தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ.மணியரசன் மொழிப் போர் ஈகியர் நாள் சிறப்புக் கட்டுரை!
வடவர்கள் தமிழ்நாட்டிலும் இந்தி பேசாத மற்ற மாநிலங்களிலும் இந்தியை ஒரே ஆட்சி மொழியாகத் திணித்திடத் திட்டம் தீட்டி, செயல்படத் தொடங்கி 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பு எதிர்ப்பு தொடங்கியும் 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.
குசராத்தி மொழி இலக்கியக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு விழா மலரில் 1909-இல் கட்டுரை எழுதிய காந்தி ஆங்கில மொழியை நீக்கி. இந்துஸ்தானியை அனைத்திந்திய மொழியாக ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அக்காலத்தில், “ஒவ்வொரு பண்பட்ட இந்தியனுக்கும் தன்மாகாண மொழியுடன் ஒரு செம்மொழியும் (சமற்கிருதம்) இந்தியும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்” என்றார். (M.K Gandhi, Hindi and English in South – 1909)
சென்னையில் 1918-ஆம் ஆண்டு தென்னிந்திய இந்தி பரப்பல் மன்றத்தை (தட்சிண பாரத் இந்தி பிரச்சார சபா) காந்தி தொடங்கி வைத்துப் பேசும் போது “பேராவலுடனும் துணிவுடனும் தென்னிந்தியாவில் இந்தியை பரப்புவதற்காக இம்மன்றத்தைத் தொடங்குகிறோம்” என்றார்.
இந்தி பரப்பல் மன்றத்தைச் சென்னையில் “துணிச்சலாகத்” தொடங்குகிறோம் என்று ஏன் சொன்னார் காந்தி? தமிழர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சமற்கிருதத்திணிப்பை எதிர்த்து வருகிறார்கள். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து காங்கிரசு மாநாடு இந்தித் திணிப்புத் தீர்மானங்கள் போட்டு வருவதைத் தமிழ்நாட்டு அறிஞர்கள் எதிர்த்து வருகிறார்கள் என்பதையும், காந்தியும் வடநாட்டினரும் அறிவர்.
இந்தித் திணிப்பு என்பது மொழிச் சிக்கல் மட்டும் அன்று; அதன் தோற்று வாய் இனச்சிக்கல்! இந்தி மண்டலத்தினரும் சமற்கிருத மொழிக் குடும்பத்தினரும் தங்களை ஆளும் இனமாக அப்போதே கருதிக் கொண்டனர். வடவர்களுக்குத் தலைமை தாங்கியோர் ஆரிய பிராமணர்களும் ஆரிய வைசியரும் ஆவர்! இன்றும் அவர்களே இந்திய அரசியல், பொருளியல், பண்பியல் அனைத்திலும் ஆதிக்கம் செய்கிறார்கள்.
இந்தித் திணிப்பை 20 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்திலிருந்து எதிர்த்த தமிழறிஞர்களும் தமிழின உணர்வாளர்களும் தமிழ் மொழி மற்றும் தமிழினம் இரண்டின் தற்காப்பிற்காகவே இந்தியை எதிர்த்தனர். தமிழறிஞர்களின் இந்தி எதிர்ப்பு ஒன்று கூடல்களில் உருவான முழக்கம் தான் “தமிழ்நாடு தமிழர்க்கே!”
1937 வாக்கில் இந்தி எதிர்ப்பில் தமிழறிஞர்களோடு இணைந்து கொண்ட பெரியார்”தமிழ்நாடு தமிழர்க்கே” முழக்கத்தை 1938-இல் முழுமையாக ஏற்று, அம் முழக்கத்தை ஒவ்வொருவரும் கையில் பச்சை குத்திக் கொள்ளச் சொன்னார், அம்முழக்கத்தைக் கல்லில் வெட்டி வீட்டுச் சுவரில் பதிக்கச் சொன்னார்.
ஆனால் அவரே 1939-இல் தமிழர் என்று சொல்லக்கூடாது; திராவிடர் என்று தான் சொல்ல வேண்டும் என்றார். திராவிடத் திணிப்பைத் தீவிரப்படுத்தி தமிழர் என்ற இயற்கையான இனப் பெயரை மறைத்தார். அப்போது எழுந்து வந்த தமிழின – தமிழ்மொழி உணர்ச்சியைத் திராவிடமாக்கிச் சீர்குலைத்தார் பெரியார்.
