Home>>தொன்மை>>“கோபல்ல கிராமமும் அதன் மக்களும்”
தொன்மைநூல்கள்

“கோபல்ல கிராமமும் அதன் மக்களும்”

சமீபத்தில் மன்னார்குடியில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் “கோபல்லபுரத்து மக்கள்” புத்தகத்தை வாங்க முடியவில்லை. கோபல்ல கிராமம் புத்தகம் மட்டுமே வாங்க முடிந்தது.
200 வருஷங்களுக்கு முன்பு ஆந்திராவைச் சேர்ந்த நாயக்கர்கள் எவ்வாறு தமிழகத்தில் குடி பெயர்ந்தார்கள்,எவ்வாறு தங்கள் வாழ்வியலை இங்கே அமைத்தார்கள் என்பதை பற்றி விலாவாரியாக மிக அருமையாக சொல்லப்பட்டிருக்கும் நாவல் “கோபல்ல கிராமம்”.
ஸ்ரீரங்கம் கோவில்பட்டி உட்பட்ட தென் மாவட்டங்களில் இன்று தெலுங்கர்கள் எவ்வாறு குடிபெயரந்தார்கள் என்பதை இந்த புத்தகத்தை படிக்கும் போது நாம் உணர்ந்து கொள்ள முடியும்.
எப்ப பாத்தாலும் தமிழ்நாட்டில் தமிழர் யார், யார் என்று ஊடகங்களில் விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும்.அதற்கெல்லாம் கி.ரா அவர்கள் தெள்ளத்தெளிவாக விடையளித்துயிருக்கிறார். ஆகவே தமிழ்நாட்டில் தமிழர்கள் யார் என்று அவசியம் தெரிந்தேயாக வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் தயவு செய்து இந்த கோபல்ல கிராமம் புத்தகத்தை படியுங்கள்.

