்த பந்து வீச்சை கொண்ட நியூசிலாந்தை சமாளிக்க முடியாமல் பிசிசிஐ பேட்ஸ்மேன்கள் அனைவரும் மண்ணை கவ்வியது மட்டுமே அவர்கள் செய்த தவறு. இருந்தாலும் நல்ல கிரிக்கெட் வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியில் யாருக்கும் எந்த ஏமாற்றமும் இருக்க வேண்டியது இல்லை. காரணம் இது இந்தியாவை முன்னிறுத்தும் விளையாட்டும் அல்ல. பிசிசிஐ என்ற தனியார் அமைப்பின் கீழுள்ள ஒரு அணி ஆடும் போட்டிதான் இது.

எனவே நாம் அனைவரும் விளையாட்டை விளையாட்டாக பார்ப்பது மட்டுமே அனைவருக்கும் நல்லது. கிரிக்கெட் என்பது ஒரு பொழுதுபோக்கு மட்டுமே, நல்ல பொழுது போக்கு விரும்புவதற்கு யார் வெற்றி பெற்றாலும் அவர்களுக்கு வெற்றியே தகுதி உள்ளவன் வெற்றி பெறுவான் என்பது உலக நியதி அந்த தகுதி இந்த முறை நியூசிலாந்துக்கு கிடைத்துள்ளது.


கட்டுரை:
மன்னை செந்தில் பக்கிரிசாமி.

பட உதவி:
இணையம்.

Leave a Reply