Home>>அரசியல்>>தொடரும் “நீட்” பலிகள்

மருத்துவப்படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெற உள்ள நிலையில், சேலம் மாவட்டம் மேட்டூரில் நீட் தேர்வுக்கு அஞ்சி விவசாயி மகன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்று காரணத்தால் தள்ளி வைக்கப்பட்ட நீட் தேர்வு தற்போது (செப் 12) நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 1.10 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதுகின்றனர். தமிழ் மொழியில் முதல் முறையாக நீட் தேர்வு நடைபெறுகிறது.

இந்நிலையில் மேட்டூர் அருகே உள்ள கூளையூரை சேர்ந்த சிவக்குமார் இவரது இரண்டாவது மகன் தனுஷ் (19) மேட்டூரில் உள்ள தனியார் பள்ளியில் 2019-ம் ஆண்டு +2 முடித்தார். பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்திருந்த நிலையில் மருத்துவராக வேண்டும் என்ற கனவில் இரண்டு முறை நீட் தேர்வு எழுதியுள்ளார்.

இதனையடுத்து 3வது முறையாக இன்று நீட் தேர்வு எழுத இருந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளார். நீட் தேர்வு பயம் காரணமாகவே தனது மகன் தற்கொலை செய்துகொண்டதாக தந்தை சிவக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

நீட் தேர்வு குறித்து பல எதிர்மறையான கருத்துக்கள் வந்த நிலையில் தற்போது மேலும் ஒரு மாணவன் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் நீட் தேர்வு பகிரங்கமாக அனுமதிக்கப்பட்டு அதனால் அனிதா உட்பட பல மாணவச் செல்வங்களின் மருத்துவக்கனவுகள் தவிடு பொடியாகி அதன் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படும் அவலங்கள் தொடர்கதையாக இருந்தன.

ஏழை எளிய மக்கள் மருத்துவராக ஆகிவிடகூடாது என்ற கொடூர எண்ணத்தில் மத்தியில் ஆளும் பா.ச.க இந்த நீட் தேர்வை அமலப்படுத்தி ஒவ்வொரு வருடமும் நடத்திக் கொண்டு இருக்கிறது. அதற்கு அதன் கூட்டணி கட்சியாக இருந்த அதிமுக முழு ஒத்துழைப்பு கொடுத்தது.

இதற்கிடையில் தமிழக மக்கள் அனைவரும் நீட் தேர்வில் மீது கடும் வெறுப்பில் இருந்ததை அறிந்த திமுக 2021 சட்டமன்றதேர்தல் நேத்தில் வாக்குகளை அறுவடை செய்யும் நோக்கில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் நீட் தேர்வை நீக்குவோம் என்று ஆணித்தரமாக வாக்குறுதி கொடுத்து ஆட்சியைப் பிடித்தனர். ஆட்சிக்கு வந்தால் முதல் சட்டமன்ற தொடரிலேயே நீட்டுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதியும் கொடுத்திருந்தனர்.

ஆனால் இந்த வாக்குறுதிகள் அனைத்தும் செயல்படுத்த முடியாமல் கடந்த ஆட்சியில் நடந்த அதே தவற்றை மீண்டும் செய்கிறார்கள். இதன் மூலம் எப்படியும் இந்த ஆண்டு நீட் தேர்வு இருக்காது என்ற பொய்யான நம்பிக்கையை மாணவர்கள் மத்தியில் விதைத்து அவர்களின் மருத்துவக்கனவை தவிடுபொடியாக்கி இருக்கிறது ஆளும் திமுக அரசு. இதனால் இந்த ஆட்சியிலும் “நீட் பலிகள்” தொடரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் நீட் தேர்வு குறித்து மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது என்றும், நாளை சட்ட மன்றக்கூட்டத்தில் நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு தீர்மானம் முதலமைச்சர் நிறைவேற்ற உள்ளதாகவும் அமைச்சர் சுப்பிரமணியன் இன்று காலை அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தீர்மானத்தை இவ்ளோ காலதாமதமாக செய்யவேண்டியதன் அவசியம் என்ன?? தேர்வு நடைபெறுவதற்கு முன்பே போதுமான அவகாசம் இருந்தும் இந்த தீர்மானத்தை காலம் தாழ்த்தி, தேர்வு முடிந்தபின் செய்ய வேண்டியதன் உள்நோக்கம் என்னவென்று புரியவில்லை.

இனியும் மக்களை ஏமாற்றாமல் நீட் விலக்கின் உண்மைத்தன்மையை மக்களுக்கு விளக்க வேண்டும். நீட் தேர்வு என்பது நீக்கப்பட வாய்ப்பு உள்ளதா இல்லையா என்பதை தெள்ளத் தெளிவாக உணர்த்த வேண்டும்.

அப்படி நீட் தேர்வு தற்போதைக்கு நீக்க முடியாத சூழல் இருக்குமேயாயின், அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ படிப்புக்கான இட ஒதுக்கீடு முன்னுரிமை வழங்க வேண்டும் கடந்த ஆட்சியில் 7.5% அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதனால் 300க்கும் மேற்பட்ட ஏழை மாணவர்கள் பயன்பெற்றனர். அதை இன்னும் மேம்படுத்தி நீட் விலக்கு கிடைக்கும் வரை, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களையும் இணைத்து 20% ஆக இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்.

வெற்று வாக்குறுதிகளை கூறி மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடாமல் அவர்களின் மருத்துவக்கனவிற்கு வழிவகை செய்தால் நிச்சயம் சிறப்பாக இருக்கும்.


மன்னை செந்தில் பக்கிரிசாமி.

Leave a Reply