அதே போல, கோபல்ல கிராமம் புத்தகத்தின் தொடர்ச்சியாக வரும் கோபாலபுரத்து மக்கள் என்பது வாழ்வில் ஒரு முறையாவது நாம் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். கோபல்ல கிராமம் படித்தபின் கோபாலபுரத்து மக்கள் புத்தகத்தை படிக்க நேர்ந்தது.பலர் இந்த புத்தகத்தை படிக்க சொல்லி பரிந்துரை செய்தார்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கூட இதை பரிந்துரைத்தார் என்று நினைக்கிறேன்.
கிட்டத்தட்ட 20 புத்தகங்களை தேடிப்படித்து பெற்றுக்கொள்ளும் அறிவை இந்த ஒரு புத்தகம் வழங்குகிறது. கோபல்ல கிராமம் என்ற ஊரில் வாழ்ந்த வேறுபட்ட மனிதர்களின் வாழ்க்கை முறை, அவர்கள் பழக்க வழக்கங்கள், அவற்றை சொல்வதோடு மட்டுமல்லாமல் நமக்கு தெரியாத பல விஷயங்களை கதாபாத்திரங்கள் வாயிலாகவே சொல்லியிருக்கிறார்.
கிழக்கிந்தியகம்பெனி ஆட்சி வருவது முதல்,பின் பிரிட்டிஷ் விக்டோரியா மகாராணி அதை கைப்பற்றிய பிறகு வரும் பிரிட்டிஷ் ஆட்சியில் தொடர்ந்து,பின் இந்தியா சுதந்திரம் அடையும் வரையிலான கிட்டத்தட்ட 200 வருட காலகட்டத்தை சிறப்பாக காட்சிப்படுத்தி யுள்ளார்.இதில் பெரிதும் வியக்கும் அளவுக்கு அவர் சொன்ன விடயங்கள் அல்லது தகவல்கள் என்று பார்த்தால்,அந்த ஊரிலுள்ள ஒரு காளை மாட்டப்பற்றி பேசினால் அதன் வகைகள் அதனுடைய இயல்பு அனைத்தையும் விளக்குகிறார்.குடிக்கின்ற கள் பற்றி பேசினால் அதைப் பற்றியும் விளக்குகிறார். பொலி காளை என்றால் என்ன? பஞ்சாயத்தில் நடுவராக இருப்பவருக்கு கள் வழங்கும் பழக்கம் ஏன் ஏற்பட்டது? அந்த சம்பிராயத்தின் அடிப்படையில்தான் பஞ்சாயத்துகளில் சொம்பில் தண்ணீர் வைக்கிறார்கள் போல என்பதை நாம் பூடகமாக தெரிந்து கொள்ள வைக்கிறது.தீப்பெட்டிகள் இல்லாத ஒரு காலகட்டத்தில் நெருப்பு எவ்வாறு ஒரு முக்கியமான அங்கமாக இருந்தது. நெருப்பு தானம் என்றால் என்ன? வெள்ளைக்காரன் வந்த பிறகு முதன்முதலாக ரயில் வந்த போது என்ன மனநிலையில் இருந்தார்கள்,டார்ச் லைட்,இங்க்பேனா,தாளில் புத்தகம் வந்த போது,புதிய பள்ளிக்கூடங்கள் ஜாதி வேறுபாடு இல்லாமல் அகர வரிசையில் மாணவர்கள் உட்கார வைக்கப்பட்ட போது அப்போது இருந்த மக்களின் மன ஓட்டம், செவ்வாய்க்கிழமை விரதத்தின் பெயரில் வழங்கப்படும் செவ்வாய்ப் பிள்ளையார் கொழுக்கட்டை கதைகள், வன்னி மரம்தூக்குதல் போன்ற வீரவிளையாட்டுகள், உடன்கட்டை ஏறுதல் பற்றிய விளக்கம், பூப்படையாத பெண்கள்,மாதவிடாய் நேரத்தில் உள்ள பெண்கள், கர்ப்பிணி பெண்கள், கைக்குழந்தையோடு இருக்கும் பெண்கள் இவர்கள் நால்வரும் உடன்கட்டை ஏற தகுதியற்றவர்கள் என்ற விடயத்தையும் விளக்கியுள்ளார். அதேபோல உணவுக் கலாச்சாரம் பற்றி மிக விரிவாக எழுதி இருக்கிறார். அரிசி உணவு என்பது அந்த கால மக்கள் மனதில் எவ்வளவு பெரிய உயர்வான விடயமாக இருந்தது,பர்மாவில் இருந்து வந்த அரிசி குருணைகளை எந்த அளவுக்கு மக்கள் ருசித்து உண்டார்கள் என்பதையும்,சாமிக்கு பால்குடம் எடுப்பது போல மதுக்குடம் (அதாவது தானியங்கள் மூலம் வரும் புளித்தக்கள்) எடுக்கும் பழக்கம் இருந்ததை பற்றியும் மற்றும் இன்னும் ஏராளமான விஷயங்களை நமக்கு கொடுத்துகிட்டே இருக்கார்.
இது எல்லாவற்றையும் விட விடுதலைப் போராட்ட கதையை அவர் விவரித்தவிதம் அற்புதம்.
தங்களது தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக எவ்வாறு சுதந்திரஉணர்வு ஒவ்வோருவர் மனதிலும் வேறுபடுகிறது என்பதை ஒவ்வோர் கதாபாத்திரங்கள் வாயிலாக சுவாரசியமாக விவரித்துயிருப்பார்.ரயில் வரும் சத்தத்தை கேட்டு மிரண்டு ஓடும் ஆட்டு மந்தையை பார்த்த மேய்ப்பவன் இந்த வெள்ளைக்கார ஆட்சி ஒழிய வேண்டும் என்று நினைப்பார் அப்பதான் ரயில் வராது,நாம நிம்மதியாக ஆடு மேய்க்கலாம் என்ற நினைப்பு.அவரவர் பிரச்சனை அவர்களுக்கு.
மது அருந்துபவர்கள் காந்தி மதுவிலக்கை பிரச்சாரம் செய்கையில் அதை விமர்சித்து “இவர் மதுவிலக்கை கொண்டுவந்தால்தான் வெள்ளைக்காரன் சுதந்திரம் கொடுப்பானா”என்று கேலியாக பேசுவது,
