இலங்கை ஏதிலியர்களை சட்ட விரோதமாக குடியேறியவர்கள் என ஒன்றிய அரசு கூறியது வன்மையாக கண்டிக்கத்தக்கது என தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளர் திரு. வ.கெளதமன் பேட்டி அவர்கள் பேட்டியளித்துள்ளார். அதன் விவரத்தை அடுத்ததாக குறிப்பிட்டுள்ளோம்.
திருச்சியில் உள்ள இலங்கை ஏதிலியர்கள் முகாமை இயக்குனரும், தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளருமான வ.கெளதமன் நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
40 ஆண்டுகளுக்கும் மேலாக ஏதிலிகள் முகாமில் வசிக்கும் இலங்கை ஏதிலியர்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். அவர்கள் வசிக்கும் வீடுகளும் சிறிய அளவிலேயே இருக்கிறது. குடிசைகளை கலைந்து அவர்களுக்கு உறுதியான தொகுப்பு வீடுகளை கட்டித்தர வேண்டும். இலங்கையிலிருந்து ஏதிலியர்களாக வந்த ஈழ தமிழர்களின் வாழ்வை முன்னேற்றும் வகையில் கல்வி வேலை வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டும். ஈழ தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமையோ அல்லது ஒற்றை குடியுரிமையோ வழங்க வேண்டும்.
இந்திய ஒன்றிய அரசு திபெத்தியர் உள்ளிட்ட மற்ற நாட்டு அகதிகளுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்குகிறது. ஆனால் ஈழ ஏதிலியர்களுக்கு எந்த சலுகையும் வழங்கப்படுவதில்லை. எனவே குடியுரிமை வழங்கினால் மட்டுமே அவர்கள் மருத்துவம் பொறியியல் உள்ளிட்ட உயர் கல்விகள் படித்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்ல முடியும் இல்லையேல் மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக தங்கள் தலைமுறைகளை இந்திய ஒன்றியத்திலும் அழித்துக் கொண்ட நிலைதான் தொடரும். ஆகவே அவர்களின் வாழ்வை முன்னேற்ற இந்திய ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் உடனடியாக ஒரு நல்ல தீர்வினை பிரகடனப்படுத்த வேண்டும்.
இலங்கை ஏதிலியர்களை சட்ட விரோதமாக குடியேறியவர்கள் என இந்திய ஒன்றிய அரசு மதுரை உயர்நீதிமன்ற கிளைகள் கூறியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அந்த வார்த்தையை ஒன்றிய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
திருச்சி சிறப்பு முகாமில் உள்ள 10 ஈழத் தமிழர்களை விடுதலை செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேபோன்று விடுதலைக்கு தகுதியான 48 ஈழத்தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசையும் மரியாதைக்குரிய காவல்துறை தலைவர்கள் ஐயா டேவிட்சன், ஐயா ஈஸ்வரமூர்த்தி அவர்களையும் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.
ஏழு தமிழர் விடுதலையில் ஆளுநர், குடியரசுத்தலைவர், பிரதமர் மோடி ஆகியோர் நாடகம் போடுகிறார்கள். அவர்கள் போடும் நாடகம் இரக்கமற்ற நாடகம், அந்த நாடகத்தை கைவிட்டு ஏழு தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
ஒன்றிய அரசு விடுதலையை தாமதித்தால் சிறப்பு சட்டத்தை பயன்படுத்தி ஏழு தமிழர்களை தமிழ்நாடு அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். கோரிக்கை அளித்தால் அதனை உடனடியாக பரீசிலிக்க கூடிய அரசாக தி.மு.க அரசு உள்ளது. எனவே அவர்கள் மீது நம்பிக்கை வைத்து இப்போதைக்கு போராட்டங்களை தள்ளி வைக்கிறோம் என்று கூறினார்.
—
செய்தி சேகரிப்பு:
இராசசேகரன்,
மன்னார்குடி.