Home>>கட்டுரைகள்>>‘குடும்பம்’ எனும் மெய்யான கோவிலைக் கண்போல் கட்டிக்காக்க வேண்டும்.
கட்டுரைகள்செய்திகள்தமிழர்கள்தமிழ்நாடுதொன்மைவரலாறு

‘குடும்பம்’ எனும் மெய்யான கோவிலைக் கண்போல் கட்டிக்காக்க வேண்டும்.

மேலை ஐரோப்பிய நாடுகளில் ஓரிரு தேசிய இனங்கள் உண்டு. ‘ஒன்றிய மன்னராட்சி’ (United Kingdom) எனும் பிரித்தானியாவிற்குள் இருக்கும் இங்கிலாந்து, வேல்சுஸ், (ஸ்)காட்டுலாந்து, வடக்கு அயர்லாந்து ஆகியனவும்கூடத் தனித்தனித் தேசிய இனங்களாகத்தான் இருக்கின்றன. இந்தத் தேசிய இனங்கள் வாக்கெடுப்பின் ஊடாகத் தனித்தனி நாடுகளாகப் போக விரும்பினால், அதனைத் தடுப்பாரில்லை.

ஆனால், அமெரிக்காவின் கதை வேறு. ஐரோப்பாவிலிருந்து சென்று குடியேறிய வெவ்வேறு நாட்டு வெள்ளையர்கள் அங்கு தனித்தனிக் குடியேற்றங்களை அமைத்தனர். வெவ்வேறு வெள்ளைரின் பதின்மூன்று குடியேற்ற பகுதிகளெல்லாம் பிரித்தானியாவை எதிர்த்து நடத்திய ஒரு புரட்சிப் போரின் வாயிலாக ஒன்றிணைத்து அமைத்த கூட்டரசுதான் ‘அமெரிக்க ஒன்றிய அரசுகள்’ (United States of America).

அமெரிக்காவின் மூலக்குடிகளாயிருந்த செவ்விந்தியர்களை ஈவிறக்கமின்றிக் கொத்துக்கொத்தாகக் கொன்று வெறியாடிய பிறகு அவர்களின் மண்ணைப் பறித்து அவர்களை நாடற்றவர்களாக ஆக்கிய பிறகு கட்டமைக்கப்பட்டதுதான் ‘அமெரிக்க ஒன்றிய அரசுகள்’ எனும் குடியேறி வல்லரசு.
ஆப்பிரிக்க நாடுகளுக்குள் வலிய புகுந்து அங்கிருந்த கருப்பரைப் பிடித்துச் சென்று அடிமைகளாக விற்றதால் கருப்பரின் எண்ணிக்கையும் அமெரிக்காவில் பெருகியது. கருப்பர் அடிமைகளின் உழைப்பை ஈவிரக்கமின்றி கொடிய வகையில் சுரண்டிக் கொழுத்ததுடன் தீவிர நிறவெறி பாராட்டியதால் கருப்பரின் கலகங்கள் பல மூண்டன.

இவ்வாறு தோற்றுவிக்கப்பட்ட பலபட்டறை அரசான அமெரிக்காவைத் ‘தேசம்’ என்னும் வரையறைக்குள் அடக்கவியலாது. ஆங்கிலம் எனும் பொதுமொழியைத் தவிர்த்துத் ‘தேசம்’ என்பதற்கான இலக்கணம் அதற்கில்லை. அஃது ஒரு வல்லரசு மட்டுமாகும். அமெரிக்காவில் குவிந்த பல்வேறு தேசிய இனங்களெல்லாம் இரண்டறக் கலந்து ஒரு புதிய தேசிய இனம் அங்குத் தோன்றவில்லை.

பிரித்தானியாவின் பிடியிலிருந்து விடுபடுவதற்கு அங்கு ‘அமெரிக்கப் புரட்சி’ (1775-1783 வரை) நடந்தது. அமெரிக்காவெனும் வல்லரசு அமைந்தபின் கடந்த 247 ஆண்டுக் காலத்தில் (அதாவது, 1776 முதல் 2023 வரையில்) 225 போர்களை அது தொடுத்தது. போர் இன்றி அமெரிக்க வல்லரசால் இருக்கவியலாது. அதன் உயிர்மூச்சே கொலைவெறிப் போர்தான்.

அமெரிக்கக் குடியேற்றங்களில் கொடிய நிறவெறி தலைவிரித்தாடிய காலம் போய், கருப்பருக்கும்கூட ஏட்டளவில் விடுதலையும் குடியுரிமையும் கிட்டியபோதும் அங்கு நிறவெறி கரந்துறையத்தான் செய்கிறது.

கருப்பு அமெரிக்கரிடம் ‘குடும்பம்’ எனும் அடிப்படை குமுக அலகு ஒழிந்துவிட்டது. இன்றுள்ள கருப்பு அமெரிக்கப் பெண்களில் பெரும்பாலோர் ‘திருமணம்’ எனும் குடும்பப் பிணைப்பை இழந்துவிட்டனர். திருமணம் செய்து கொள்ளாமலேயே பத்து பதினைந்து அகவைக்குள்ளேயே பிள்ளைப் பெற்று திருமணமாகா தனிப் பெண்டிராக அவர்களில் பெரும்பாலோர் இருக்கின்றனர்.

‘நிறவெறி எதிர்ப்பு’ எனும் போக்குப் பிறழ்ந்ததால் வந்த ‘வோக்’ (Woke) எனும் தறிகெட்ட பண்பாடு வெள்ளை அமெரிக்க இளைஞரிடமும் பரவியது.