தி.க.விலிருந்து பிரிந்து தி.மு.க.வைத் தொடங்கிய அண்ணாவும் அவரின் முதல் வரிசைத் தம்பிகளும் பெரியாரின் “திராவிட” இனத்தை அப்படியே ஏற்றுக் கொண்டதுடன், ஆங்கில ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டு இந்தி எதிர்ப்பு பேசினர். அவர்களின் தலைவர் பெரியார், தமிழைப் படிக்காதே ஆங்கிலத்தைப் படி, வீட்டில் ஆங்கிலத்திலேயே பேசு என்றார்.
இந்தியாவின் இணைப்பு மொழி இந்தி என்றனர் காங்கிரசார். இல்லை, ஆங்கிலமே இந்தியாவின் இணைப்பு மொழி என்றனர் தி.மு.க.வினர்! இந்தி எதிர்ப்பில் முதல் வரிசையில் நின்ற நாவலர் சோமசுந்தர பாரதியார் “பல மொழிகள், பல இனங்கள் கொண்ட சோவியத் ஒன்றியத்தில் இணைப்பு மொழி இல்லை. அந்தந்த இன மொழியும் ஆட்சி மொழி, எனவே இந்தி அல்லது ஆங்கிலத்தை இணைப்பு மொழியாக்கினால் தமிழ் மொழியை அழித்து விடும்” என்று எதிர்த்தார்.
பிரான்சில் பிரஞ்சு ஆட்சிமொழி கல்வி மொழி. ஆனால் ஆங்கிலம் உள்ளிட்ட வேறு மொழிகளையும் கற்கிறார்கள். சுவிட்சர்லாந்தில் நான்கு மொழிகள் பேசும் தேசிய இனங்கள் வாழ்கின்றன. அங்கு இணைப்பு மொழி என்று எதுவும் இல்லை. நான்கு மொழிகளும் ஆட்சி மொழிகளே!
இப்போது நாம் மும்மொழிக் கொள்கை மோசடிக் கொள்கை; இரு மொழிக் கொள்கை ஏமாற்றுக் கொள்கை; ஒரு மொழிக் கொள்கையே உரிமைக் கொள்கை என்கிறோம். தமிழ்நாட்டில் தமிழே ஆட்சி மொழி, தமிழே கல்வி மொழி (பாடமொழி மற்றும் பயிற்று பொழி)! விரும்புவோர் ஆங்கிலம் உட்பட வேறு எந்த மொழியையும் கற்க உரிமை உண்டு! இதுவே இறையாண்மையுள்ள தமிழ்த்தேசிய மொழிக் கொள்கை!
திராவிடத் தலைவர்கள் இந்தியை எதிர்த்துக் கொண்டே ஒரு பக்கம் தமிழர் என்ற இனப்பெயரை எதிர்த்தார்கள்; மறுபக்கம் ஆங்கில ஆதிக்கத்தை ஏற்கத் தமிழர்கள் உளவியலைப் பக்குவப் படுத்தினார்கள்.
அரசமைப்புச் சட்டப்படி 1965 சனவரி 26 லிருந்து ஆங்கிலம் நீக்கப்பட்டு இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழி ஆகும் என்ற நிலை இருந்தது. இந்த இந்தித் திணிப்பை எதிர்த்துத் தொடங்கியதே 1965 மொழிப்போர்.
மொழி உரிமைக்காக உலகில் வேறு எந்த நாட்டிலும் நடக்காத அளவிற்கு 1965 சனவரி 25 முதல் மார்ச்சு 15 வரை 50 நாள் இந்தி எதிர்ப்புப் பெரும் போராட்டம் மக்கள் போராட்டமாக வளர்ந்தது.
பக்தவத்சலத்தை முதலமைச்சராகக் கொண்ட காங்கிரசு ஆட்சி – அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர் இராசேந்திரன் தொடங்கி 300க்கும் மேற்பட்டோரை சுட்டுக் கொன்றது. கேரளம், கர்னாடகம், ஆந்திரம், மராட்டியம் ஆகிய மாநிலங்களிலிருந்து 4000 காவல்துறையினரையும், இந்தியப் படையிலிருந்து 5000 வீரர்களையும் வரவழைத்துக் காங்கிரசுக் கட்சி காட்டுமிராண்டி ஆட்சி நடத்தி மக்களைச் சுட்டுக்கொன்றது.
