Home>>இதர>>“96”-காலத்தால் அழியாத காவியம்
இதரதிரை விமர்சனம்

“96”-காலத்தால் அழியாத காவியம்

96 என்னும் காவியம்.
பொதுவாக ஒரு படம் திரையரங்கை விட்டு வெளியே வந்த உடனே நம்மை விட்டு அகல்கிறது என்றால் அது சராசரி படம். பணம் விட்டு வெளியே வந்த பிறகும் அதன் பாதிப்பு நம்மை தொடர்ந்தால் அது நல்ல படம்.
படம் வந்து நான்காண்டுகள் ஆனாலும் நம் மனதை விட்டு அகல வில்லை என்றால் அது “காவியம்”
2018 அக்டோபர் 4 ம் தேதி வெளி வந்த 96 அப்படிப்பட்ட ஒரு காவியமாகதான் நம் மனதில் வாழ்கிறது.
இந்த படத்தையோ அல்லது இந்த படத்தின் பாடல்களை கேட்டாலோ மனதில் ஆழம் வரை சென்று துளைத்து விடும்.. எத்தனை முறை படத்தைப் பார்த்தாலும் எத்தனை முறை பாடல்களைக் கேட்டாலும் முதல் முறை கொடுத்த அதே தாக்கத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்துகிறது.
குறிப்பாக,
*சிங்கப்பூரிலிருந்து வந்த ஜானுவின் கண்கள் ராமை தேடுவதும் பின் ராம் வந்திருக்கான் என்ற செய்தியை கேட்டவுடன் ஜானு முகத்தில் ஏற்படும் அந்த தாபம்,…
*ஒரு பெண்ணின் மீது கொண்ட காதலால் உருவாகும் பரவசத்தின் உச்சம் பயம்.ராம் அந்த உச்சத்தில் இருப்பார். அந்தப்பரவசமே அவருக்கு ஒரு வித பதட்டத்தையும் பயத்தையும் ஜானு மீது ஏற்படுத்தியிருக்கும்.. ஜானு வருவாள் என்று முன்பே தெரிந்த ராம் தனிமையை நாடச் செல்வார். அவரால் நேருக்கு நேர் ஜானுவை பார்க்கவே முடியாது.

*ஜான் தன் மகளின் போட்டோவை செல்போனில் காண்பிக்க அதை பார்க்கத் துடிக்கும் ராமின் ஏக்கம்,தான் காதலித்த பெண்ணின் குழந்தை எப்படி இருக்கும்ன்னு பார்க்கும் அந்த ஏக்கம் கண்களில் தீர்க்கமாக வெளிப்படும்.
*தான் தங்கி இருக்கும் ஹோட்டலில் தன்னை விட வந்திருக்கும் ராமை பிரிய மனமில்லாமல் ஹோட்டலுக்குள் திரும்பி செல்வாள் ஜானு.அந்த நேரத்தில் வரும் அந்த வசந்த காலங்கள் பாடல், என்னவென்று சொல்வது…
அதே நேரத்தில் ராமும் ஜானுவை விட்டு பிரிய மனசில்லாமல் ஹோட்டல் வாசலில் நிற்கிறார். அப்போது ஜானு பேசிய வசனம் அனைவருக்கும் தெரியும்.புதுசா சொல்ல வேண்டியதில்லை..
*தன் கல்யாணத்தில் கூட ராமை எதிர்பார்த்ததாகவும் கடைசி நேரத்தில் ராம் வந்து கல்யாணத்தை நிறுத்தி விடுவார் என்ற நம்பிக்கையும் இருந்ததாக ஜானு சொல்வார். அப்போது அதை அமைதியாக ராம் கேட்டு கடந்து செல்வார் . பின்னர் ஒரு சமயம் ஜானுவை பற்றி பேசும் போது அவ கல்யாணத்தில் அவர் கட்டிய புடவை நிறத்தை சரியாக சொல்வார்.. அப்ப நான் கல்யாணத்துக்கு வந்தேன் என்று ராம் சொல்லும் போது ஜானுவின் ஆச்சரியம் கலந்த ஆதங்க உணர்வு ஏமாற்றத்தை அடைந்த ஒரு துரோகத்தின் வலியாக கண்ணீராக வெளிப்படும்…
*ராமின் வீட்டில் அவர் பயன்படுத்திய சோப்பை பயன்படுத்துவதும் அவர் போட்ட சட்டையை போட்டு பார்க்கும் ஜானு அதில் உள்ள வாசத்தை முகர்ந்து பார்ப்பார்.
*ஹோட்டலில் ராமின் மாணவர்கள் முன் ஜானு தன் வாழ்க்கையில் தான் தவறவிட்ட ஒரு முக்கிய நிகழ்வை இப்படித்தான் அது நடந்திருக்க வேண்டும் என்ற தன் இச்சையை கற்பனையாக ஏக்கத்தோடு விவரிப்பார். அந்த நேரத்தில் வரும் அந்த பிரசித்தி பெற்ற பின்னணி இசையும் ராமின் மன நெகிழ்வும்..

