கீழடியில் நடைபெற்று வரும் ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் அற்புதமான சிற்பம் ஒன்று இன்று கிடைத்துள்ளது. சங்க கால மகளிர் ஒருவரின் தலைப் பகுதி சிற்பம்.
தொல்லியல் அகழ்வாய்வுகளில் கிடைக்கும் இது போன்ற சிற்பங்கள் அது வாழ்ந்த நாகரிக காலத்தின் பண்பாட்டை அளவிடப் பேருதவியாக இருக்கும். அது போன்றதொரு சிற்பம் தான் இது.
இதனுடைய காலம் எப்படியும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகச் செல்லும். சிந்துவெளிக்கு நிகரானதும், அதற்கு முன்பாகவும் செல்லக்கூடிய காலத்தின் நாகரிகச் செழுமையை வெளிக் கொணரும் விலை மதிப்பற்ற கலைப் பொருள் தான் இது.
வடக்கு வாடை நம் பெருமையை எத்தனை தான் சீர்குலைத்து வந்தாலும், நம் தமிழின் பெருமை ஆழத்தில் இருந்து வெளிப்பட்டு வந்து கொண்டே இருக்கிறது. இனி நம்மவர்கள் காட்டும் அக்கறை தான் நம் பெருமையை நிலை நிறுத்தும்.
சரிந்த கொண்டை..
நீண்ட நெற்றி.. நெற்றிச்சூடி. வளைந்த புருவம், அகன்ற கண்கள், வளர்ந்த காது, பூத்தோடு, கூர்மையான நாசி, குவிந்த உதடு, முழு நிலவையொத்த மலர்ந்த முகம்.
சங்க இலக்கியம் கூறும் அழகிய தமிழ் மகள் இவள்..
அந்தப் பண்பாட்டுக் காலத்தின் பெண்ணுருவைத்தான் இந்தச் சிற்பம் நமக்குக் காட்டுகிறது.
இதை இன்று வெளிப்படுத்திய தமிழ் நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் அமைச்சருக்கும் நண்பர்கள் மாரி ராஜனுக்கும், உடனடியாக அதை வரைந்தளித்த ஓவியர் இளஞ்செழியனுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
—
முனைவர் சிவ இளங்கோ,
புதுச்சேரி