Home>>அரசியல்>>தமிழ்நாட்டில் இணையவழி சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும்.
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடு

தமிழ்நாட்டில் இணையவழி சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என்று உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி அவர்களை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். அப்போது ஆன்லைன் சூதாட்டத்தை ரத்து செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி கடிதம் ஒன்றையும் வழங்கினார். அந்தக் கடிதத்தின் விவரம் வருமாறு:

பெறுநர்:
திரு. பணீந்திர ரெட்டி அவர்கள்,
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்,
உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை
தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம்,
சென்னை & 600 009

அன்புடையீர், வணக்கம்!

(பொருள்: தமிழ்நாட்டில் தற்கொலைகளுக்கும், கொலைகள், கொள்ளைகள் உள்ளிட்ட குற்றங்களுக்கும் வழி வகுக்கும் ஆன்லைன் சூதாட்டங்களை நிரந்தரமாக தடை செய்து அவசர சட்டம் பிறப்பிக்கக் கோருதல் & தொடர்பாக)

தமிழ்நாட்டின் மிகப்பெரிய சமூகக் கேடாக உருவெடுத்துள்ள ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு அதற்காக கடந்த 6 ஆண்டுகளாக குரல் கொடுத்தும், போராடியும் வரும் கொடுத்து வரும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் என்ற முறையில் எனது ஆதரவையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆன்லைன் சூதாட்டங்களில் சிலவற்றை தடை செய்யலாம்; மற்றவற்றை ஒழுங்கு படுத்தலாம் என்ற சிந்தனையில் தமிழக அரசு இருப்பதாகவும், அதனடிப்படையில் தான் பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் தமிழ்நாடு அரசு கருத்துகளை கேட்டறிந்து வருவதாக அறிகிறேன். தமிழ்நாட்டை பொறுத்தவரை அனைத்து வகையான ஆன்லைன் சூதாட்டங்களும் முழுமையாக தடை செய்யப்பட வேண்டும்; அது தான் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும். இது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு என்பதை தங்களின் வாயிலாக தமிழக அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததற்கான முதன்மைக் காரணம், ஆன்லைன் சூதாட்டம் திறமையின் அடிப்படையிலான விளையாட்டு அல்ல…. அதிர்ஷ்டத்தின் அடிப்படையிலான விளையாட்டு என்பதை நிரூபிப்பதற்கான காரணிகள் எதுவும் கடந்த 26.02.2021 அன்று தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் இல்லை என்பது தான்.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்ற எண்ணம் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இல்லை என்பதை நீதிமன்றமே தெரிவித்திருக்கிறது. ஆன்லைன் சூதாட்டம் அதிர்ஷ்டத்தின் அடிப்படையிலான விளையாட்டு தான்; திறமையின் அடிப்படையிலான விளையாட்டு அல்ல என்பதை விளக்கும் வகையிலான பிரிவுகளை சேர்த்து ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து புதிய சட்டம் இயற்றலாம் என்று கடந்த 03.08.2021 அன்று அளித்தத் தீர்ப்பில் உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

ஆன்லைன் சூதாட்டம் முழுக்க முழுக்க அதிர்ஷ்டத்தின் அடிப்படையிலான விளையாட்டு என்பதை நிரூபிப்பது கடினமானது அல்ல. ஆன்லைன் ரம்மி ஆட்டத்தில் ஒருபுறத்தில் மனிதர்கள் ஆடினால், மறுபுறத்தில் ஆடுபவை மென்பொருள் மூலம் வடிவமைக்கப்பட்ட ரோபோக்கள். ஆன்லைன் ரம்மி விளையாடும் போது முதலில் ஒரு சில ஆட்டங்களில் மனிதர்கள் வெற்றி பெறுவர். அதனால் தொடர்ந்து வெற்றி பெறலாம் என்று நம்பும் மனிதர்கள் அடுத்தடுத்து பணம் கட்டி விளையாடும் போது, அவர்களுக்கு தோல்வியே பரிசாக கிடைக்கும். அதற்கேற்ற வகையில் தான் ஆன்லைன் சூதாட்டங்களின் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை ஆதாரங்களுடன் விளக்கி, ஆன்லைன் ரம்மி என்பது திறமை சார்ந்த விளையாட்டு அல்ல என்று நிரூபிக்க முடியும். அவ்வாறு இயற்றப்படும் புதிய சட்டத்தை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் மறுக்காமல் ஏற்றுக் கொள்ளும்.