உருதுத் திணிப்பை எதிர்த்து 1950களில் கிழக்குப் பாக்கித்தானில் மாணவர் போராட்டம் கிளர்ந் தெழுந்தது. மேற்குப் பாக்கித்தான் ஆட்சியாளர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி டாக்கா பல்கலைக் கழக மாணவர்கள் நான்கு பேரைக் கொன்றார்கள்.
கிழக்கு, மேற்குப் பாக்கித்தான்கள் முசுலிம் தாயகங்கள்தான்! மத அடிப்படையில்தான் இந்தியாவிலிருந்து 1947-இல் பிரிந்தார்கள். ஆனால் தங்களின் வங்க மொழியையும் வங்காளித் தேசிய இனத்தையும் மேற்குப் பாக்கித்தானியர் அடிமைப் படுத்தினார்கள் என்பதை உணர்ந்து கொண்ட வங்காளிகள் இன உரிமைப் போராட்டதைத் தொடர்ந்தனர். 1971-இல் விடுதலை பெற்று வங்களாதேசம் அமைத்தனர். வங்காளி மொழியை ஆட்சி மொழி ஆக்கினர். ஐ.நா. மன்றத்தில் அமர்ந்தனர். தங்கள் தாய் மொழி காக்க, உயிரீந்த 4 மாணவர்களைச் சுட்டிக் காட்டி உலகத் தாய் மொழி நாளாகத் தங்களது ஈக நாளான பிப்ரவரி 21-ஐ ஐ.நா. மன்றம் ஏற்கச் செய்தனர்.
தமிழர்களின் இந்தி எதிர்ப்பு 1930-களில் பெரும் போராட்டமாக வளர்ந்து நடராசன், தாளமுத்து இருவர் உயிரீகம் செய்தனர். 1965-இல் 300 பேர்க்கும் மேல் சுட்டுக் கொல்லப்பட்டனர். நம்முடைய மொழிப் போர் ஈக நாள் அல்லவா உலகத் தாய்மொழி நாளாக ஆகியிருக்க வேண்டும்.
நம் தமிழர்களின் பலவீனங்களை நாம் உள்ளதை உள்ளபடி அறிந்து கொள்ள வேண்டும்.
இந்திக்காரர்களுக்குத் தமிழர்களைக் கொத்தடிமைகளாக மாற்றிக் கொண்டிருக்கும் காங்கிரசைத் தமிழர்கள் இன்றும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். காங்கிரசின் அடாவடித் தம்பியான பா.ச.க.வை தமிழர்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள்.
ஆந்திரத் தெலுங்கர், கர்நாடகக் கன்னடர், கேரள மலையாளிகள் முதலியோரைத் தமிழர்களுடன் இணைத்துக் கொண்டு தனிநாடு கேட்ட திராவிடத் திரிபுவாதக் கட்சிகளான தி.க., தி.மு.க. முதலியவற்றைப் பெருங் கட்சிகளாக வளர்த்தார்கள் தமிழர்கள்.
தமிழ் இன அடிப்படையில் கட்சிகள் தொடங்கிய தமிழர்கள், விடா முயற்சியும், உழைப்பும் இன்றி, உறுதியான இலட்சியமும் இன்றி, தங்கள் கட்சியை மக்கள் திரள் அமைப்பாக மாற்றும் தனித்திறமை இன்றி, கடைசியில் திராவிடத் திரிபுவாத மாயையில் கலந்தார்கள். கங்காணிப் பதவிகளைப் பெற்றார்கள்.
திராவிட வாதிகள், “அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு” என்றார்கள். பின்னர், இந்திய தேசப் பாதுகாப்புக்காகத் “திராவிட நாடு” விடுதலைக் கொள்கையை விட்டு விட்டோம் என்றார்கள்.
“வடவர் நம்மவரும் இல்லை. நல்லவரும் இல்லை” என்றார்கள். ஆரிய பிராமண – ஆரிய வைசிய இந்திய ஏகாதிபத்தியக் கட்சிகளான காங்கிரசு, பா.ச.க.வுடன் நிரந்தரமாகக் கூட்டணி சேர்ந்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் பரூக் அப்துல்லாக்களை, மெஹ்பூபாக்களைத் திராவிடக் கட்சிகள் தொடர்ந்து உற்பத்தி செய்து வருகின்றன.
