Home>>இந்தியா>>இந்திய அளவில் தஞ்சாவூர் கலைத்தட்டுக்கு கிடைத்த பெருமை.
இந்தியாகலைசெய்திகள்தஞ்சாவூர்தமிழ்நாடுமாவட்டங்கள்வரலாறு

இந்திய அளவில் தஞ்சாவூர் கலைத்தட்டுக்கு கிடைத்த பெருமை.

தஞ்சாவூர்: ஒன்றிய அரசு இணையதளம் மூலம் நடத்திய பொது வாக்கெடுப்பில், இந்திய ஒன்றியத்தின் சிறந்த கைவினைப் பொருளாக தஞ்சாவூர் கலைத் தட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தஞ்சாவூர் கைவினைக் கலைஞர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


கலையின் பிறப்பிடமான தஞ்சையின்‌ புகழை பறைசாற்றுவதில் தஞ்சாவூர் தட்டு அல்லது ஓவியத்தட்டு எனப்படும் கலைத்தட்டுக்கு சிறப்பிடம் உண்டு. அரசியல் மேடைகள் கல்லூரி விழாக்கள், பாராட்டு நிகழ்ச்சிகள் போன்ற இடங்களில் தஞ்சாவூர் கலை தட்டுகள் நினைவு பரிசாக வழங்கப்படுவது உண்டு.

ஒன்றிய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் சார்பில், இந்தியாவில் சிறந்த கைவினைப் பொருட்களை தேர்வு செய்வதற்காக கடந்த ஒரு மாத காலமாக பொது வாக்கெடுப்பை இணையதளம் மூலம் நடத்தியது. இந்தப் போட்டியில் இந்தியாவில் புவிசார் குறியீடு பதிவு பெற்ற 475 பொருட்கள் பங்கு பெற்றன. இதில், கைவினைப் பொருட்கள், விவசாயப் பொருட்கள், இயற்கைப் பொருட்கள், உற்பத்திப் பொருட்கள், உணவுப் பொருட்கள் என ஐந்து வகையான பொருட்கள் இடம்பெற்றது.

இதில் அதிக வாக்குகளைப் பெற்று கைவினை பொருளுக்கான பிரிவில் தஞ்சாவூர் கலைத்தட்டு முதலிடத்தை பெற்றுள்ளது. இதையடுத்து கைவினைப் பொருட்களுக்கான மேம்பாட்டு அமைச்சகத்திடம் அதற்கான ஒன்றிய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் கலைத்தட்டு என்பது ஓவியத்தட்டு எனவும் அலங்காரத்தட்டு எனவும் அழைக்கப்படுகிறது. இது செயற்கையான முறையில் வட்டமான தட்டு பரிசுப் பொருளாக உருவாக்கப்படுகிறது. இக்கைவினைத்திறன் வெள்ளி, பித்தளை, செம்பு போன்ற உலோகங்களினால், நடுவில் கடவுள்கள் அல்லது தேவர்களின் உருவங்களுடன் புடைப்புரு சித்திர வேலைப்பாடுகளுடன் செதுக்கப்படுகிறது.

மேலும் இக்கலை வேலைப்பாடு அறிவுசார் சொத்துரிமைகளின் வணிகம் தொடர்பான அம்சங்கள் குறித்த ஒப்பந்தத்தின் புவியியல் சார்ந்த குறியீடு பாதுகாப்பின் கீழ்ப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது இந்திய அரசாங்கத்தின் புவியியல் சார்ந்த குறியீடு சட்டம் 1999 இல் “தஞ்சாவூர் ஓவியத்தட்டு” (Thanjavur Art Plate) என 63வது பொருளாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. தஞ்சாவூர் வீணையைப் போலவே தஞ்சாவூர் கலைத்தட்டும் தஞ்சாவூரின் பெருமையை உணர்த்துகிறது.

தஞ்சாவூர் ஓவியத்தட்டு இரண்டாம் சரபோஜியினால் (1777–1832) தஞ்சாவூர் மராத்திய மன்னர் இரண்டாம் சரபோஜி ஆட்சிக்காலத்தில் தஞ்சாவூரில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இக்கலைப்பொருள் தஞ்சாவூர் விசுவகர்மா சமூகத்தினரால் செதுக்கப்பட்டது. இந்த பரம்பரைக் கலை அவர்களின் வாழ்வாதாரமாகவும் அமைகிறது. இது முதன்மையாக வீடுகளில் கைவினைஞர்களினால் உருவாக்கப்படுவதால், குடிசைக் கைத்தொழிலாக வரையறுக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் கலைத்தட்டு செய்ய அரக்கு, பித்தளைத்தகடு, செப்புத்தகடு, வெள்ளித்தகடு போன்றவை மூலப் பொருள்களாக அமைகின்றன.

600 ரூபாயில் இருந்து 22 ஆயிரம் வரைக்கும் தஞ்சாவூர் கலைத்தட்டு கிடைக்கிறது. 200 குடும்பங்கள் இத்தொழிலை குலத் தொழிலாக செய்து வந்திருந்த நிலையில் தற்போது வேலைக்கு ஏற்ற வருமானம் இல்லாததாலும் ஆட்கள் பற்றாக்குறையாலும் பத்து குடும்பங்கள் மட்டுமே செய்து வருகின்றனர்.

வெளிமார்க்கெட்டில் விலை அதிகமிருந்தாலும், தயாரிக்கும் கலைஞர்களுக்குக் கிடைக்கும் கூலி என்னவோ குறைவு தான். ஒரு தட்டுக்கு 50 ரூபாய் கூலி. ஒரு நாளைக்கு 2 தட்டுக்கள் செய்ய முடியும். ஒரு அற்புதமான கலையை கட்டிக்காப்பாற்றும் கலைஞனுக்குக் கிடைக்கும் அதிகப்பட்ச கூலி 100 ரூபாய் தான்.

அரசர்கள் பொன்னும் பொருளும் அள்ளிக்கொடுத்து காப்பாற்றிய கலை, வேலை செய்ய ஆட்கள் இல்லாததால் இத்தொழில் நலிந்து போக வாய்ப்புள்ளது என தொழிலாளர்கள் கூறுகின்றனர். மேலும் இது குறித்து அவர்கள் கூறுகையில் கலை தட்டு செய்யும் தொழிலாளர்கள் இது குறித்து கூறுகையில், “இதை வாங்க அதிக பேர் முன்வருகிறார்கள். ஆனால் இது நுணுக்கமான வேலை என்பதால் இத்தொழிலை செய்ய யாரும் முன்வர மறுக்கிறார்கள். ஆட்கள் பற்றாகுறையால், வரும் ஆர்டர்களை செய்யமுடியாமல் போகிறது”என்கிறார்கள்.

இந்த நிலையில் இந்த கலைத்தட்டுக்கு இந்திய ஒன்றிய அளவில் அங்கீகாரம் கிடைத்திருப்பது பெருமைக்குரிய விடயமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மாநில அரசு இந்த கலைத்தட்டை உற்பத்தியை ஊக்குவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது அந்த கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவும்.


செய்தி சேகரிப்பு,
திரு. ஆனந்த் ரெய்னா.
கற்பகநாதர்குளம்.

Leave a Reply