Home>>செய்திகள்>>கூட்டுறவு வங்கிகளில் முறைகேடு: உரிய விசாரணை நடத்த வேண்டும்.
செய்திகள்தமிழ்நாடு

கூட்டுறவு வங்கிகளில் முறைகேடு: உரிய விசாரணை நடத்த வேண்டும்.

தி. வேல்முருகன்கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடனில் நடை பெற்றுள்ள முறைகேடுகள் குறித்து தமிழ்நாடு அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மாண்புமிகு முதல்வர் அவர்கள், 5 சவரன் வரை, கூட்டுறவு வங்கிகளில் பெற்ற நகைக்கடன்களை தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தார். இது தொடர்பாக நிலுவை விபரங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த அதிமுக ஆட்சியில் கூட்டுறவு வங்கிகளில் அரங்கேறியுள்ள மோசடிகளும், முறைகேடுகளும், கூட்டுறவு பதிவாளர் அவர்கள் வெளியிட்டுள்ள கடிதத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது. அதாவது, போலி நகைகள், தரம் குறைந்த நகைகளை அடமானம் வைத்து மோசடி செய்ததும், நகையே கொடுக்காமல் நகையை அடமானம் வைத்தது போல் கணக்கு காட்டி பல கோடி ரூபாய் கடன்பெற்றும், வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

குறிப்பாக, திருப்பத்தூரில் ஒரே ஆதார் எண்ணை பயன்படுத்தி 3.5 கிலோ தங்க நகைகளை அடமானம் வைத்ததாக ரூ.74 லட்சம் கடன் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டை களை பயன்படுத்தி ரூ.70 லட்சம் நகை மோசடி நடந்துள்ளது.
சிவகங்கை மத்திய கூட்டுறவு வங்கியில் ஒரே நபர் 2.8 கிலோ நகைகளை அடகு வைத்து ரூ.85 லட்சம் கடன் பெற்றுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, ரூ.2 கோடியே 3 லட்சத்து 98 ஆயிரம் மதிப்பிலான 261 நகை பொட்டலங்கள் மாயமாகிவிட்டது. இவ்விவகாரம் தொடர்பாக வங்கி தலைவர் முருகேச பாண்டியன் பதவி நீக்கம் செய்யப்பட்டதோடு, கூட்டுறவு சார் பதிவாளர், செயலாளர், துணை செயலாளர் ஆகிய 3 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இது போன்று, திருவண்ணாமலை, விழுப்புரம், தேனி, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட அளவில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் முறைகேடுகள் அரங்கேறியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. தற்போது அதிகாரிகள் நடத்தி வரும் ஆய்வால், நாள்தோறும் கூட்டுறவு சங்க மோசடிகள் வெளி வந்த வண்ணம் உள்ளன.

மேலும், பயிர்க் கடன்கள் வழங்கப் பட்டதில் 25,733 கடன்களில் 2393 கோடி ரூபாய் தவறாக வழங்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் சட்ட மன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த மோசடி மற்றும் முறைகேடுகள், கடந்த அதிமுக ஆட்சியாளர்கள் மற்றும் அதிமுக பிரமுகர்களின் துணையோடு தான் நடந்திருப்பதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி சந்தேகிக்கிறது.

எனவே, கடந்த அதிமுக ஆட்சியில் கூட்டுறவு வங்கிகளில் அரங்கேறியுள்ள முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.


திரு. தி. வேல்முருகன்,
பண்ருட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர்,
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்.

Leave a Reply