Home>>இந்தியா>>2021ஆம் ஆண்டிற்கான சாகித்ய அக்காதமி விருதுபெறும் எழுத்தாளர் அம்பை
இந்தியாஇலக்கியம்கட்டுரைகள்கதைகவிதைசெய்திகள்

2021ஆம் ஆண்டிற்கான சாகித்ய அக்காதமி விருதுபெறும் எழுத்தாளர் அம்பை

நாவல், சிறுகதை, புனைவில்லாத, புனைவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் தலைசிறந்த இலக்கிய படைப்புகளுக்கு ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழ், மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட 24 மொழிகளில் படைக்கப்படும் படைப்புகளுக்கு, ரூ.1 லட்சம் பரிசுத் தொகையுடன் பட்டயம் வழங்கப்படுகிறது. இலக்கிய உலகில் உயரிய அங்கீகாரங்களில் ஒன்றாகப் பார்க்கப்படும் இந்த சாகித்ய அகாடமி விருது, 1955ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், 2021ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது பெறும் எழுத்தாளர்களின் பட்டியலை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த சிறுகதை எழுத்தாளர் அம்பைக்கு இந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்பை என்கிற சிஎஸ் லக்ஷ்மி தமிழின் சிறந்த பெண் படைப்பாளிகளுள் ஒருவர். இவர் 1960களின் பிற்பகுதியில் எழுதத் தொடங்கியவர்.

தமிழ் பெண் எழுத்தாளர்களின் பொது பிம்பத்திலிருந்து வெகுவாக விலகி, வேறுபட்டு கூர்மையான, சமூக பெண்ணிய சிந்தனையுடன் கடந்த 40 ஆண்டுகளாக எழுதிவரும் எழுத்தாளர் அம்பை. இவர் ஒரு பெண் எழுத்தாளர் மட்டுமல்ல ,தீவிரமான ஒரு சமூக செயற்பாட்டாளரும் கூட.

தமிழ் நவீன பெண் இலக்கியத்தில் அம்பையின் தடம் அழுத்தமானது. பெண்களின் வாழ்க்கையை அதுவும் சுய சிந்தனை கொண்ட படித்த பெண்களை தனது கதாபாத்திரங்களாக மிக இயல்பாக படைத்தவர். எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பிரச்சனைகளை கொண்ட பெண்களின் வாழ்வையும் , எல்லை கடந்த நிலப்பகுதிகளையும் களமாக கொண்ட து இவரது கதைகள்.

பெண்களின் உறவு சிக்கல்கள், பிரச்சினைகள், குழப்பங்கள் கோபதாபங்கள் ,சமரசங்கள் யாவும் கிண்டலான தொனியில் மிகவும் ரசிக்கும்படியாக இவரது படைப்புகளில் வெளிப்படுகின்றன .

பெங்களூரில் தன் பாட்டியின் கவனிப்பில் வளர்ந்து வந்த ஒரு பள்ளிச் சிறுமி தமிழில் நானும் கதை எழுதுகிறேன் என்று மற்ற பெண் எழுத்தாளர்களைப் போலவே கதைகளை எழுதத் தொடங்கியபோது தனக்குத்தானே சூட்டிக்கொண்ட பெயர்தான் அம்பை.

எழுதும் திறமையும் ஆசையும் தான் அம்பையினுடையது. அவருடைய கதைகள் நமக்குக் காட்டும் உலகம் அம்பையின் பாட்டியும் அம்மாவும் கொண்டிருந்த பாரம்பரிய நம்பிக்கைகளும் அவர்கள் அம்பைக்கு சொல்லிக் கொடுத்த விடயங்களும் தான்.

தனக்கென ஒரு தனி பாணியை அமைத்துக் கொண்டு தான் சொல்ல நினைத்ததை, தனக்குள் இருப்பதை சொல்ல எழுத நினைப்பவர்அம்பை .ஒரு சிறு பெண் தனக்கு சமூகத்தினால் கொடுக்கப்பட்ட ஒரு சிறிய இடத்திலிருந்து இந்த சமூகத்தை பற்றி சிந்திக்கத் தொடங்கிய இடத்திலிருந்து அம்பையின் படைப்புகள் தொடங்குகின்றன. அவரது காலத்தில் இருந்த பெண்கள் சுயசிந்தனையும், தன் கருத்துக்களைச் சொல்லி வலியுறுத்தும் உரிமையும் மறுக்கப்பட்டதை தமக்கு இழைக்கப்பட்ட அநீதியாக அவர்கள் ஒருபோதும் எண்ணியதே இல்லை. நமது அம்மக்களையோ அல்லது பாட்டிகளையோ எடுத்துக் கொண்டாலும் அவர்களும் அப்படித்தான் சொல்வார்கள். அதுதான் இயல்பு ,காலம் காலமாக பின்பற்றப்படும் சரியானது என்று அவர்கள் உண்மையிலேயே நம்பியிருந்தார்கள், அந்த நம்பிக்கைதான் அம்பையின் முன் தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளர்கள் அவர்களது எழுத்தில் பிரதிபலித்தனர். ஆனால் அம்பையும் அவர்கள் தலைமுறைப் பெண்களும் ஏன் அதற்கு கட்டுப்பட வேண்டும்? அவர்களுக்கு அந்த பழைய நம்பிக்கைகள் எப்படி உண்மையாகும்? என்ற கேள்வியை எழுப்பி தனது எழுத்து நடையை புதிய திசையில் நவீன முறையில் கொண்டு சென்றவர் தான் அம்பை.

