காலரா என்பதை “காலன் வரான்” என்பதாக அழைத்ததையும் அதன் பாதிப்புகளையும் வரலாற்றின் வழியாக அறிந்திருந்த நமக்கு, இன்று அந்த சூழலை நேரடியாக அனுபவிக்கும் நிலையை இந்த கொரோனா பெரும் தொற்று நமக்கு ஏற்படுத்தியுள்ளது. அன்றைய காலரா காலத்தில் இந்திய நிலப்பரப்பின் மக்கள் தொகை சுமார் 20 கோடி பேர், அதில் சுமார் 1.5 கோடி மக்களை நாம் காலராவிற்கு பலிகொடுத்தோம். இதற்கு முக்கிய காரணம் அன்றைய சூழலில் அம்மக்களுக்கு தனது வாழ்விடத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற புரிதலும் விழிப்புணர்வும் இல்லாதது.
ஒருவேளை அன்றைய சூழலில் அவர்களுக்கு அந்த விழுப்புணர்வு இருந்திருந்தால் அந்த1.5 கோடி மக்களின் உயிரிழப்பையும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியையும் அவர்கள் தவிர்த்திருப்பார்கள். அதேபோல் தான் இன்றைய நிலையும். இன்று இந்த கொரோனா சூழலை விழிப்புணர்வுடனும் அலட்சியம் இல்லாமலும் அணுகினால் தான் இந்த கொரோனா பரவல் சங்கிலியை நம்மால் உடைக்க இயலும். அதற்கு நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து செயலாற்ற வேண்டிய சூழலில் இருக்கிறோம், இல்லையெனில் அதீதமான உயிரிழப்பையும் அதனை தொடர்ந்து கணக்கிட இயலாத பொருளாதார இழப்பு மற்றும் அதனை சார்ந்த தனி மனித உளவியல் சிக்கலையும் நாம் சந்திக்கும் சூழல் ஏற்படும்.
இது ஏதோ பீதியாக தெரியலாம். ஆனால் ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய உண்மை. அன்று காலரா காலத்தில் எப்படி சுகாதாரத்தை பற்றிய விழிப்புணர்வு இல்லையோ அதே போன்று இன்று விழிப்புணர்வற்ற மற்றும் அதனையும் மீறிய அலட்சியம் நம்மிடம் இருப்பதாக தெரிகிறது. இதனை உணர்ந்து ஒவ்வொருவரும் பொறுப்புடன் இணைந்து செயல்பட வேண்டிய காலத்தில் நாம் உள்ளோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இதிலிருந்து மீள இன்று நம் முன் இருக்கும் ஒரே வாய்ப்பு அரசு மற்றும் மருத்துவர்கள் சொல்வதை கேட்டு அவற்றை கடைபிடிப்பது மட்டுமே. அது தான் ஒர் சிவில் சமூகத்திற்கான பொதுவான வாய்ப்பு. இங்கு ஒவ்வொரு தனிமனிதனின் அலட்சியமும் அடுத்தவரை பாதிக்கும் சூழல் உள்ளது. அதனால் அறிவார்ந்த பொது சமூகமாக அனுவரும் சேர்ந்து செயல்பட்டு இந்த தொற்றிலிருந்து் வெளிவர வேண்டும். அது தான் பண்பட்ட சமூகம் செய்ய வேண்டியது, குறிப்பாக நம்மை போன்ற வரலாற்று சிறப்பு மிக்க தமிழ் சமூகம் செய்ய வேண்டியது. நாம் இவ்வளவு காலம் உயிர்ப்புடன் இருக்கிறோம் எனில் இதற்கு முக்கிய காரணம், இதுபோன்ற இக்கட்டான சூழலில் அனைவரும் ஒன்றிணைந்து அதிலிருந்து மீண்டு வந்தது தான். அவ்வாறாக தான் நாம் வரலாற்றில் இன்றும் தனிதன்மையுடன் இருக்கிறோம். நமக்கென்று இல்லை உலகம் முழுவதும் இது தான் நிலை. இப்படிதான் பல நாடுகள் கொரோனோவிலிருந்து மீண்டுள்ளன.