முதல் உலகப்போர் மட்டும் இரண்டாம் உலகப் போரின் போது கட்டாயமாக ராணுவத்தில் ஆள் சேர்ப்பதற்காக ஆங்காங்கே உயரமாக வாட்ட சாட்டமாக உள்ளவரை தேடி காவலர்கள் அலைவார்கள்.அவர்கள் வரும் நேரம் உயரமான அனைவரும் வீட்டுக்குள் ஓடி ஒளிந்து விடுவார்கள். அந்த நேரத்தில் வைக்கோல் போருக்குள் நீண்ட நேரம் ஒளிந்த ஒருவர் அதன் அரிப்பு தாங்காமல் இந்த வெள்ளைக்காரன் எப்ப தான் நாட்டை விட்டு ஒழிவார்கள் இந்த நாட்டுக்கு எப்ப தான் சுதந்திரம் கிடைக்கும் என்று எண்ணுவார்.இதுபோன்ற பிளாக் காமெடியும் ஆங்காங்கே இருக்கும்.
அதேபோல ஒட்டப்பிடாரம் தாலுகாவுக்கு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவர் தாசில்தாராக இருந்தாலும் அவரை ஒட்டப்பிடாரம் ஊர் மக்கள் மதிக்க மாட்டேங்குறார்கள். அரசு அதிகாரியாகவே இருந்தாலும் அவர் அந்த ஊரிலே தங்க அனுமதிமறுக்கிறார்கள். ஒட்டப்பிடாரம் என்பது உயர்சாதியினராக கருதப்படுபவர்கள் வாழும் ஊர்.அதனால் கோவில்பட்டியில் இருந்து தங்கி அவர் தினமும் அலுவலகத்துக்கு வருகிறார்.ஒருமுறை ஒரு வெள்ளைக்கார கலெக்டர் முன்னால் தாமதமாக தான் வந்ததற்கான காரணத்தை சொல்ல, அவர் தாலுகா அலுவலகத்தை ஒட்டப்பிடாரத்திலிருந்து கோவில்பட்டிக்கு மாற்றி விடுகிறார். இந்த சம்பவம் சாதி வெறியர்கள் மத்தியில் ஒரு கோவத்தை ஏற்படுத்துகிறது. வெள்ளைக்காரர்களை சாதி வெறியால் எதிர்த்தவரும் உண்டு.கெடுவாய்ப்பாக அவர்களும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்று கணக்கில் வருகிறார்கள். இதுபோன்ற பல விஷயங்களை பக்கத்துக்கு பக்கம் கொடுத்துக் கொண்டேயிருக்கிறார். ஒரு தகவல் களஞ்சியம் போல உள்ளது.
மேலும்,
நாம் இதுவரை எந்த பாடப்புத்தகத்திலும் படித்திராத பல சம்பவங்களைச் சொல்லியிருக்கிறார் இரண்டாம் உலகப்போர் நடந்த விதம்,சுபாஷ் சந்திர போஸின் லட்சியம், காந்தி,நேரு அவர்களின் துரோகம் என பலப் புது விடயங்களை சொல்லியிருக்கிறார்கள். முத்தாய்ப்பாக இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கக் காரணமான மிகமுக்கிய ஒரு நிகழ்வை விவரித்து எழுதியிருக்கிறார் . இந்த ஒரு சம்பவத்திற்காகவே இந்த புத்தகத்தை தாளமாக வாங்கிப்படிக்கலாம் இரண்டாம் உலகப்போருக்கு பின் 1946 ல நடந்த கப்பல் மாலுமிகள் புரட்சி பற்றி விரிவாக எழுதியுள்ளார் ஒவ்வொருவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய
வரலாறு இது. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கக் காரணமாக இருந்ததே இந்த நிகழ்வுதான். ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பிறகு 300க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட ஒரு கொடூர சம்பவம் அது. திட்டமிட்டு அந்த சம்பவம் மறைக்கப்பட்டுள்ளது போலவே தோணுகிறது. அந்த உண்மை வெளிவந்தால் ஒட்டு மொத்த இந்தியாவே மதிக்கும் பல தேசியத் தலைவர்களின் மோசமான மறுபக்கம் தெரிந்துவிடும். நிச்சயமாக பொய்யான ஒரு வரலாற்றை
சாகித்ய அகடமி விருது பெற்ற புத்தகம் ஒன்றில் சொல்லியிருக்க வாய்ப்பில்லை.இந்திய விடுதலை எப்படி சாத்தியமானது?? காந்தி, நேரு ,படேல் போன்றவர்கள் காரணமா?அவர்கள் செய்த துரோகத்தின் பலனாகத்தான் இந்தியா சுதந்திரம் சாத்தியமானதா என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. அந்த குற்ற யுணர்ச்சி காந்தியின் மனதில் ஆழமாக பதிந்துயிருந்ததால் என்னவோதான்,சுதந்திரம் கிடைத்த பின் இந்திய விடுதலை பற்றி அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அவர் சொன்ன ஒரே பதில் .
Nothing ..ஒன்றுமில்லை..
ஆம்.ஒன்றுமில்லை இப்படி சொல்லித்தான் நாவல் முடிக்கப்படும்.

இந்திய விடுதலை வரலாறுப்பற்றிய புத்தகங்களில் மிக முக்கியமானது,அவசியமானது இந்த “கோபாலபுரத்து மக்கள்”.

-மன்னை செந்தில் பக்கிரிசாமி.

Leave a Reply