Home>>இந்தியா>>இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இரும்புக் காலத்திற்குள் புகுந்திருக்க வேண்டும்.
தமிழ் அறிஞர் குணா
இந்தியாகட்டுரைகள்செய்திகள்தமிழ்நாடுவரலாறு

இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இரும்புக் காலத்திற்குள் புகுந்திருக்க வேண்டும்.

இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இரும்புக் காலத்திற்குள் புகுந்திருக்க வேண்டும் என்பது என்னுடைய கணிப்பு. இஃது ஒரு துணிபு (Hypothesis)தான். காலம் அதை மெய்ப்பிக்கும் என்பது என் கூற்று.

இற்றைக்கு 6,000-7,000 ஆண்டுகளுக்கு முன்னரே சீனத்தின் ‘யாங்சி’ ஆற்றுப்பள்ளத்தாக்கில் நெல் விளைவிக்கப்பட்டது. (Ancient China’s Technology and Science, Compiled by the Institute of the History of Natural Science, Chinese Academy of Sciences, Foreign Languages Press, Beijing, 1983, p 292.) இரும்புக்கொழு இன்றி நெல் வெள்ளாண்மை செய்திருக்கவியலாது.

‘சாங்’ அரசக்குடியின் (Shang Dynasty கி. மு. 1600-கி. மு. 1046) காலத்திலேயே இரும்புக் கருவிகள் சீனத்தில் புழக்கத்தில் இருந்தன. இரும்புக் கனியமிருந்த 3,650 மலைகள் அன்றே அடையாளம் காணப்பட்டிருந்தன. சீனத்தின் சான்டாங் (Shandong) மாகாணத்தின் ‘லின்சி’ (Linzi) மாவட்டத்தில் 100,000 சதுர அடியளவு பரப்பில் அன்றே இரும்பு உருக்கப்பட்டது. ‘சாங்’ அரசக்குடியின் காலத்தில் எலும்பின் மீதும் ஆமையோட்டின் மீதும் எழுதப்பட்டவற்றில் ‘அரிசி’ (Dao), ‘திணை அல்லது சாமை’ (Ji), ‘கோதுமை’ Mai), ‘வாற்கோதுமை’ (Lai) ஆகிய உணவுப்பயிர்களின் பெயர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. (ibid, p 292.)

இளவேனில்-இலையுதிர் ஆண்டுக்குறிப்புகளின் கால (The Period of Spring and Autumnal Annals 722 BC-481 BC) இறுதியில் சீனத்திலிருந்த ‘வூ’ எனும் நாட்டில் வார்ப்பிரும்பு செய்யப்பட்டது. அதே காலத்தின் இடைநிலையில் ‘சீ’ எனும் நாட்டில் உழவுக் கருவிகள் இரும்பால் வடிக்கப்பட்டன. ‘போரிடும் அரசர்களின் காலத்’தில் (The Period of Warring States 480 BC-404 BC) ஏர்க்கொழுவும் கொத்தும் மண்வெட்டியும் அரிவாளும் உளியும் கோடரியும் வெட்டுக்கத்தியும் சம்மட்டியும் இரும்பால் செய்யப்பட்டன. (An Outline History of China, ed: Bai Shouyi, Foreign Languages Press, Beijing, 1982,p 102.)

கி. மு. 6,000-7,000 ஆண்டுகளிலேயே சீனர்கள் இரும்புக்காலத்தைக் கண்டனர் என்றால், தமிழரின் இரும்புக்காலம் அதைவிடப் பிந்தியதாக இருக்குமோ? இருக்காது; ஒருகாலும் இருக்காது.