வெள்ளையரின் குடும்பப் பிணைப்பை ஒரு காலத்தில் கிறித்துவத் திருச்சபைக் கட்டிக்காத்தது. இன்று அது குலைந்துவிட்டது. வரன்முறையற்ற காமம் எனும் விலங்குநிலைக்கு தள்ளப்பட்டு ஆண் ஆணை மணப்பது, பெண்ணைப் பெண் மணப்பது, குடும்பத்திற்குள் தகாப் புணர்ச்சி என்பவற்றையே ஒழுக்கங்களாக் கொண்டு ‘தாங்கள் LGBTQ (Lesbian-Gay-Bisexual-Transesxual-Queer) நெறியினர்’ என்று தம்பட்டமடித்துக் கூத்தடித்து கும்மாளமிட்டு ‘வானவில்’ கொடியை ஏந்தி ஆணும் பெண்ணும் அலங்கோலமாய் ஊர்க்கோலம் போவதே இன்றைய அமெரிக்க நடப்பு. அத்திருக்கு நெறிக்கு அமெரிக்க வல்லரசு சட்ட ஒப்புதல் தந்துள்ளது.

போதாமைக்கு, அத்திருக்குநெறியைப் பிற நாடுகளும் கடைபிடிக்க வேண்டும் என்று வேறு அது கட்டாயப்படுத்துகிறது. அமெரிக்காவின் கொத்தடிமை நாடுகளான மேலை ஐரோப்பிய நாடுகளிலும் அத்திருக்குநெறி பரவிவிட்டது.

ஒருமண உறவை வலியுறுத்திய கிறித்துவத்தைத் தூக்கியெறிந்துவிட்டதால், ‘சாத்தான்’ வழிபாடும் அதன் கமுக்கமான சிறார் நரபலிச் சடங்குகளும் அமெரிக்காவிலும் மேலை ஐரோப்பாவிலும் ஆத்திரேலியாவிலும் பரவி வருகின்றன. கிருத்துவரின் கல்லறைத் திருநாளுக்கு (All Souls’Day) முந்திய நாளான அக்தோபர் 31 அன்று சாத்தான் வழிபாட்டை நடத்த அவிழ்த்துப் போட்டு குடித்து காமக்கூத்தாடும் ‘ஹால்லோவீன்’ (Halloween) எனும் பெயரில் ஒரு பெருவிழாவை அவர்கள் எடுத்துவருகின்றனர்.

யோர்தான் நாட்டுச் சாக்கடலின் கீழ்ப்புறத்திலிருந்ததாகச் சொல்லப்படும் சோதோம், கொமோரா ஆகிய நகரங்களிலிருந்த யூதர்கள் ஒரு காலத்தில் தறிக்கெட்டு நெறிக்கெட்டுப் போனபோது, ‘யூதர்களின் ஆண்டவர்’ நெருப்பு மழை பொழிந்து அந்நகரங்களை அழித்ததாகக் கிறித்துவரின் விவிலியம் சொல்கிறது. அமெரிக்கா அதுபோன்ற சோதோமாகவும் கொமோராவாகவும் ஆகிவிட்டது.
‘குடும்பம்’ எனும் அடிப்படை குமுகக் கட்டுமானத்தை இல்லாது செய்ததுதான் அமெரிக்க வாழ்வியலின் இன்றைய இச்சீரழிவிற்கான மூலக்காரணம்.

ஆயினும், ‘கீழை வேதியக் கிறித்துவத் திருச்சவை’ (Eastern Orthodox Christian Church) கோலோச்சும் உருசியாவும் பிற கீழை ஐரோப்பிய நாடுகளும் இசுலாமிய நாடுகளும்; மதங்களின் பிடிப்பு அவ்வளவாயிராத சீனமும் பிற கீழை ஆசிய நாடுகளும் ‘குடும்பம்’ எனும் அடிப்படை குமுகக் கட்டுமானத்தைக் கெடாது விடாது கட்டிக்காத்து வருகின்றன.

இந்தப் போக்குகளையெல்லாம் கண்ணுற்று வரும் தமிழரினம், தமிழரின் வாழ்வியல் அதுபோல் தறிகெட்டுப் போகாமல் தடுப்பதற்குக் ‘குடும்பம்’ எனும் மூலக்கூறைக் குலையாமல் கட்டிக்காக்க வேண்டும். ‘திருமணமே கூடாது’ என்றும், அல்லிராணிப் ‘பெண்ணியம்’ என்றும், ‘கற்பொழுக்கமே கூடாது’ என்றும், ‘கண்டவனுக்குப் பாய் விரிக்கும் உரிமை வேண்டும்’ என்றும் கூறிய இராமசாமி நாயக்கனின் ‘திராவிட’ ஒழுகலாறும்; ‘குடும்பமும் வேண்டாம், நாடும் வேண்டாம்’ என்று ஓலமிட்டு வரும் ‘பின்புத்தியர்’ (Post-Modernists), டிராட்சுக்கியர் முதலிய உலகநம்பிகளின் (‘Globalists’) தறிகெட்ட நெறிகெட்ட போக்குகளும் தமிழரில் இளைஞரைக் கெடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

முதல் நாகரிகத்தைக் கண்ட தமிழரினம் ‘குடும்பம்’ எனும் மெய்யான கோவிலைக் கண்போல் கட்டிக்காக்க முனைந்து நிற்க வேண்டும்.


ஐயா. குணா,
தமிழ் வரலாற்று ஆய்வாளர்.

Leave a Reply