அது எப்படி அந்த நாடுகளிலெல்லாம் சாத்தியம் ஆகிற்று, அவர்கள் எவ்வாறு கொரோனாவிலிருந்து மீண்டார்கள் என்றால், அரசு சொல்வதை மக்கள் ஒன்றிணைந்து முறையாக கடைப்பிடித்தார்கள் அதேபோல் அரசும் அதற்க்கு தேவையானவற்றை சரியாக செய்தது. என இரண்டு தரப்பும் இணைந்து செயல்பட்டதன் விளைவு அவர்கள் இன்று கொரோனாவிலிருந்து மீண்டு வந்துள்ளார்கள். இன்று ஏக இந்தியாவில் இது சாத்தியமா எனில் கண்டிப்பாக இல்லை என்றே தோன்றுகிறது, ஏனெனில் முதலில் முன்னின்று செயல்பட வேண்டிய மத்திய அரசு எங்கிருக்கிறது என Missing போட்டு தேடும் சூழல் தான் ஏக இந்தியாவில் இருக்கிறது. ஆக அதனை விடுத்து, தமிழகம் எப்படி இந்த பெரும்தொற்றிலிருந்து மீள வேண்டும் அதற்க்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தான் பார்க்க வேண்டும்.
புதிதாக பதவியேற்றுள்ள இந்த அரசின் முன்னுள்ள மிகப்பெரிய சவால் கொரோனவிலிருந்து மக்களை மீட்பது தான். அதை நோக்கி தான் அவர்களின் செயல்பாடும் உள்ளதாக தெரிகிறது, இங்கு அவர்களுடன் இணைந்து ஒவ்வொருவரும் செயல்பட்டால் மட்டுமே இந்த பெரும் தொற்றிலிருந்து மீள இயலும்.
அதற்கு என்ன செய்ய வேண்டும்?
1. அலட்சியம் காட்டாமல் தேவையின்றி வெளியில் செல்வதை நாம் நிறுத்த வேண்டும். இதனால் ஏற்படும் வருமான இழப்பை கொஞ்சமேனும் ஈடுசெய்யும் வகையில் அரசு மக்களுக்கு மாதமாதம் நிதி அளித்திட வேண்டும்.
2. வெளியில் செல்லும்பொழுது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். மூச்சு விட சிரமம் இல்லாதவர்கள் ஒன்றுக்கு இரண்டு முக கவசம் சேர்த்து அணிந்து கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
3. தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கூட்டமாக இருக்கும் இடத்திற்கு செல்வதை தவிர்த்திட வேண்டும்.
4. கைகளை அடிக்கடி கிருமி நாசினி கொண்டு கழுவ வேண்டும். வெளியில் சென்றால் கூடுமானவரை எதையும் தொடாமல் இருக்க முயற்சிக்க வேண்டும்.
5.சத்தான உணவு பொருட்களை உட்கொள்ள வேண்டும்.
மேற்சொன்ன அனைத்தும், பெருவாரியான மக்களுக்கு தெரிந்து விழிப்புணர்வு பெற்று உள்ளனர் இருந்தாலும் இந்த விஷயங்களில் ஓர் அலட்சியம் அனைவருக்குள்ளும் உள்ளது. அந்தஅலட்சியதத்தை விடுத்து அனைத்தையும் கடைபிடித்தால் தான் இந்த பெரும் தொற்றிலிருந்து நாம்வெளியேற இயலும்.
இறுதியாக இன்னொரு விஷயம் தடுப்பூசி, இதில் பெருவாரியானோருக்கு புரிதலோ, விழிப்புணர்வோ இல்லை என்றே சொல்லலாம். இதனை அரசும் முன்னின்று செய்திருக்க வேண்டும் ஆனால் செய்யவில்லை. இனிமேலாவது செய்யட்டும். இன்று கொரோனாவிலிருந்து மீண்ட நாடுகள்முக்கிய காரணியாக சொல்வதில் ஒன்று தடுப்பூசியும் தான்.
உலக சுகாதார அமைப்பு பொதுவாக தடுப்பூசிகளுக்காக சொல்லியுள்ள அனைத்து ஆய்வுகளையும்செய்து அதற்க்கான ஆய்வு சான்றுகளை சமர்ப்பித்து அதன்பிறகு ஒப்புதல் பெற்ற தடுப்பூசிகள் தான் இன்று மக்களுக்கு செலுத்தப்படுகின்றன. இதேபோல் ஆய்வு முடிவுகள் சமர்ப்பித்துநிராகரிக்கப்பட்ட நிகழ்வுகளும் இங்குள்ளன. ஏனெனில் அவைகள் முழுமையாக விதிகளுக்குட்பட்டுநிரூபணம் ஆகவில்லை என்பதால்.
