Home>>இதர>>அந்த 100 நாட்கள் (ஒரு வசூல் வரலாறு)
இதரகட்டுரைகள்திரைத்துறை

அந்த 100 நாட்கள் (ஒரு வசூல் வரலாறு)

சமீபத்தில் திரையரங்குகளில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற விக்ரம் படம் நாளை திரையரங்குகளில் 100 நாட்களைக் கடக்கிறது என்ற செய்தி வந்தது.

100 நாட்கள் இந்த காலத்தில் ஒரு படம் ஓடுவது என்பது அரிது.மாநாடு தான் கடைசியா ஓடுனுச்சு.அதுவும் ஒரு தியேட்டர்ல ஓடுன்னுச்சு.விக்ரம் 3 தியேட்டர் ல போல..ஆனால் தமிழகத்தில் 800 திரையரங்குகளில் வெளியான படம் 3 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடுவது என்பது அரிது தான்.ஆகப்பெரிய வெற்றி எனலாம்.

சிவாஜி எம்ஜி ஆர் காலத்தில் எல்லாம் ஒரு படம் தமிழ் நாடு முழுவதும் 30 to 40 தியேட்டர்களில் வெளியாவதே பெரிய விஷயம்.கமல் தன் படம் ஒன்று 33 பிரிண்ட் போடப்பட்டதை பெருமையாக உணர்ந்ததாக சொல்லியிருக்கிறார்.ஒவ்வொரு படமும் பெரு நகரங்களில் மட்டுமே ஓடும்.அப்பறம் shifting அடிப்படையில் பல ஊர்கள் மாறும்.சென்னையில் ஒன்று அல்லது இரண்டு தியேட்டர்களில் மட்டுமே வெளியாகும்.(இன்று 30,40 தியேட்டர்களில் வருது).கோவை,திருச்சி,மதுரை உள்ளிட்ட பெரு நகரங்களில் கூட ஒரு திரையரங்கில் மட்டுமே வெளியாகும். சுற்றுவட்டார கிராமங்களில் படம் முதலில் வெளியாகாது. எனவே ஒரு படத்தை பார்ப்பது என்பது பெரும் தவம் தான் அப்போது. அதனாலதான் 100 நாட்கள் 150 நாட்கள் 200 நாட்கள் வரை காத்திருந்து படங்களை பார்த்துயிருக்கிறார்கள். அப்போது தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி பெரிதாக இல்லை என்பதால் வேறு எந்த வகையிலும் அந்த படத்தை பார்க்க முடியாது.

80 களில் கமல் ,ரஜினி காலத்திலும் ஏறக்குறைய அதே தியேட்டர்கள் தான்.அதிகபட்சம் 50 பிரிண்ட் போடலாம்.ஆனால் இந்த சமயத்தில்தான் வீடியோ கேசட் வந்தது. புதுப்படத்தில் திருட்டுத்தனமான காப்பிகள் வந்தன. ஆனா பெரிய அளவில் ரீச் இல்ல. தியேட்டர்களில்தான் பெரும்பான்மையான மக்கள் படத்தை பார்த்தார்கள்.பின் 90 களில் இன்னும் கொஞ்சம் திரையரங்குகள் அதிகமாகின சென்னையில் நான்கு தியேட்டர்களில் படம் வெளியானது. மதுரை கோவை திருச்சி போன்ற நகரங்களில் இரண்டு தியேட்டர்களில் படம் வெளியானது. அநேகமாக 100 தியேட்டர்கள் என்ற இலக்கை இந்த காலகட்டத்தில் தான் ஒரு படம் எட்டி யிருக்கும்.90 களின் மத்தியில் அதாவது பாட்ஷா இந்தியன் போன்ற படங்கள் வந்த காலகட்டத்தில் தியேட்டர்கள் எண்ணிக்கை பெருகின சிறுநகரங்களில் கூட படங்கள் நேரடியாக வெளியாகின. கிராமங்களில் கூட படம் நேரடியாக வெளியானது.இந்தியன் ,படையப்பா,ஜீன்ஸ் போன்ற படங்கள் 200 தியேட்டர்களுக்கும் மேல் வெளியானது.அதே நேரத்தில் திருட்டு விசிடி என்று அப்பொழுது உருவானது. இதனால் படத்தின் வசூல் பெருவாரியாக பாதித்தது. இருந்தும் அதையும் மீறி மக்களை கவர்ந்த பல படங்கள் 175 நாட்கள் 200 நாட்கள் ஓடின.

எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு விஜய் அப்போது தான் நன்றாக வளர்ந்து கொண்டிருந்தார். அவர் நடித்து 2001 ல் வெளிவந்த பிரண்ட்ஸ் என்ற ஒரு படம் 73 பிரின்டுகள் போடப்பட்டதை பெருமையாக பத்திரிகைகளில் குறிப்பிட்டார்கள்.அப்போது பிலிம் சுருள்களில்தான் படத்தின் பிரதிகள் போடப்பட்டன .மிக அதிக எண்ணிக்கையில் படப்பிரதிகள் பெரிய பட்ஜெட் படத்திற்கு மட்டுமே போடுவார்கள். இப்படியாக போய்க் கொண்டிருந்த காலகட்டத்தில்,

ஹேராம் ,ஆள வந்தான் போன்ற படங்கள் தமிழ்க அளவில் 300,,400 திரையரங்குகளில் வெளியாகின.அதையும் தாண்டி
2006ல் வெளிவந்த வேட்டையாடு விளையாடு படம் சென்னையில் மட்டும் 19 தியேட்டர்களில் வெளியானது. அதுவரை நான்கு தியேட்டர்களில் வெளியான படங்கள் ( ஆள வந்தான்,படையப்பா சந்திரமுகி உட்பட) முதல்முறையாக ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் அதை செய்து முடித்தார். படம் மிகக் குறுகிய காலத்திலேயே ஒரு கோடி ரூபாய் வசூலை சென்னையில் மட்டும் பெற்றது மாபெரும் சாதனையா பார்க்கப்பட்டது. முதன்முறையாக மொத்தமாக 2 கோடிக்கு மேல் சென்னையில் மட்டும் வசூல் ஆனது. சென்னையில் மட்டும் சந்திரமுகியின் வசூல் சாதனையை உடைத்தது. ஆனால் அதையெல்லாம் தூக்கி சாப்பிடுவது போல் சிவாஜி படம் சென்னையில் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் அளவுக்கு அதிகமான திரையரங்குகளில் வெளியானது.
இந்த சிவாஜி படம் தான் இன்று எல்லா பட வெளியீடுகளுக்கும் முன்னோடி. அதன் பின் ரஜினி நடித்த அனைத்து படங்களுமே மிக அதிக திரையரங்குகளில் வெளியாகின. அதற்கெல்லாம் உச்சம் வைத்தது போல் எந்திரன் படம் வெளியானது.தமிழகத்தில் முதன்முதலாக ஏறக்குறைய 800 திரையரங்களில் வெளியான படம் எந்திரன். கமலுக்கு தசாவதாரம் படம் மட்டுமே மிக அதிக திரையரங்குகளில் வெளியானது. ரஜினி கமல் இந்த இருவருக்கு மட்டுமே அப்பொழுது தியேட்டர்கள் அதிகமாக கிடைத்தன. மற்றபடி அஜித் விஜய் போன்ற நடிகர்களுக்கு எப்போதும் போலவே சராசரியான தியேட்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. துப்பாக்கிக்கு பிறகு விஜய்க்கும், மங்காத்தாவிற்கு பிறகு அஜித் படங்களுக்கும் தியேட்டர்கள் கணிசமான அளவில் உயர்த்தப்பட்டது.அது இப்போது அஜித் ,விஜய் மட்டும் அல்லாமல் மற்ற முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கும் 500, 600 தியேட்டர்களில் படம் வெளியிடப்படுகிறது.

சிவாஜி எம்ஜிஆர் காலத்தில வெறும் முப்பது தியேட்டர்களில் வெளியான படங்கள் எல்லாம்
இன்று 800 என்ற கணக்கை தொட்டு விட்டன. எனவே அதிக நாட்கள் என்பது இன்று கிடையவே கிடையாது. குறைந்த நாட்களில் எவ்வளவு வசூல் என்று தான் பார்க்க வேண்டும்.

