Home>>செய்திகள்>>அடிப்படை வசதிகளே இல்லாமல் இயங்கிவரும் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி!
தமிழ்நாடு சட்டமன்றம்
செய்திகள்தமிழ்நாடுமருத்துவம்

அடிப்படை வசதிகளே இல்லாமல் இயங்கிவரும் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி!

மூன்றாமாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளநிலையில் அரியலூர் மாவட்டத்தில் புதிதாக தொடங்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரியானது எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் இன்னமும் இயங்கிவருவதுகுறித்து முதல்வர் தனிப்பிரிவுக்கு திரு. அருணன் என்பவர் பொதுமக்கள் சார்பாக அனுப்பிய புகார்மனுவுக்கு பதிலளிக்கும்விதமாக அக்கல்லூரியின் டீன் திரு. முத்துகிருஷ்ணன் அவர்களே எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவலங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது…

ஆக்ஸிஜன் இணைப்பு இல்லை.
CT ஸ்கேன் இல்லை.
MRI ஸ்கேன் இல்லை.
ஸ்டிரீம் லாண்டரி இல்லை.
வாசிங் மெசின் இல்லை.
டயாலிசிஸ் மற்றும் ஆபரேசன் தியேட்டருக்கு தண்ணீர் இணைப்பு இல்லை.
STP, ETP வசதிகள் இல்லை.
சிவில் மற்றும் எலக்ட்ரிக்கல் பணிகள் இன்னும் முடிவடையவில்லை.
தீயணைப்புத்துறை அனுமதி பெறவில்லை.
மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெறவில்லை.
லிப்ட் லைசன்ஸ் இன்னமும் பெறப்படவில்லை.

மேற்குறிப்பிட்டுள்ள வசதிகள் ஏதுமின்றி அரசு மருத்துவக் இயங்கிவருவது ஒருபுறமிருக்க தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்துபோகும் மருத்துவக் கல்லூரியின் கழிவறை மற்றும் ஏனைய வளாகமோ சிறிதும் சுத்தமின்றி சுகாதாரமற்ற முறையில் இருப்பது மற்றும் அங்கு பணிபுரியும் சிலர் நோயாளிகளிடம் பணம் வாங்குவது போன்ற புகார்கள் பலமுறை எழுந்தும் மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது இனியும் நல்லதல்ல என்று பொதுமக்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள நமது அரியலூர் மாவட்டத்திற்கு மருத்துவக்கல்லூரி வந்ததும் விளிம்புநிலை மக்களுக்கு இலவச மருத்துவம் கிடைக்கும் என்ற எதிர்பார்பில் இருந்த பலருக்கும் இன்று பல ஆயிரம் செலவுசெய்து தனியார் மருத்துவமனைக்கே செல்லவேண்டிய சூழலை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்திவருவதாக சமூக ஆர்வலர்கள் பலரும் வேதனையோடு கூறி வருகின்றனர்.

நமது மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி கொண்டுவந்ததை மிகவும் வரவேற்ற அரியலூர் மக்கள் இன்று மக்களுக்கு துளியும் பயன்படாத அந்த மருத்துவக்கல்லூரி இங்கு தேவையா என்று நொந்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் இதில் உடனடியாக தலையிட்டு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தித் தரும் நடவடிக்கையை மேற்கொள்வதோடு நோயாளிகள் பலரும் வந்துபோகும் கல்லூரியின் மருத்துவம் மற்றும் சுகாதாரத்தையும் அவ்வப்போது ஆயவுசெய்து தரம் உயர்த்த வேண்டுமாய் பொதுமக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.


செய்தி உதவி:
அரியலூர் சோழதேசம்,
முகநூல் குழு.

Leave a Reply