இடிந்து விழும் நிலையிலுள்ள அனைத்து பழைய குடியிருப்புகளுக்கு பதிலாக புதிய குடியிருப்புகளை கட்டித்தர தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!
சென்னை திருவொற்றியூர் அருகே 23 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் சரிந்து இடிந்து விழுந்துள்ளது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. சென்னை நகருக்காக தினமும் உழைத்து வரும் இம்மக்களுக்கு உதவிட குடிசைகளுக்கு பதிலாக அரசு சார்பில் கட்டித்தரப்பட்ட பல குடிசைமாற்று வாரிய குடியிருப்புகள் பலவீனமடைந்து மிக மோசமான நிலையில் உள்ளன. 1998ஆம் ஆண்டு திருவொற்றியூர் கிராமத்தெருவில் 336 வீடுகள் கொண்ட குடிசைமாற்று வாரிய குடியிருப்புகள் கட்டப்பட்டன.
இதற்கு மாதம் ரூபாய் 250 வாடகையாக தமிழக அரசால் பெறப்பட்டு வந்தது. இதில் 24 வீடுகள் கொண்ட ஒரு அடுக்குமாடி தொகுப்பு முழுமையாக சரிந்து இடிந்து விழுந்துள்ளது. பகலில் இடிந்து விழுந்ததால் அதிர்சுடவசமாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ள இதுபோன்ற பாதுகாப்பற்ற குடியிருப்புகளில் குடியிருந்து வரும் 336 குடும்பங்கள் தற்போதும் அச்சத்தில் உள்ளனர்.
இடிந்து விழுந்த 24 குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிவாரணமும், மாற்று வீடும் வழங்கப்படும் என மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.
மேலும், இதுபோன்ற பாதுகாப்பற்ற குடியிருப்புகளில் வசிக்கும் மீதமுள்ள குடும்பங்களுக்கு உடனடியாக அரசு தலையிட்டு நிவாரணம் வழங்கி, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்திட வேண்டுமெனவும், இடிந்து விழும் நிலையில் உள்ள குடியிருப்புகளுக்கு பதிலாக அதே இடத்தில் புதிய குடியிருப்புகளை கட்டித்தர வேண்டுமெனவும், அதுவரை குடியிருப்போருக்கு மாற்று இடம் வழங்கிட வேண்டுமெனவும், இப்பணியை உடனடியாக துவக்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.
சென்னை நகரிலும் மற்றும் தமிழகம் முழுவதும் நீண்ட காலத்திற்கு முன் கட்டப்பட்டு சேதமடையும் நிலையில் உள்ள அனைத்து வீடுகளையும் கணக்கெடுத்து மாற்று இடம் வழங்கி, அதே இடத்தில் புதிய குடியிருப்புகளை கட்டி அம்மக்களுக்கே ஒப்படைத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழக அரசை வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
—
திரு. கே.பாலகிருஷ்ணன்,
மாநில செயலாளர்,
சிபிஐ(எம்),
தமிழ்நாடு.
—
செய்தி சேகரிப்பு:
திரு. ஸ்ரீதர்,
திருவாரூர்.