வெறும் 100 தியேட்டர்களில் வெளியான ஒரு படம் 20 தியேட்டரில் நூறு நாட்கள் ,5 தியேட்டர் ல 175 நாட்கள் ஓடி பெற்ற வசூலை இன்று ஒரே வாரத்தில் இன்றைய படங்கள் பெற்று விடுகின்றன. முன்பெல்லாம் ஆங்கில படங்கள் தான் அப்படி செய்யும். அவர்களுக்கு படம் ஓடும் நாட்களின் எண்ணிக்கை முக்கியமல்ல. படத்தின் மொத்த வசூல்தான் முக்கியம்.இதை கமல் பலமுறை வலியுறுத்தியுள்ளார்.ஒரு சினிமாவுக்கு டிக்கெட் கிடைப்பது என்பது பொட்டி கடையில் வாழைப்பழம் கிடைப்பது போல மிக எளிதான விடயமாக இருக்க வேண்டும் என்று அவர் கூறியதை அப்போது யாரும் ஏற்கவில்லை.மேலும் தான் நடித்த படமான ஆளவந்தானுக்கு அளவு கடந்த எதிர்பார்ப்பு உள்ளதை உணர்ந்த கமல் தமிழ்நாட்டில் அதிகபட்ச திரையரங்குகளில் வெளியிடக்கோரி எல் தயாரிப்பாளர் தாணுவை கேட்டுக் கொண்டார். ஆனால் அப்படி செய்தால் அதிக நாட்கள் படம் ஓடாது என்று வருத்தப்பட்டார் தாணு.அப்போதெல்லாம் 100 நாட்கள் விழா ,175 நாட்கள் விழா தான் ரொம்ப பெருமையாக பார்க்கப்பட்டது அதுவே படத்தின் பெரிய வெற்றியாகவும் பார்க்கப்பட்டது. இப்போது போல அன்றைக்கு வசூல் நிலவரங்களை வெளியிட மாட்டார்கள். படம் ஓடிய நாட்களை மட்டுமே குறிப்பிடுவார்கள். அதனால் கமல் சொன்னதை தாணு கேட்கவில்லை. ஒருவேளை அப்படி செய்திருந்தால் பெரிய அளவில் அவருக்கு நஷ்டம் வந்திருக்காது. படம் நல்லாயில்லை என்று நாலு பேர் சொல்லுவதற்கு முன்பே அனைவரும் படத்தை பார்த்திருப்பார்கள். இந்த டெக்னிக்கை பயன்படுத்தி தான் இன்று பெரிய நடிகர்கள் நடிக்கும் பல தோல்விப் படங்கள் தப்பித்து விடுகின்றன. இல்லேன்னா பீஸ்டு வலிமை அண்ணாத்தே போன்ற படங்கள் பெரிய வசூல் ஆகி இருக்காது. தயாரிப்பாளர்களுக்கு மரண அடியை கொடுத்திருக்கும்.

அதேபோல பிலிம் சுருளில் படப் பிரதிகள் போடப்பட்டவரை அதிக திரையரங்குகளில் படங்களை வெளியிட முடியவில்லை. டிஜிட்டல் முறையில் படத்தை எடுக்க ஆரம்பித்த பொழுதுதான் அதிக திரையரங்குகளில் படத்தை வெளியிட முடிந்தது. தமிழில் முதன்முதலாக டிஜிட்டல் முறையில் எடுக்கப்பட்ட படம் “மும்பை எக்ஸ்பிரஸ்”. அப்போது கமல் அதைப்பற்றி விரிவாக சொன்னார். நேரடியாக படங்கள் பிலிம் சுருளில் ஓடாது. சாட்டிலைட் மூலம் படங்கள் திரையரங்குகளில் தரவிறக்கம் செய்யப்பட்டப் பின் ஓடும். இதனால் ஏராளமான தியேட்டர்களில் படத்தில் ஒரே நேரத்தில் வெளியிட முடியும் என்று சொன்னார். அது இன்று நடக்கிறது.

எத்தனை திரையரங்குகளில் வேண்டுமானாலும் படத்தை வெளியிட முடியும் என்று நிலை இப்பொழுது இருக்கிறது. அதை பயன்படுத்தியே இன்றைய படங்கள் மிகப் பெரிய வசூலை குறுகிய காலத்தில் அடைகிறார்கள். அளவு கடந்த அளவில் படங்கள் வெளியாகும் இந்த காலகட்டத்தில் திரையரங்குகளும் நீண்ட நாட்கள் ஒரு படத்தை ஓட்டுவதை விரும்பவில்லை. அவனுக்கு தேவையான கன்டென்ட் வாராவாரம் அதிகமாகவே கிடைக்கிறது.

எனவே இப்படி ஒரு காலகட்டத்தில் விக்ரம் போன்ற படங்கள் 100 நாட்களைக் கடப்பது என்பது பெரும் சாதனைதான்.

-மன்னை செந்தில்பக்கிரிசாமி

Leave a Reply