தமிழ்நாடு பாடநூல் அச்சிடும் பணியை தமிழக அச்சக நிறுவனங்களுக்கே வழங்கிட தமிழ்நாடு முதல்வருக்கு சிபிஐ (எம்) வேண்டுகோள்!!
தமிழ்நாடு பாடநூல் கழகம் மாணவர்களுக்கான பாடநூல்களை அச்சிட்டு வருகிறது. இந்த பாடநூல்கள் அச்சிடும் பணியை கடந்த அஇஅதிமுக ஆட்சியில் சர்வதேச டெண்டர் மூலம் வெளி மாநிலங்களுக்கு வழங்கியது. இதன் மூலம் தமிழகத்திலுள்ள புத்தகம் அச்சிடும் நிறுவனங்களும், பைண்டிங் செய்யும் நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. கொரோனா மற்றும் பொது முடக்கத்தால் தமிழகத்தின் அச்சுத் தொழில் மேலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஏனைய மாநிலங்களில் பாடநூல் அச்சிடும் பணி அந்தந்த மாநில அச்சகங்களுக்கே வழங்கப்படும் போது, தமிழ்நாட்டில் மட்டும்தான் புத்தகங்கள் அச்சிடும் பணியில் பிற மாநில நிறுவனங்களும் பங்கேற்க முடியும் என்ற விதி உள்ளது. இந்த விதியை ரத்து செய்து தமிழ்நாடு பாடநூல் புத்தகங்களை அச்சடிக்கும் பணியை தமிழக நிறுவனங்களுக்கே வழங்க வேண்டுமென்று தமிழக அரசிற்கு புத்தகம் அச்சிடுவோர் மற்றும் பைண்டர்ஸ் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இக்கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு பாடநூல் கழகம் வெளியிடும் பாடநூல்கள் அச்சிடும் பணி அனைத்தையும் தமிழக அச்சக நிறுவனங்களுக்கே வழங்கிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.
—
திரு. கே. பாலகிருஷ்ணன்,
மாநில செயலாளர்,
சிபிஐ (எம்),
தமிழ்நாடு.