அம்பையின் எழுத்தில் இடம்பெறும் பாத்திரப்படைப்புகள் உலகக் அரங்கில் தமிழ் பேசும் சூழலில் உள்ளவர்கள் மட்டுமே அல்ல. பர்மிங்காமில் வாழும் பெண்களும் ,பம்பாய் குடிசை பகுதிகளில் வாழும் தொழிற்சங்கத்தினரும்,ராஜஸ்தான் மாநிலத்தின் ஒரு கோடியில் வாழும் கிராமத்து பெண்களும், தமிழ்நாட்டின் தென்கோடியில் தாமிரபரணி ஆற்றின் கரையில் இருக்கும் ஒரு அமைதியான கிராமத்து பெண்களும் அவர் கதையில் இடம் பெறுகிறார்கள்.

வீட்டின் மூலையில் ஒரு சமையலறை என்ற சிறுகதையில் அம்பை அவர்கள் “சிலர் தம் மீது அடிமை போன்று சுமத்தப்பட்டிருக்கும் வேலைச் சுமையை பெருமிதத்தோடு எடுத்துக்கொள்கிறார்கள். அவர்கள் கையில் ஒரு சாவி கொத்து கிடைத்து விட்டால் அதுதான் அவர்கள் வாழ்க்கையின் சிகர சாதனை , அங்கீகாரம், சமையலறையில் அவர்களுக்கு அளிக்கப்படும் பூரண அதிகாரத்தின் சின்னம் என்று எண்ணுகிறார்கள்”என்று பெண்ணடிமைத்தனம் குறித்து குறிப்பிட்டிருப்பார்.

சமீபத்தில் வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய “கிரேட் இந்தியன் கிச்சன்” என்ற மலையாள திரைப்படத்தின் சாரம்சம் இவர் எழுதிய இந்த வீட்டின் மூலையில் ஒரு சமையலறை என்ற சிறுகதைதான்.

வெளிநாட்டு அகதிகள் என்ற கதையில் அம்பை அவர்கள் “சிலர் தம் மீது செய்யப்படும் அன்பையும் தன் பாதுகாப்புக்காக தன்மீது கட்டப்பட்டிருக்கும் தளைகளையும் மிக சந்தோஷத்துடன் அனுபவிக்கின்றனர்” என்று எழுதி இருப்பார். இவரது சந்திரா என்ற சிறுகதையில் சில பயங்கரவாதிகள் எவ்வாறு வேட்டையாடப்படுகின்றனர் என்றும் குறிப்பிட்டு இருப்பார்.

அண்மையில் நான் வாசித்த இவரது இன்னொரு கதை “அம்மா ஒரு கொலை செய்தாள்” ஒரு தாய்க்கு தன் மகளுக்கு திருமணம் செய்து வைத்து தன் சுமையைக் குறைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அந்த எண்ணம் சுலபத்தில் நிறைவேறாத முடியாதபடி அந்த பெண்ணின் கருப்பு நிறம் தடையாக இருக்கும். கருப்பு நிறம் கொண்ட திருமண சந்தையில் விரைவில் விலைபோகாத மகள் விரைவில் பூப்பெய்தியதை அன்பாக அரவணைக்க வேண்டிய இடத்தில் “அதற்குள் என்ன அவசரம் ” என்று வெறுப்பை உமிழ வைக்கும் சமூகத்தை அழுத்தமாக படைத்திருப்பார். இவ்வாறாக சமூகத்தில் தான் கண்ணியத்துடனும்,கவனத்துடன் வாழும் உரிமை மறுக்கப்படும், ஒரு தனிமனிதராக அடைபட்டு கிடக்கும் காலத்தையும் இடத்தையும் சூழலையும் விலக்கிப் பார்த்தால் அவரது எழுத்தின் அடிநாதம் காலம் காலமாக உலகமெங்கும் காணும் பெண்களுக்கெதிரான அடக்குமுறைக்கு எதிரான ஒரு குரல் தான் அம்பையுடையது.

ஒரு பெண் தன் சுய கௌரவத்திற்காகவும் சுய உரிமைகளுக்காகவும் ஆன போராட்டத்தில் அப்பெண் தான் பெண்மையோ தன் அழகுகளையும் பலியாக இழக்க வேண்டியதில்லை.அம்பை என்னும் கலைஞர் அதை இழக்கவில்லை.இவர் ஸ்பாரோ என்ற அமைப்பை நிறுவி அதன் இயக்குனராக பல்வேறு சமூக, இலக்கியப் பணிகள் போன்ற முன்னெடுப்புகளை செய்து வருகிறார். லக்ஷ்மி என்ற பெயரில் ஆங்கில நாளிதழ்களிலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.

அம்பை ஆங்கிலத்தில் எழுதிய ஆய்வுநூல் [The Face behind the mask : Women in Tamil literature, Stosius Inc/Advent Books Division] முதல்தலைமுறைப் பெண் எழுத்தாளர்களைப் பற்றிய முக்கியமான இலக்கிய வரலாறு.

“சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை” என்னும் சிறுகதைத் தொகுதிக்காக சாகித்ய அக்காதமி எழுத்தாளர் அம்பைக்கு வழங்கப்பட்டுள்ளது.

சாகித்ய அக்காதமி விருதுபெறும் அம்பைக்கு வாழ்த்துக்கள்.தமிழக பெண் எழுத்தாளர்களுள் நான்காவதாக சாகித்ய அக்காதமி விருதுபெறும் பெண் எழுத்தாளராக அம்பை பெருமை பெறுகிறார்.

அதேபோல், குழந்தை இலக்கியப் பிரிவில் வழங்கப்படும் பால புரஸ்கர் விருது இந்த ஆண்டு தமிழகத்தை சேர்ந்த கவிஞர் முருகேஷுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ என்ற குழந்தை இலக்கிய நூலுக்காக இம்முறை பால புரஸ்கர் விருது முருகேஷுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி சேகரிப்பு
இளவரசி இளங்கோவன்

Leave a Reply