Home>>அரசியல்>>அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழிற்படிப்புகளில் 7.5 விழுக்காடு ஒதுக்கீடு
அரசியல்கல்விசெய்திகள்தமிழ்நாடு

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழிற்படிப்புகளில் 7.5 விழுக்காடு ஒதுக்கீடு

“அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழிற்படிப்புகளில் 7.5 விழுக்காடு ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருப்பது வரவேற்கதக்கது” என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் மற்றும் பண்ருட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு. வேல்முருகன் அவர்கள் தன்னுடைய கருத்தை சமூக ஊடக பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார். அதை தங்களுக்கு கீழே பகிர்ந்துள்ளோம்.


மாண்மிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மனமார்ந்த பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

கற்றலும், கற்பித்தலுமே உலகின் எல்லா வளர்ச்சிக்கும் காரணமாக இருந்து வந்திருக்கிறது. மனிதகுலத்தின் வளர்ச்சியையும் வளர்ச்சிப்பாதையையும் தீர்மானிப்பது கல்விதான். ஆனால், கல்வியையும் ஒரு வியாபாரப்பொருளாக மாற்றிவிட்டிருக்கிற இச்சூழலில், கல்வியை யார் கற்பிக்கவேண்டும், யாருக்கு கற்பிக்கவேண்டும் என்பதையெல்லாம் பணமே தீர்மானிக்கிற அவல நிலைதான் தற்போது வரை நீடித்து வருகிறது.

இதன் காரணமாகவே, கடந்த ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களின் விழுக்காடு குறைவான அளவே இருக்கிறது.

இந்த நிலையில் தான், தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் உள்ளிட்ட தொழில் கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை அளவை ஆய்வு செய்து உரிய பரிந்துரைகளை வழங்க முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையில் ஆணையம் ஒன்றை தமிழ்நாடு அரசு அமைத்திருந்தது.

இந்தக்குழு வழங்கியுள்ள அறிக்கையில் பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம்,சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்கள் நான்கு விழுக்காடு அளவிற்கே சேருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தொழிற் படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் ஆணையம் பரிந்துரைத்திருந்தது.

முன்னாள் நீதிபதி முருகேசன் ஆணையத்தின் இந்த பரிந்துரையை ஏற்று, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தொழிற்படிப்புகளில் 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு இன்று தாக்கல் செய்துள்ளது வரவேற்கதக்கது பாராட்டுக்குரியது.

தமிழ்நாடு அரசின் இத்தகைய நடவடிக்கையின் வாயிலாக, ஏழை, எளிய, நடுத்தர மற்றும் கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் தொழிற்கல்வி பயிலும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், விவசாயிகளின் பிள்ளைகளும், நெசவுத்தொழிலாளர்களின் பிள்ளைகளும், துப்புரவு பணியாளர்களின் பிள்ளைகளும், தொழிற்கல்வியை கற்கும் வாய்ப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏற்படுத்திக்கொடுத்துள்ளார்.

தமிழ்நாடு சமூகநீதிக்கான மண் என்பதையும் மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். எனவே, தொழிற்கல்வியில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் சட்ட மசோதாவை தாக்கல் செய்துள்ள தமிழ்நாடு அரசு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி, அச்சட்ட மசோதாவை நடைமுறைக்கு கொண்டு வர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழிற்படிப்புகளில் 7.5 விழுக்காடு ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ள மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மீண்டும் பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

Leave a Reply