தமிழ்நாட்டில் குடியிருப்பு மனை இல்லாத பல்லாயிரக்கணக்கான குடிசைவாசிகள் பட்டியல் சமூகத்தினர் இடைநிலைச்சாதியினர் இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் இருக்கின்றனர்.
ஒரே வீட்டுக்குள் வசிக்கும் உபரிக் குடும்பத்தினரும் பல்லாயிரம் பேர் இருக்கின்றனர்.
இத்தகையவர்களுக்கு குடியிருப்புமனை மயானச்சாலை போன்ற அத்தியாவசியமான கோரிக்கைகளுக்காக மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர்கள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர்கள் தனி வட்டாட்சியர்களை (ஆதிதிராவிடர் நலம்) அணுகும்போது அவர்கள் திட்டத்தை நிறைவேற்ற பலவேறு இடையூறுகளை சட்டத் தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
இதையெல்லாம் கடந்து தனியாரிடம் நிலத்தைப் பெற ஒப்புதல் பெற்றாலும் அந்த நிலங்களின் வெளிச்சந்தை மதிப்பு பத்திரப் பதிவுத்துறை தீர்மானிக்கும் சந்தை விலையைவிட பல மடங்கு அதிகமாக இருக்கிறது.
இதனால் குடியிருப்புமனைக்கென தமிழக அரசு ஒதுக்கீடு செய்யும் பணம் செலவிடப்படாமலே ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட ஆட்சித் தலைவர்களால் மாநில அரசுக்கு திருப்பி அனுப்பப்படுகிறது.
அண்மையில் திருவாரூர் வருகை தந்த காங்கிரசு கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையிலான பொதுக்கணக்குக் குழுவினர் இத்தகைய தவறுகளையும் கண்டறிந்தனர்.
பொதுச்சந்தை விலைக்கே குடியிருப்பு மனைக்கு பணம் கொடுத்தால்தான் நிலவுரிமையாளர்கள் குடியிருப்பு மனைக்கு நிலம் கொடுப்பார்கள். அதற்கு இன்னும் சில நூறு ரூபாய்களை கூடுதலாக ஒதுக்குவதில் தமிழக அரசுக்கு என்ன சிக்கல்?
ஒரு சாதாரண இந்த இடைவெளியை அரசுக்கு அறிவுறுத்த முடியாத அளவுக்கு நமது ஐ.ஏ.எஸ் அலுவலர்களுக்கு மூளை வறண்டு விட்டதா?
ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சர்களும் இந்தச் சிக்கலை அறியாமலேயே வானத்திலிருந்து குதித்தவர்களா? சுயம்புவாக உதித்தவர்களா?
குறிப்பிட்ட சில நிலத்தாவாக்களில் நீதிமனறத் தடை ஆணைகளை விரைந்து முடிக்க தனிவிரைவு நீதிமன்றங்களை – லோக்கல் அதாலத்துகள் மூலம் தீர்வு காண அதிகாரிகள் முயற்சிக்காதது ஏன்?
நெடுஞ்சாலைத் திட்டப்பணிகள் பலமடங்கு விலையைக் கொடுத்து உலகவங்கியின் வழிகாட்டும் நெறிமுறைகளைப் கடைபிடித்து நிலத்தை கையகப்படுத்தும் அரசும் அதிகார வர்க்கமும் – ஏழைகள் குடியிருப்புமனை விசயத்தில் மட்டும் ஏனோதானோ எனக்கென்ன உனக்கென்ன என இருப்பது ஏன்?
ஏழைகளுக்கு குடியிருப்பு மனைவழங்க – புறம்போக்கு நிலங்களை, 1980க்குப் பிறகு விரிவுபடுத்தப்பட்ட காப்புக்காடுகள், சைவ ஆதீன நிலங்கள், சங்கரமடங்களின் நிலங்களை இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் உபரி நிலங்களையும் முறையாக சட்டமியற்றி எடுத்து வழங்குவதற்கான நடைமுறைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் அண்மையில் பெருமுதலாளிகளின் அந்நிய முதலீட்டை ஈர்க்கும் மாநாடு ஒன்றை நடத்தினார். அதில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்த சரத்துகள் ஒன்று –
தொழில் தொடங்கும் முதலாளிகளுக்கு தொழில் நிறுவனம் அமைக்கப்படும் நிலத்தின் பரப்புக்கு பொதுச்சந்தை மதிப்பீட்டு விலையில் பாதிவிலைக்கே நிலங்களை அளிப்பதாக வாக்குறுதியாக கொடுத்தார்.
பல இலட்சக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை சில ஆயிரம் கோடி ரூபாய்க்கு வழங்கி தமிழ்நாட்டு நில நீர் கனிம வளத்தைப் சூறையாட அனுமதிக்கும் தமிழ்நாடு அரசு, – ஏழை மக்களுக்கு இலவச குடியிருப்பு மனை வழங்க மட்டும் பணம் இல்லை, நிலம் இல்லை, போன்ற சாக்குப்போக்களையும் நீதிமன்றத் தாவாக்களையும் காட்டியே எத்தனை நாளுக்கு ஏமாற்றுவார்கள்?
—
திரு. அரங்க.குணசேகரன்,
தலைவர்,
தமிழக மக்கள் புரட்சிக் கழகம்,
தொடர்பு இலக்கம்: 90475 21117