மாழையியலில் துறைபோன வில்லியம் கௌலாந்து (William Gowland 1842-1922) என்பார் ‘எகிப்து, மேற்காசியா, ஐரோப்பா முதலிய இடங்களில் இரும்புக்காலம் தோன்றுவதற்குமுன் செம்புக் காலமோ வெண்கலக் காலமோ அந்த இரும்புக்காலத்தின் முன்னோடிகளாயிருந்தது என்பது உண்மைதான்; ஆனால், தென்னிந்தியாவிற்கு இது பொருந்தாது; இரும்புக்காலத்திற்குமுன் செம்புக் காலமோ வெண்கலக் காலமோ தென்னிந்தியாவில் இல்லையென்பது தெளிவாகத் தெரிகிறது’ என்று ஆணி அறைந்தாற்போல் சொல்கிறார். (In other parts of the world, as Egypt, Western Asia, and Europe, generally a Copper or Bronze Age had preceded the Iron Age, but the existence of such an era in Southern India has yet to lie proven. Bronze, brass, and copper implements and ornaments have indeed been found in a few instances, but apparently none as yet under circumstances showing distinctly that they preceded the Iron Age.”- William Gowland, Metals in Antiquity,The Huxley Memorial Lecture for, 1912, Royal Anthropological Institute of Great Britain and Ireland, London, pp 282-83.)

அமெரிக்காவின் 31ஆவது குடியரசுத் தலைவரான எர்பர்ட் ஊவர் (Herbert Hoover 1874-1964) சுரங்க மாழைப் பொறியியல் வல்லுநர். அக்ரிகோலா (Agricola) என்பவர் கி. பி. 16ஆம் நூற்றாண்டில் இலத்தீன் மொழியில் எழுதிய ‘டெ ரெ மெட்டாலிக்கா’ (De Re Metallica) என்னும் நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த இவர், இரும்புக்காலம் வெண்கலக் காலத்திற்கு முந்தியதாயிருக்க வேண்டுமெனக் கருத்துரைத்தார். “He considered that the Iron Age either fully overlapped the Bronze Age or, even more likely, may have preceded it.”- Oleg D. Sherby and Jeffrey Wadsworth, Ancient Blacksmiths,the Iron Age, Damascus Steels, and Modern Metallurgy, https://e-reports-ext.llnl.gov/pdf/238547.pdf)

இற்றைக்கு 300,000 ஆண்டுகளுக்கும் 40,000 ஆண்டுகளுக்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த நியண்டர்தால் (Neanderthal) மாந்தர்க்கு இரும்புக் கனியத்திலிருந்து இரும்பைப் பிரித்தெடுக்க தெரிந்திருந்தது என்று ஓலெக் டி. செர்பி, வாட்சுவொர்த் (Oleg D. Sherby and Jeffrey Wadsworth) எனும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். (“Contemporary metallurgists and blacksmiths who have made wrought iron, often consider that such a product could have been made going back to the era of Neanderthal man who dominated the European and African scene from 300,000 to 40,000 years ago.”- ibid.)

இவற்றையெல்லாம் வைத்துத்தான் தமிழர்கள் செம்புக் காலத்திற்கும் வெண்கலக் காலத்திற்கும் முன்பே புதிய கற்காலத்திலிருந்து நேரடியாக இரும்புக்காலத்திற்குச் சென்றுவிட்டனர் என்று ‘எண்ணியம்’ எனும் நூலில் நான் விரிவாக வழக்குரைத்தேன்.

தமிழ் கற்கும் தலைமுறை அருகிவரும் காலமாயினும், தமிழ்நாட்டில் நடைபெறும் புதிய புதிய அகழ்வாய்வுகள் இற்றைக்கு 20,000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இரும்புக்காலத்தில் வாழ்ந்தனர் என்பதை ஒருநாள் காட்டத்தான் போகின்றன. ஒண்கதிரைக் கருந்திரை கொண்டு மறைக்க பார்க்கும் தமிழரின் இனப்பகையின் வேண்டா முயற்சிகள் கானல் நீராகத்தான் போகப் போகின்றன.


கட்டுரை:
தமிழ் அறிஞர் குணா

Leave a Reply