பொதுவாக தடுப்பூசிகள், முதல்கட்ட சோதனையில் சிறு விலங்குகளை கொண்டும், அடுத்தகட்ட சோதனையில் சுமார் 20 நபர்களை கொண்டும், அடுத்தகட்ட சோதனையில் சில நூறு நபர்களை கொண்டும், அடுத்தகட்ட சோதனையில் சில ஆயிரம் நபர்களை கொண்டும் சோதனை செய்து, அதன் நோய் எதிர்ப்பு குணம், நோயிலிருந்து மீட்க்கும் வலிமை, குறுகிய கால பக்கவிளைவுகள் என அனைத்தையும் ஆராய்ந்து அவற்றின் முடிவுகளின் வழியே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இங்குஇறுதி சோதனை என்பது நீண்டகாலத்தில் ஏற்படும் பக்கவிளைவுகளை ஆராய்வது. இதற்க்கு சிலஆண்டுகள் பிடிக்கும் ஆனால் அதற்க்கான நேரமின்மையால் இந்த தடுப்பூசியை உடனடியாக அனைவருக்கும் கொடுக்க அனுமதி அளித்துள்ளனர்.
தடுப்பூசி என்றில்லை, நாம் இன்று எடுக்கும் ஒவ்வொரு மருந்தும் இந்த 4 கட்ட சோதனைக்கு பிறகு ஒப்புதல் அளிக்கப்பட்டதும், நமக்கே தெரியாமல் மருத்துவர்களின் மூலம் நமக்கு கொடுக்கப்பட்டு சில ஆண்டுகள் பக்கவிளைவுகள் இருக்கிறதா என ஆராய்ந்து, இருப்பின் அதனை சரி செய்துஅதன்பிறகு தான் அனைவருக்கும் கொடுப்பார்கள். ஆனால் அதற்கு குறைந்தபட்சம் 2 ஆண்டுகளும் அதிகபட்சமாக 10 ஆண்டுகளும் ஆகும் என்கிறார்கள் மருத்துவர்கள். இவ்வாறாக தான் இந்த மருத்துவம் வளர்ந்து வந்துள்ளது. நிகழ்காலத்தில் உள்ளவர்களின் வழி சோதனை செய்து எதிர்காலத்து மக்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் இந்த கொரோனா பெரும்தொற்று காலத்தில் இறுதி கட்ட சோதனை செய்து வெளியிடும் அளவிற்கு ஆண்டுக்கணக்கான காலம் இல்லாததால் நேரடியாக அனைவருக்கும் வழங்கக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. இதுபோன்ற பெரும் தொற்று காலத்தில் உயிர்களை காப்பாற்ற வேறு வழியில்லாத்தால் அனைவருக்கும் செலுத்த அனுமதித்துள்ளனர்.
இந்த தடுப்பூசி போட்டால் மரணம் வருகிறது என்ற சந்தேகம் உள்ளது. குறிப்பாக விவேக்கின் மரணம். இதில் சரிசம வாய்ப்புகள் இருக்கின்றன. மறுப்பதற்கில்லை. தடுப்பூசியினாலும் அவரது மரணம் ஏற்பட்டிருக்கலாம், இல்லாமல் வேறு காரணங்களாலும் ஏற்பட்டிருக்கலாம். அதே நேரத்தில் உலகம் முழுவதும் தடுப்பூசிகளால் இரத்த உரைதல் ஏற்பட்டு அதன் மூலம் உயிரிழப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. 10 லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டால் அதில் 116 நபர்களுக்கு இரத்தம் உரைதல் பிரச்சனை ஏற்படுவதாகவும் அதில் 3 பேர் இறப்பதாகவும் மருத்துவ புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
இது ஒரு இக்கட்டான போர்சூழல், இங்கு கேடயம் போல தடுப்பூசி இருக்கிறது. இன்று தட்டம்மைமுற்றிலுமாக ஒழிக்கப்பட்டதெனில் அதற்கு முக்கிய காரணம் தட்டம்மை தடுப்பு மருந்து தான், இதுவரை உலகளவில் தடுப்பு மருந்தால் அதிக அளவு மரணித்தவர்களும் தட்டம்மை தடுப்புமருந்தால் மரணித்தவர்கள் தான். ஆனால் அதனை சரிசெய்து இன்று முழுவதுமாக நாம் தட்டமை உயிரிழப்பு இல்லா சூழலை எட்டியுள்ளோம். அன்று அந்த தடுப்புமருந்தை மக்கள் போடாமல்இருந்திருந்தால் இன்றும் தட்டம்மை மரணத்தை நாம் எதிர் கொண்டு இருப்போம்.
அதேபோல் தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் கொரோனா வருவது ஓர் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஆம் தடுப்பூசி போட்டுகொண்டு நாம் முறையாக முக கவசம், கை கழுவுதல், சமூகஇடைவெளி போன்றவற்றை கடைபிடிக்கவில்லை எனில் கண்டிப்பாக கொரோனா வரும் தான், ஆனால் அவ்வாறு வந்தாலும் அதனால் ஏற்படும் உயிரிழப்பை இந்த தடுப்பூசி கட்டுப்படுத்தும் என்பதுமருத்துவர்களால் நிறுவப்பட்டுள்ளது.
