பள்ளிக்கல்வித்துறை சார்பில் எதிர்வரும் ஜூலை 5 & 6 இரு நாட்கள் தஞ்சாவூர் மண்டல அளவிலான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள அனைத்துவகை அரசுப் பள்ளிகளில் மேற்கொள்ளவிருக்கும் இயக்குநர் தலைமையிலான உயர்மட்ட பள்ளி ஆய்வில் மாணவர்கள், வீட்டுப் பாடக் குறிப்பேடு, வகுப்பறைச் செயல்பாட்டுக் குறிப்பேடு, சொல்வதெழுதுதல் குறிப்பேடு, இரட்டை மற்றும் நான்கு வரிக் குறிப்பேடுகள், கருத்து மற்றும் மன வரைபட குறிப்பேடுகள், கட்டுரை குறிப்பேடுகள், அறிவியல் செயல்திட்டக் குறிப்பேடு முதலானவை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
பள்ளி திறந்து இருபது நாள்களுக்கு மேலாகியும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பள்ளி திறக்கும் நாளன்று அரசால் வழங்கப்படும் இலவசப் பாடக் குறிப்பேடுகள் இன்னும் எங்கள் திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்தில் வழங்கப்படவில்லை. அப்படியே அரசால் வழங்கப்படும் பாடக் குறிப்பேடுகள் மாணவர்களின் முழுத்தேவையையும் நிறைவு செய்வதாக இருப்பதில்லை. பக்க அளவும் குறைவு. தமிழ், ஆங்கில கட்டுரைகள், கணித வரைபட குறிப்பேடுகளைத் தவிர பாடத்திற்கு ஒன்றாக அளிக்கப்படும் குறிப்பேடுகள் அனைத்தும் சிறியவையே ஆகும்.
குடும்ப வறுமை காரணமாகப் பள்ளிப் பிள்ளைகள் இவற்றின் கூடுதல் வெளிச்சந்தை விலையால் காலத்தில் இவற்றை வாங்க முடியாமல் தவிப்பதும் உணர முடிகிறது. இந்த நிலையில் அனைத்து ஏழை, எளிய, அடித்தட்டு மாணவர்களுக்குத் தேவைப்படும் மேற்சுட்டப்பெற்ற அனைத்துப் பாடம் சார்ந்த குறிப்பேடுகளையும் வகுப்பு அல்லது பாட ஆசிரியர்கள் தம் சொந்த பொறுப்பில் வாங்கித் தருவதும் இயலாத ஒன்று.
ஆறுமாத காலமாகியும் அகவிலைப்படி உயர்வைப் பெற முடியாமல் ரூ.1500 முதல் 3000 வரை மாதந்தோறும் இழப்பை எதிர்கொண்டு பல்வேறு அரசு மற்றும் கடன் பிடித்தங்கள் போக மாத ஊதியத்தில் கிடைக்கும் எஞ்சியவற்றைக் கொண்டு வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் போன்றவற்றை அடைத்து அதன்பின் எஞ்சும் சொற்ப தொகையில் குடும்ப செலவுகளைச் சமாளித்துக் கரையேறுவதே இன்றைய விண்ணை முட்டும் விலைவாசி உயர்வில் பெரும்பாடாக இருப்பதாக ஆசிரியர்கள் பலரும் குறிப்பிடுகின்றனர்.
இத்தகைய சூழலில், தன்னார்வலர்கள், கல்விப் புரவலர்கள் மற்றும் ரசிகர், நற்பணி மன்றத்தினர் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக் குழந்தைகளின் கல்வி சிறக்க உரிய, உகந்த காலத்தில் இதுபோன்ற பேருதவிகளைத் தாம் சார்ந்த பள்ளிக்கு வாரிவழங்கி அறம் செய விரும்புவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டியது அவரச அவசியமாகும்.
—
முனைவர். மணி கணேசன்,
மன்னார்குடி.