நாகை மீனவர்கள் மீதான இலங்கை அரசின் துப்பாக்கிச் சூட்டுக்கும், கொலைவெறித் தாக்குதல்களுக்கும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் கையாலாகாத்தனமே காரணம்! என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். அதன் விபரத்தை கீழே பகிர்ந்துள்ளோம்.
நாகை துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்கச்சென்ற அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் மீது சிங்களக்காடையர் கூட்டம் கொலைவெறித்தாக்குதலும், துப்பாக்கிச்சூடும் நடத்தியிருப்பது அடங்காப் பெருஞ்சினத்தையும், கடும் ஆத்திரத்தையும் தருகிறது. கேட்க நாதியற்ற அடிமைகளாக நினைத்து தமிழக மீனவர்களை நாளும் வதைக்கும் சிங்கள இராணுவத்தின் தொடர் தாக்குதல்களும், பெரும் அட்டூழியங்களும் வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழக மீனவர்கள் மீது கால் நூற்றாண்டுக்கு மேலாக வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் சிங்கள அரசப்பயங்கரவாதத்தைக் கண்டிக்கவோ, தட்டிக்கேட்கவோ துப்பற்ற மத்தியில் ஆளும் பாஜக அரசின் கையாலாகாத்தனத்தின் வெளிப்பாடாகவே இத்தகைய இழிநிலைக்கு தமிழக மீனவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். நேற்றையதினம் கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த கலைச்செல்வன், தீபன்ராஜ், ஜீவா, மாறன், அரசு மணி, மாறன், முருகானந்தம், மோகன், ராமச்சந்திரன், ஆனந்த் ஆகிய 10 மீனவர்களது விசைப்படகின் மீது சிங்களக் கடற்படையினர் சரமாரியாகத் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். அதில் மீனவர் கலைச்செல்வன் தலையில் பலத்தக் காயங்களோடு நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார். இச்செய்தி நாடெங்கிலுமுள்ள தமிழர்களைப் பெரும் கொதிப்புக்குள்ளும், வேதனைக்குள்ளும் ஆழ்த்தியிருக்கிறது.
மத்தியிலும், மாநிலத்திலும் எந்த ஆட்சி வந்தாலும், அதிகார மாற்றம் எத்தனை முறை நிகழ்ந்தாலும் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் தாக்குதல்கள் மட்டும் தொடர்கதையாக மாறி வருவதும், அதற்கு எவ்வித எதிர்வினையுமாற்றாது ஆளும் ஆட்சியாளர்கள் அமைதியாய் கடந்துபோவதும் தாங்கொணாத் துயரத்தைத் தருகிறது. அதிகாரமற்று, எதுவும் செய்யவியலா கையறு நிலையில் நின்றுகொண்டு, மீனவச் சொந்தங்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்க முடியவில்லையே? என எண்ணும்போது ஆற்றாமையும், அளவற்ற கோபமும் வெளிப்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. அண்டை மாநிலமான கேரளத்திலுள்ள மலையாளி மீனவர்கள் மீது இதுவரை எவ்விதத் தாக்குதலும் நிகழாத நிலையில் தமிழக மீனவர்கள் மட்டும் தினந்தோறும் தாக்குதலுக்கு உள்ளாவதும், இலங்கை அரசின் ஈவிரக்கமற்ற கோர வன்முறைக்கு இரையாவதும் தமிழர்கள் மீதான சிங்கள இனவெறி அரசின் கொடும் வன்மத்தின் காரணமாகவே நிகழ்கிறது என்பது உறுதியாகிறது. தமிழர்களை மிக இழிவாக மதிப்பிட்டு, அவர்களது உயிர், உடைமைகள், உரிமைகள் ஆகியவை குறித்து எவ்வித அக்கறையுமற்ற நிலையை முன்னெடுத்து, சிங்களப் பேரினவாதத்தைக் கண்டிக்க மறுத்து, அவர்களுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடித்து வரும் மத்தியில் ஆளும் பாஜக அரசின் கொடுங்கோல் ஆட்சிமுறையும், அலட்சியப்போக்குமே இத்தாக்குதல்களுக்கு முழுமுதற்காரணமாகிறது.