அடுத்ததாக மாற்று மருத்துவம் என்று தடுப்பூசியை முற்றிலுமாக ஒதுக்கும் போக்கும் இன்றுள்ளது. மாற்றுமருத்துவத்தை எடுத்துக் கொள்ளுங்கள், அதன்வழி நோய் எதிர்ப்புசக்தியை கூட்டிகொள்ளுங்கள், ஆனால் அது உயிரிழப்பை தடுக்குமா என்றால் கண்டிப்பாக தடுக்காது, என்ற புரிதல் நமக்கு வேண்டும். இன்று நம்மிடம் இருக்கும் மாற்று மருத்துவம் என்பது “வருமுன் காப்பது” தான், ஒருவேளை வந்துவிட்டால் அதன் வழி உயிரிழப்புகளை காக்கும் மருத்துவம் இன்று இந்தகொரோனா சூழலில் இல்லை என்பது தான் உண்மை. இன்றும் மாற்றுமருத்துவம் என பேசும்அனைவரும் திடீரென உடலுக்கு ஏதாவது எனில் ஓடி செல்வது அலோபதி மருத்துவமனைக்கு தான் என்ற எளிய புரிதல் நம்மிடம் இருக்க வேண்டும்.
இது மாற்று மருத்துவதை எதிர்தரப்பில் வைத்து பேசும் சூழல் அல்ல. அறிவியல் துணைகொண்டு கொரோனாவை ஒழிக்கும் சூழல். பல்லாயிர ஆண்டாக நம்முடைய மனித சமூகம் முன்னோக்கி நகர்ந்ததை விட கடந்த 200 ஆண்டுகளில் நாம் அறிவியல் துணைகொண்டு செய்த பாய்ச்சல் அந்த பல்லாயிரம் ஆண்டு வாழ்வைகடந்த 200 ஆண்டுகளில் தாண்டிய பாய்ச்சல். அது அறிவியலால் தான் சாத்தியம் ஆகியது. அந்தஅறிவியல் தான் இன்று பல உயிர்காக்கும் சிகிச்சையையும், பல தடுப்பூசிகள் மூலம் பலநோய்களிலிருந்து நம்மை காத்து வருகிறது.
சமீபத்தில் ரஜினி அவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொண்டார், அவருக்கு பல உடல் பிரச்சனைகள் உள்ளது, அத்தனையையும் மீறி தடுப்பூசி எடுத்துக்கொண்டார். ஏன் அவரால் தனியாக வீட்டிலேயே இந்த தொற்று முடியும் வரை இருக்க இயலாதா, அவருக்கு அந்த வசதி வாய்ப்புகள் இல்லையா. இருக்கிறது இருந்தும் தடுப்பு ஊசி எடுத்துக்கொள்கிறார், தன் உடலில் இவ்வளவு பிரச்சனைகள் இருந்தும் அதனை மீறி அறிவியல் மீதுள்ள நம்பிக்கையால் எடுத்து கொள்கிறார், அதில் அவரது குடும்பத்தினர் மீதுள்ள அக்கறையும் உள்ளது. அதேபோல் அவரை நம்பி திரைப்பட தொழிலில் ஈடுபடும் தொழிலார்கள் மீதுள்ள அக்கறை. அவர் ஒரு படம் நடித்தால் அதன் பொருட்டு பல குடும்பங்களுக்கு வருமானம் கிட்டும். அந்த குடும்பங்களின் வருமானத்திற்கு ஏதோ வகையில்அவரால் ஆன ஒரு முன்னெடுப்பு இது.
இவையில்லாமல் இப்படி ஒரு பொது பிம்பம் தடுப்பூசி எடுத்துக்கொள்ளுதல் என்பது ஏனைய பொதுமக்களுக்கு ஒரு விழிப்புணர்வாக இருக்கும். இதே ரஜினி தான் தமிழக அரசின் போலியோ விளம்பர தூதராக இருந்து போலியோ தடுப்புமருந்தை பலர் எடுத்துக்கொள்ள உந்துதலாக இருந்தவர். விளைவு இன்று போலியோவை நாம் முற்றிலும் கட்டுப்படுத்தியுள்ளோம். அதற்கு ரஜினியும் பெரும்பங்காற்றினார். அதேபோல் தான் கொரோனாவிற்கு வாசலில் நின்று விளக்கேத்திய ரஜினி, தாளம் போட்ட ரஜினி, இன்று அரசு தடுப்பூசியை அறிமுகப்படுத்தியதும் முன்னின்று போட்டு கொள்கிறார்.