இந்திய ஏகாதிபத்தியம் அனுமதிக்கும் தனிநபர் கங்காணிப் பதவிகளைக் காமுற்று, தமிழர்களின் தாய்மொழியை, தமிழ் இனத்தின் உரிமைப் போராட்டத்தைக் காவு கொடுத்து வருகிறார்கள்!
“இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்” என்பார்கள்; இந்தித் திணிப்பாளர்கள் தரும் குற்றேவல் பதவிகளுக்காக, சிற்றதிகார வெறிக்காக, இந்தித் திணிப்பாளர்களுடன் நிரந்தரக் கூட்டணி வைத்துக் கொண்டார்கள்.
தமிழ்நாட்டை விட்டு, இந்தியை நிரந்தரமாக நீக்கு என்பதற்கு மாறாக, நேருவின் உறுதி மொழியை செயல்படுத்து என்று பிச்சை கேட்கிறார்கள். நேருவின் உறுதி மொழி என்பது மெல்ல மெல்ல இந்தியைத் திணிப்பது.
தமிழ்நாட்டில் இப்போது பல்லாயிரக் கணக்கான தனியார் பள்ளிகளில், சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் இந்தி மொழி கற்பிக்கப்படுகிறது. அவ்வாறான பள்ளிகளில் மாணவர்கள் தமிழில் பேசினால் தண்டத் தொகை வசூலித்தல் உள்ளிட்ட தண்டனைகள் இன்று உள்ளன. திராவிடத் தலைவர்கள், திராவிட வாதிகள் பலர் இந்தி கற்பிக்கும் பள்ளிகள் நடத்துகிறார்கள்.
இந்திய ஏகாதிபத்தியம் அனுமதிக்கும் சிற்றதிகாரத்தை – கங்காணி முதலமைச்சர் பதவியை அடையும் ஆசைக்குத் தமிழ் இன உணர்வாளர்கள் பலியாகக் கூடாது. அவ்வாறான தனிநபர் பலவீனம் தமிழ் இனத்தை மீள முடியாத அடிமைப் புதை சேற்றில் தள்ளிவிடும்.
தமிழனே-தமிழச்சியே, உன் தாய்மொழி காக்கப் போராடி 1939-இல் சிறையில் மாண்ட தமிழர்கள் – 1964 தொடங்கி தீக்குளித்தும் நஞ்சுண்டும் மாய்ந்த தமிழர்கள், 1965-இல் இந்திய ஏகாதிபத்தியத்தின் தமிழ் நாட்டுக் கையாட்களால் சுட்டுக் கொல்லப்பட்ட 300க்கும் மேற்பட்ட வீரத் தமிழர்கள், 1938லிருந்து சிறை சென்ற ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் எல்லோரையும் எண்ணிப்பார்!
உன் நெஞ்சில் கனல் எரிகிறதா? அந்தக் கனலில் உறுதி எடு! உன் பாட்டன் திருவள்ளுவப் பேராசான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் உனக்காகவும் உன் பிறங்கடையர்க்காகவும் (வாரிசுகளுக்காகவும்) எழுதி வைத்துள்ள திருக்குறளை எண்ணி உறுதி எடு! “முயலை வீழ்த்தி விட்டேன் என்று வெற்று வீரம் பேசாதே! யானையை வீழ்த்த அம்பு விட்டேன் அது இப்போது தப்பிவிட்டது; அடுத்து அதை வீழ்த்துவேன் என்று உறுதி எடு” என்றான் உன் பாட்டன்!
இந்திய ஏகாதிபத்தியத்தின் விலங்கறுப்பேன்; இந்தியை நிரந்தரமாக விரட்டுவேன்; இறையாண்மையுள்ள தமிழ்த்தேசம் படைப்பேன்! அப்போது அரியணையில் அன்னைத் தமிழ் வீற்றிருப்பாள்; ஆட்சி செய்வாள்!
ஒரு காலத்தில் உலகாண்ட தமிழர், இறையாண்மையுடன் தமிழ்நாட்டை ஆள்வர்! இந்திய ஏகாதிபத்தியம் போடும் கங்காணிப் பதவிகள் என்ற கானல் நீர், இனத்தின் தாகம் தீர்க்காது என்ற உண்மையை உரத்துப் பேசு!
ஆதிக்க இந்தி எதிர்ப்புப் போரில் நம் முன்னோர் முன் மொழிந்த “தமிழ்நாடு தமிழருக்கே” முழக்கத்தை உரத்து முழங்கு! அதற்குப் புத்துயிர் கொடு!
—
செய்தி உதவி:
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.