Home>>கலை>>Home மலையாள படம் விமர்சனம்
கலைதிரைத்துறை

Home மலையாள படம் விமர்சனம்

இந்திய ஒன்றிய திரை உலகத்திற்கு தொடர்ந்து நல்ல படங்களை வாரி வாரி வழங்கும் வற்றாத அமுதசுரபியாக திகழ்கிறது மலையாளத்திரையுலகம்.

10 படம் வந்தால் அதில் 5 படம் அமோகமா இருக்கு. 3 படம் நல்லா இருக்கு. மீதி இருக்கிற 2 படம் பார்க்கும் அளவுக்கு இருக்கு.

இந்த மொக்கை, குப்பை என்ற விமர்சனங்களை எல்லாம் அவர்கள் கேட்டு பல வருடம் ஆகுது போல,அந்த அளவுக்கு வாரா வாரம் ஆரவாரமா பல நல்ல படங்களை போட்டு தாக்கிக்கிட்டு இருகிறார்கள் மலையாள படைப்பாளர்கள்.

அந்த வரிசையில் ரோஜின் தாமஸ் இயக்கத்தில் ஓணம் பண்டிகை சிறப்பாக வெளிவந்து இருக்கும் ஒரு குடும்ப காவியம் தான் “HOME”.

படத்தின் பெயரே இது என்ன வகையறாவில் வரும் படம் என்பது தெரிந்து விடுகிறது.

குடும்ப உறவுகளின் அவசியம்,தொழில் நுட்பங்களை ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் அதே நேரத்தில் அதற்கு அடிமையாகி விடாமல் தேவையான அளவு பயன்படுத்துவதின்அவசியம், பெரும் சாதனையாளர்கள் மட்டுமே வாழ்வில் வெற்றி பெற்றவர் அல்ல அனைவருமே அவர் அவர்கள் வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில் வெற்றி பெற்றவர்கள் தான், ஒன்றுக்கும் ஆகாதவர்கள் என்று எவருமில்லை அவர்களால் பலன் பெற்று சாதனையாளர்களும் உருவாவது உண்டு, வாழ்வில் வெற்றி பெற்றவர்களை மட்டுமல்ல சக மனிதர்கள் ஒவ்வொருவரையும் மதிக்க வேண்டிய அவசியம், தொழில்நுட்பங்கள் மூலம் செயற்கையாக செலுத்தும் அன்பை விட நேரடியாக ஒருவர் மீது நேரடியாக காட்டும் அன்பே சிறந்தது, இப்படி மனித வாழ்க்கையை பண்படுத்தும் ஏகப்பட்ட கருத்துகளை வைத்து 2.45 மணி நேரத்திற்கு ஒரு family drama எடுத்துள்ளார்கள்..

இதை கேட்டவுடனே யாருக்கும் இந்த படத்தை பாக்கணும்ன்னு எண்ணமே வராது. இரண்டே முக்கால் மணி நேரம் மெகா சீரியல் மாதிரி ஒரே கருத்தா சொல்லி நம்மளை கொலையா கொல்ல போறானுங்கன்னு தான் எல்லாருக்கும் தோன்றும்.

ஆனா அங்க தான் இந்த மலையாள திரைத்துறையினர் நிமிர்ந்து நிற்கிறார்கள் தனித்துவமாக. அவ்வளவு இயல்பாகவும், நேர்த்தியாகவும் மிக யதார்த்தமாகவும், உணர்வுபூர்வமாகவும் அதே நேரத்தில் நகைச்சுவையாகவும் மிக சுவாரசியமாகவும் ஒரு உன்னதமான படத்தை வழங்கியுள்ளனர்.

படத்தின் முக்கிய கதாபாத்திரமாக இருக்கும் கதாநாயகனின் அப்பா கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் இந்திரன்ஸ் அவர்களின் நடிப்பு அற்புதம். படத்தின் உயிர் நாடியே அவர்தான்.

ஒவ்வொரு முறையும் தன் மகனால் அவர் அவமானப்படும் போதும், எத்தனை முறை தன்னை அவமானப்படுத்தினாலும் மகன் மீது காட்டும் பாசம் என நடிப்பில் உச்சத்தில் இருக்கார் படத்தில..

இந்த படத்திற்கு 2.40 நிமிடத்திற்கு திரைக்கதை எழுதுவது அதிலும் சுவாரசியமான திரைக்கதை எழுதுவது எல்லாம் அதீத திறமை.ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் மாதிரி வகையறா படங்களுக்கே இரண்டரை மணி நேரங்களுக்கு மேல் சுவரஸ்யமாக திரைக்கதை எழுதுவது கடினம். அதிலும் குடும்பப்படங்கள் என்றால் ரொம்பக்கடினம். ஆனால் அதில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளனர்.

ரசிகர்கள் இதுதான் நடக்கப்போகிறது என்று நினைக்கும் போதெல்லாம் அது நடக்காமல் எதிர்பாராத ஒரு இடத்தில் நடக்கும் ஒரு முக்கியம் விடயம் உள்ளது. எப்படி 96 படத்தில திரிஷா அந்த யமுனை ஆற்றிலே பாட்டை இப்ப பாடுவாரு இப்ப பாடுவார்ன்னு ரசிகர்கள் எதிர்பார்த்து கடைசியில் யாரும் எதிர்பார்க்காத ஒரு சூழலில் அந்த பாட்டை பாடுவார் அவ்வளவு அற்புதமாக இருக்கும் அதே போல இந்த படத்திலும் முக்கியமான காட்சி உள்ளது. அதேபோல யாரும் எதிர்பார்க்காத ஒரு சூழலில் வந்து பார்ப்பவர்களை கண் கலங்கவைத்து விடுகிறது..

ஒரு அழகான கவிதைக்கு முற்றுப்புள்ளி எவ்ளோ அவசியமோ, அதே போல தெளிந்த நீரோடை போல ஒரு அழகான கவிதை போல செல்லும் படத்தின் இறுதிக்காட்சி “அடிப்பொலி”.

ரொம்ப வருடங்களுக்கு முன்பு காதலுக்கு மரியாதை படத்தில் இறுதிக்காட்சி எந்த அளவுக்கு நம்மை நெகிழ வைத்ததோ, அதேபோல ஒரு அற்புதமான கிளைமாக்ஸ். கடைசி 15 நிமிடங்கள் இந்த படம் எவ்ளோ தரமென்று நமக்கு புரிய வைக்கிறது.

கலை என்பது சமூகத்தின் பிரதிபலிப்பு மட்டுமல்ல, சமூகத்தை சீர் செய்ய உதவும் ஒரு அற்புதமான கருவி என்பதை ஆழமாக உணர்த்தும் படம் இது. மனித மனங்களில் உள்ள உளவியல் பிரச்சனைகளை மிக அருமையாக அலசி ஆராய்ந்து அதற்கு தீர்வு என்ற பெயரில் நல்லதொரு உளவியல் சிகிச்சையை நமக்கு அளித்துள்ளது இந்த படம்.

படம் பார்த்து முடித்தவுடன் நிச்சயம் ஒரு நல்ல மனமாற்றம் பலருக்கு ஏற்பட வாய்ப்புண்டு Home effect.

திரை ரசிகர்கள் மட்டுமன்றி அனைவரும் வாழ்வில் ஒருமுறையாவது காண வேண்டிய ஒரு அற்புத காவியம் இந்த அழகிய இல்லம்.

“Home”


செந்தில் பக்கிரிசாமி,
மன்னார்குடி.

Leave a Reply