பிரதமர் மோடி அவர்களுக்கு வ.கௌதமன் வேண்டுகோள்.
1971 ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் யுத்தம் நடந்தபோது அமெரிக்காவும் சீனாவும் பாகிஸ்தானுக்கு போட்டிபோட்டுக் கொண்டு ஆயுதம் மற்றும் ராணுவ உதவிகள் செய்து கொண்டிருந்த நிலையில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் அதிரடியாக ராணுவத்தை அனுப்பி கிழக்கு பாகிஸ்தானைப் பிரித்து சுதந்திரம் பெற்ற வங்க தேசம் என அறிவித்தார்.
அதைபோன்று இந்தியாவிற்குப் பேராபத்தாக விளங்கி இலங்கையை முற்றும் முழுதாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் சீனாவிற்கும் சேர்த்து பாடம் புகட்ட தமிழர் தாயகமான தமிழீழத்தை பிரித்து தனி நாடாக பிரகடனப்படுத்த வேண்டுமென்று பிரதமர் மோடி அவர்களுக்குத் தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பாக உரிமையோடு வேண்டுகோள் வைக்கிறேன்.
‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ என்பது போல் உலகம் பார்க்க மனிதகுலம் பதை பதைக்க ஒரு திட்டமிட்ட இனப்படுகொலையைச் செய்த ராஜபக்சே, கோத்தபய கூட்டம் இன்று இலங்கையில் அதற்கான அறுவடையை செய்து கொண்டிருக்கிறது. சிங்கள அதிகார வர்க்கம் 30 ஆண்டுகளுக்கு மேலான கொடூர யுத்தத்தை நடத்தியபோது இலங்கையில் இன்று நிகழும் பசி பஞ்சத்தைவிட பல நூறு மடங்கு அதிகமான துன்பத்தையும் ரணங்களையும் தமிழர்கள் அனுபவித்தார்கள்.
முள்ளிவாய்க்காலில் ஒருவேளைக் கஞ்சிக்காக கையேந்தி நின்ற நூற்றுக்கணக்கான எங்கள் பிஞ்சுக் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், வயதானவர்கள் மீது ஈவு இரக்கமற்று ரசாயன கொத்து குண்டுகளை வீசி கொன்றதன் பலன் இன்று ஒரு துண்டு ரொட்டிகாக சிங்கள மக்கள் ராஜபக்சேவை எதிர்த்து கலவரம் செய்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் மக்களை வேறு வேறாக பார்க்கவில்லை.
பசியோடு அலையும் எங்கள் பிள்ளைகளையும் சிங்கள பிள்ளைகளையும் ஒன்றாகவே பார்க்கிறோம். அதற்காக சித்தம் கலங்குகிறோம். இந்நிலை மாற வேண்டும். இந்த வறுமையைப் பயன்படுத்தி உலகத்தை ஆளத் துடிக்கும் சீன மிருகம் சிங்கள அதிகார வர்க்கத்திற்கு பணத்தை அள்ளி அள்ளிக் கொடுத்தது. வட்டிகூட கட்ட முடியாமல் இன்று மொத்த இலங்கையையும் முழுங்கிக் கொண்டிருக்கிறது. இது இந்திய ஒன்றியத்திற்குப் பேராபத்து. சாலை, துறைமுகம், விமான நிலையம், இராணுவத்தளம், சிறப்பு பொருளாதார மண்டலம் என எங்கும் சீன மயம்.
இந்துமாக் கடலில், கச்சத்தீவில் சீன கப்பல் இந்திய ஒன்றியத்தை வேவு பார்த்துவிட்டு செல்கிறது. திருகோணமலையில் நின்றபடி ஒரு சீன ராணுவன் இங்கிருந்து தமிழ்நாட்டிற்கு எத்தனை கிலோமீட்டர் என்று கேட்டறிந்த காட்சி வலைதளம் முழுக்க வட்டமிட்டு வந்தது. இருந்தும் இலங்கையைக் கண்டிப்பதற்குப் பதிலாக பல்லாயிரக்கணக்கான கோடிகளை மூட்டை மூட்டையாக கட்டி இந்திய ஒன்றியம் இலங்கைக்குத் தருவது வியப்பாகவே இருக்கிறது. விடுதலைப்புலிகள் இருந்தவரை அமெரிக்க கப்பலோ சீன நீர்மூழ்கியோ இந்துமாக் கடலில் முகம் காட்டியதில்லை. அத்துமீறிய எந்த நாட்டு கப்பலாக இருந்தாலும் அவை அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டன.
இந்திய ஒன்றியத்திற்கு புலிப்படை ஒரு பெரும் பாதுகாப்பாக இருந்தது. ஆனால் இன்று?
தமிழர்களைக் கொடூரமாக கொன்ற ஒரு சிங்கள ராணுவ வீரன் பிரபாகரன் இருந்திருந்தால் இந்நேரம் சிங்களவர்களுக்கும் சேர்த்து உணவளித்திருப்பார் என்று பேசிய காணொளி உலகத்தின் மனசாட்சியை உலுக்கி கொண்டிருக்கிறது.
ஐநாவின் செக்யூரிட்டி கவுன்சிலில் சீனா இருப்பதால்தான் செய்த இனப்படுகொலையிலிருந்து சீனா தன்னைக் காப்பாற்றும் என்றும் தனக்கு ஏற்பட்ட பொருளாதார பிரச்சினையைச் சீனா சரி செய்யுமென்றும் நம்பி இலங்கை இன்று முற்றுமுழுதாக தன்னை சீனாவிடம் இழந்து ஒரு டைட்டானிக் கப்பலை போன்று மூழ்கிக் கொண்டிருக்கிறது. இந்நேரத்திலாவது இந்திய ஒன்றியம் விழித்துக்கொள்ள வேண்டும்.
இந்திரா காந்தியால் சுதந்திர நாடாக பிரகடனப்படுத்தப்பட்ட வங்கதேசம் இப்போது சீனாவின் கையில். இந்தியாவின் பிரதான எதிரியான பாகிஸ்தானும் சீனாவோடு இறுக கைப்பற்றி நிற்கிறது. இந்தியாவிற்கு வாலையும் சீனாவிற்குத் தலையையும் கொடுத்து படுத்துக்கிடக்கும் இலங்கையும் இன்று சீனாவின் பிடியில்.
இந்தியாவைச் சுற்றிலும் சீனா இரும்பு வளையம் அமைத்திருக்கும் நிலையில் பிரதமர் மோடி அவர்கள் இந்திய ஒன்றியத்தின் தவறான வெளியுறவுக் கொள்கையை இனியாவது தகர்த்தெரிந்து அதிரடியாக ராணுவத்தை அனுப்பி சிங்கள மக்களைக் காப்பாற்றுவதோடு இந்திய ஒன்றியத்திற்கு எப்பொழுதும் நன்றி உள்ளத்தோடும் பாதுகாப்போடும் இருக்கின்ற, இருக்கப் போகின்ற தமிழர்களுக்கான தனித் தமிழ் ஈழத்தைப் பிரித்தெடுத்து சுதந்திர நாடாக பிரகடனப்படுத்த வேண்டுமென்றும், அது மட்டுமே எதிர்கால இந்தியாவிற்கு நன்மை பயக்கும் ஒரே செயல் என்பதையும் தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பாக மீண்டுமொருமுறை உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.
வ.கௌதமன்
பொதுச் செயலாளர்
தமிழ்ப் பேரரசு கட்சி
“சோழன் குடில்”
25.03.2022