ஆன்லைன் சூதாட்டம் திறமை அடிப்படையிலான அல்ல என்பதை எவ்வாறு நிரூபிப்பது? என்பது தொடர்பான பரிந்துரைகளை வழங்க வேண்டும் என்பது தான் கடந்த 11.06.2022 அன்று அமைக்கப்பட்ட வல்லுனர் குழுவுக்கு வழங்கப்பட்ட பணியாகும். அந்தக் குழு அளித்த அறிக்கையில் இதுதொடர்பாக இடம் பெற்றுள்ள பரிந்துரைகளையும் தமிழக அரசு கலந்தாய்வு செய்து புதிய சட்டத்தில் சேர்க்கலாம்.

ஆன்லைன் சூதாட்டம் மனித குலத்திற்கு எதிரானது ஆகும். ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் மனிதர்களின் ஆசையைத் தூண்டி ஆன்லைன் சூதாட்டத்தை விளையாட அழைக்கின்றன. ஒரு குறிப்பிட்ட எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால், ரூ.10000 போனசாக வழங்கப்படும்; அதை வைத்துக் கொண்டு ஆன்லைன் ரம்மி விளையாடலாம்; அதிகபட்சமாக ரூ.2.5 கோடி வரை வெல்லலாம் என்றும் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. அத்தகைய விளம்பரங்களைப் பார்த்து ஒரு லட்சம் பேராவது ரூ.10 ஆயிரம் போனசுக்கு ஆசைப்பட்டு, அதை வாங்கி சூதாடத் தொடங்கி இருப்பார்கள். அடுத்த ஒரு வாரத்தில் போனசாக வாங்கிய 10 ஆயிரத்தையும் இழந்து, கூடுதலாக ரூ.10 ஆயிரத்தையும் இழந்திருப்பர்.

ஆன்லைன் ரம்மி விளையாடும்போது முதலில் ஒருசில ஆட்டங்களில் மனிதர்கள் வெற்றி பெறுவர். அதனால் தொடர்ந்து வெற்றி பெறலாம் என்று நம்பும் மனிதர்கள், அடுத்தடுத்து பணம் கட்டி விளையாடும்போது, அவர்களுக்குத் தோல்வியே பரிசாகக் கிடைக்கும். அதற்கேற்ற வகையில்தான் ஆன்லைன் சூதாட்டங்களின் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை உணராமல், ஆன்லைன் ரம்மி ஆட்டத்துக்கு அடிமையானவர்கள், மீண்டும் மீண்டும் விளையாடிப் பணத்தை இழப்பார்கள். இறுதியில் அவர்களில் பலர் தற்கொலை செய்து கொள்வார்கள். இது மறுக்க முடியாத உண்மை.
தமிழ்நாட்டில் கடந்த 2016&ஆம் ஆண்டில் தொடங்கி இன்று வரை குறைந்தது 60 முதல் 70 பேர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டிருக்கக் கூடும். 2020&ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2021&ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3&ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட்டிருந்தது. அதற்கு பிறகு இன்று வரையிலான ஓராண்டில் மட்டும் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை, கொலை என மொத்தம் 28 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

ஆன்லைன் சூதாட்டங்கள் மக்களிடமிருந்து பணத்தை பறிக்கின்றன; அதனால் அவர்கள் பணத்தை இழந்து கடனாளியாக மாறுகின்றனர்; ஒரு கட்டத்தில் நிலைமையை சமாளிக்க முடியாத போது அவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இது அனைவரும் அறிந்த உண்மை. கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை என்பதைப் போல, ஆன்லைன் சூதாட்டங்கள் மனித உயிர்களை பறிக்கின்றன; ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களை சீரழித்து நடுத்தெருவுக்கு கொண்டு வருகின்றன என்பது மிகவும் தெளிவாகத் தெரியும் நிலையில் அவற்றை தடை செய்வதில் அரசுக்கு எந்த தயக்கமும் தேவையில்லை.
ஆன்லைன் சூதாட்டங்கள் கொடிய சமூகத் தீமை என்பதை மத்திய அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது.

அதனால் தான் ஆன்லைன் சூதாட்டங்கள் தொடர்பான விளம்பரங்களை வெளியிடக்கூடாது என்று காட்சி ஊடகங்களையும், அச்சு ஊடகங்களையும் மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறது. ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் விளம்பர தூதர்களாக செயல்பட்டு வந்த திரைப்பட நடிகர்களும், விளையாட்டு வீரர்களும், அதன் தீமைகளை உணர்ந்து, இனி ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடிக்கப் போவது இல்லை என்றும் உறுதியளித்துள்ளனர். இத்தகைய முடிவை தமிழ்நாடு அரசும் மேற்கொள்ள வேண்டும்.

எனவே, தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை, உரிய காரண, காரியங்களின் அடிப்படையில் தடை செய்து உடனடியாக அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று அரசை கேட்டுக் கொள்கிறேன்.


மருத்துவர் அன்புமணி ராமதாசு,
மாநிலங்களவை உறுப்பினர்,
பாட்டாளி மக்கள் கட்சி.

Leave a Reply