எண்ணூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் நடுக்கடலில் துள்ளத்துடிக்கப் படுகொலை செய்யப்பட்டும், ஆயிரக்கணக்கான மீனவர்கள் உடல் உறுப்புகளைச் சிதையக் கொடுத்தும், தமிழக மீனவர்களின் பல கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறையாடப்பட்டபோதும் நாட்டையாளும் ஆட்சியாளர்கள் அதனைத் துளியும் பொருட்படுத்துவதுமில்லை; எவ்வித எதிர்வினையாற்றுவதுமில்லை. உலகில் எந்த ஒரு நாடும் தனது நாட்டுக் குடிகளை அந்நிய நாட்டு இராணுவத்தால் தாக்கப்படுவதை இப்படி சகித்துக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிராது. இத்தனை கொடுமைகளுக்குப் பிறகும் உலகின் நான்காவது மிகப்பெரிய இராணுவத்தை வைத்துள்ள இந்திய அரசு, இலங்கை அரசுக்கு எவ்வித நெருக்கடியும் கொடுக்காது அமைதி காப்பது சொந்த நாட்டு மீனவர்களின் உயிர்களைக் கிள்ளுக்கீரையாக எண்ணும் அலட்சிய மனப்பான்மையின் வெளிப்பாடாகும்.
சீனாவைத் தனது நாட்டுக்குள் ஊடுருவ வழிவகைச் செய்துகொடுத்து, அதற்கேற்ப சட்டத்திருத்தங்களைக் கொண்டு வந்து, ஒட்டுமொத்தமாக சீனாவின் ஆதிக்கத்திற்குக் கட்டுப்பட்ட ஒரு பகுதியாக இலங்கை மாறிவரும் சூழலில், அதனை வெளிப்படையாக சிங்கள ஆட்சியாளர்களே உறுதிப்படுத்தி வரும் நிலையில் அத்தகைய அரசியல் நிலைப்பாடு, பூகோள ரீதியாக இந்தியாவின் பாதுகாப்புக்குப் பேராபத்தாய் மாறும் என்பது தெரிந்திருந்தும், இலங்கை அரசைக் கண்டிக்காது, ஒன்றிய அரசு கடைப்பிடிக்கும் வஞ்சக அமைதி என்பது இந்நாட்டின் குடிமக்களாகிய தமிழர்களுக்கு இழைத்திடும் பச்சைத்துரோகமாகும்; இந்நாட்டின் இறையாண்மையைப் பறிகொடுத்திடும் கொடுஞ்செயலாகும்.
ஆகவே, இந்தியாவுக்கெதிராக, சீனாவோடு ஒட்டி உறவாடும் இலங்கையை இனியும் நட்பு நாடு எனக்கூறுவதை நிறுத்தி, இலங்கையுடனான வர்த்தக உறவு உள்ளிட்ட அனைத்து உறவுகளையும் துண்டித்து, இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையை மாற்ற முன்வர வேண்டுமெனவும், இலங்கை கடற்படையின் தாக்குதல்களுக்கு இந்தியக் கடற்படையின் மூலம் தக்கப் பதிலடி கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.
இத்தோடு, தமிழ்நாட்டை ஆளும் திமுக, தன்னிடமுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் வலுவான பலத்தினைப் பயன்படுத்தி நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே ஒன்றிய அரசுக்கு உரிய அழுத்தமும், நெருக்கடியும் கொடுத்து, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் இனியும் தொடராவண்ணம் தடுத்து நிறுத்த முன்முயற்சிகளை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, கடந்த பல ஆண்டுகளாக மீனவர்களின் உயிர் மற்றும் வாழ்வாதாரத்தோடு தொடர்புடைய இந்நெடுஞ்சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வினை பெற்றுத்தர, தமிழர்களுக்குச் சொந்தமான கச்சத்தீவினை திரும்பப்பெறுவதற்கான சட்ட நடவடிக்கையை விரைவுபடுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன். மேலும், பாதிக்கப்பட்ட மீனவர்களின் மருத்துவச்செலவை அரசே ஏற்று, தாக்குதலுக்கு ஆட்பட்ட மீனவர்களின் குடும்பத்திற்கு தலா 10 இலட்சத்தைத் துயர்துடைப்பு நிதியாக வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசைக் கோருகிறேன்.
—
செய்தி உதவி:
செந்தில் பக்கிரிசாமி,
மன்னார்குடி.