ரஜினி போட்டு கொண்டால் நாம் எதற்கு போட்டுக்கொள்ள வேண்டும் என்ற கேள்வி உடனடியாக தொக்கி நிற்கும், அவர்களுக்காக நம் வரலாற்றில் நம் தமிழ் மன்னர்களின் வாழ்க்கையில் ஒரு சிறுவாழ்வியலை சொன்னால் இன்னும் எளிமையாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு அரசனுக்கு மகன் பிறந்து அந்த மகனுக்கு 4 வயது ஆனதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக உணவில் நஞ்சை கலந்து கொடுத்து வருவார்களாம். அவ்வாறு கொடுக்கும் விசத்தினால் பல எதிர்வினைகளும் பக்கவிளைவுகளும் தொடர்ந்து அந்த குழந்தைக்கு ஏற்பட்டு கொண்டே இருக்குமாம், ஆயினும் அவற்றையும் மீறி விஷத்தை கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து கொண்டே வருவார்களாம், ஏனெனில் அந்த குழந்தைக்கோ அல்லது அது வளர்ந்து இளவரசனாகவானாலும் அரசனாகவோ இருந்தாலும் சிறுவயதிலிருந்தே எதிரி மற்றும் துரோகிகளால் கொள்ளப்படும் சூழலே மிகுந்து இருக்கும்.
அவ்வாறு கொள்வதற்கு முதன்மையாக பயன்படுத்தும் பொருள் விஷம். உணவில் விசம் வைத்து கொள்வது, விசம் தோய்ந்த கத்தி, அம்பு போன்றவற்றை கொண்டு கொள்வது, பாம்பு போன்ற விச ஜந்துக்கலால் ஏற்படும் உயிரிழப்பு என பெருவாரியாக விஷத்தினால் கொல்லப்படுவதை தடுக்க. அவர்கள் உடலில் 4 வயதிலிருந்து சிறுக சிறுக விஷத்தை தடுப்பு மருந்தாக கொடுத்து அந்த உடலை எந்த விஷமும் தாக்காமல் அதனை எதிர்த்து போராடி உயிரிழப்பிலிருந்து மீட்குமாம். அன்று அவர்கள் 4 வயதிலிருந்து விசத்திற்கு பழக்கவில்லை என்றால் இன்று வரலாற்றில் இருக்கும் பெரும் மன்னர்கள் வரலாறு படைப்பதற்கு முன்பே எதிரிகளால் கொள்ளப்பட்டிருப்பார்கள். அந்த விச தடுப்பு மருந்தின் இன்றைய வடிவம் தான் தடுப்பு ஊசி.
இன்றைய சூழலில் நாம் அனைவரும் உயிரோடிருத்தல் தான் மிக முக்கியமான விசயம், ஒரு உயிரிழப்பு வெறுமனே அந்த ஒரு தனி மனிதருடன் போவது அல்ல, அது அந்த குடும்பத்தை நிர்மூலமாக்கும், அவர்களை சார்ந்த மனிதர்களின் பொருளாதார வீழ்வை ஏற்படுத்தும். அதே போல் ஒட்டுமொத்தமாக பார்த்தால் நாட்டின் மனித வளம், உற்பத்தி, பொருளாதாரம் என அனைத்தையும் ஆட்டம் காண செய்திடும்.
பிறகும் உங்களுக்கு தடுப்பூசி மீது நம்பிக்கையில்லை எனில் உங்கள் மருத்துவரை சந்தித்து ஆலோசியுங்கள் அப்படியும் உங்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை எனில், அந்த நம்பிக்கையின்மையை அடுத்தவர்களிடம் கடத்தாதீர்கள், அதேபோல் உங்களை சார்ந்தை யாரும் இல்லை என்ற சூழலையும் அதனூடே ஏற்படுத்திடுங்கள்.
அதேபோல் பிற உடல் உபாதைகள் இருப்பவர்கள் மருத்துவரின் அறிவுறுத்தலை பெற்று தடுப்பூசியை எடுத்துக் கொள்ளுங்கள்.
அரசு சொல்வதை கேட்போம்! அதேபோல் தடப்போம்!! ஒற்றுமையாக கொரோனாவிலிருந்து மீள்வோம்!!!
குறிப்பு: இது கடந்த 2052ஆம் ஆண்டு புரட்டாசி மாதத்திற்கான திறவுகோல் மின்னிதழில் வெளிவந்த கட்டுரை.
—
நன்றி,
இரா. ராஜராஜன்,
மன்னார்குடி.