*தன் வாழ்வின் ஒவ்வொரு கணமும் தான் விரும்பிய யமுனை ஆற்றிலே பாட்டை ஜானு பாட மாட்டாளா என ஏங்கித் தவிக்கின்றான் ராம். ரசிகர்கள் நாமும் தான் அதை எதிர்பார்த்தோம். எங்கெங்கெல்லாம் ஜானு அந்த பாட்டை பாடுவாள் என்று நாம் எதிர்பார்த்த பொழுதெல்லாம் தவற விட்டுவிட்டு நாம் முற்றிலும் எதிர்பார்க்காத ஒரு தருணத்தில் அவர் அதைப்பாடுவார்..
கவித..கவித.. சிறப்பான ஒரு ஓவியர் வரையும் ஒரு அற்புதமான ஓவியத்தை ஒத்தது அந்த காட்சி.
*இரவு தூக்கத்தின் போது ஜானு கீழே படுத்திருக்கும் ராமை திடீரென மேலே கட்டிலுக்கு அழைக்கும் போது ஒருவித தயக்கத்தோடும் பயத்தோடும் ஜானுவை பார்ப்பார்.ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்தது நடக்காது. இதுதான் அந்த இயக்குனரின் வெற்றி.
*படம் போகப்போக ஒரு கட்டத்தில் இருவரும் இணைந்தாலும் தவறில்லை. ஜானு விவாகரத்து பண்ணிட்டு ராமையே கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று படம் பார்க்கும் ஒவ்வொரு மனதிலும் அந்த எண்ணத்தை விதைத்து விட்டு அதற்கு நேர்மாறான முடிவை வழங்கியிருப்பார் இயக்குனர் .அங்கு தான் இந்த படம் காலம் கடந்து பேசப்படுகிறது.

*இறுதிக் காட்சியில் கூட ராமை பிரிய முடியாமல் அழுத வண்ணம் ஜானு பிரிகையில் நிச்சயமாக அந்த இடத்தில் ஒரு முத்தத்தை அனைவரும் எதிர்பார்த்து இருப்பார்கள். ஆனால் ராம் மட்டும் அதை எதிர்பார்க்கவில்லை.
ராமின் தேவையெல்லாம் ஜானுவைப் பற்றிய சில நினைவுகள் மட்டுமே. ஏற்கனவே இருந்த நினைவுகளோடு புதிதாக ஜானு போட்டிருக்கும் உடைகளும் சேர்ந்து விடுகிறது. அது மட்டுமே ராமுக்கு போதும் தனது சொச்ச காலத்தை கடத்த..
இப்படி படம் நெடுகவே பல காட்சிகளை சொல்லிகிட்டே போகலாம்.
இந்த படத்திற்குப் பிறகு இதுவரை இயக்குனர் பிரேம் அடுத்த படம் இயக்கவில்லை. தேவையும் இல்லை. முன்பு குணா என்ற ஒரு படம் வந்தது அதில் அபிராமியாக நடிகை ரோஷினி நடித்திருப்பார். அதன்பின் அவர் எந்த படமும் நடிக்கவில்லை. நடிக்கவே வேண்டாம்.அபிராமி என்றால் அது அந்த நடிகை தான் என்ற எண்ணம் படம் பார்க்கும் ஒவ்வொருவர் மனதிலும் ஆழமாக பதிந்து விட்டது. அதன் பின் அவர் எந்த படம் நடித்தாலும் அபிராமியாகத்தான் மக்கள் அவரை பார்ப்பார்கள்.
அதேபோலத்தான் பிரேம் அவர்கள் வருடத்திற்கு ஒரு படம் என்ற இயக்குனர்கள் மத்தியில் வாழ்க்கைக்கு ஒரு படம் என்று இந்த 96 படத்தை எடுத்துள்ளார்..
இப்படி ஒரு காலத்தால் அழியாத காதல் காவியத்தை நமக்களித்த இயக்குனர் பிரேம் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்…
நிச்சயமாக ஆணித்தரமாக அடித்துச்சொல்வேன் ,தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த காதல் திரைப்படம் என்றால் அது 96 தான். வெண்திரையில் வரையப்பட்ட ஆகச் சிறந்த ஓவியம்.
தமிழில் எத்தனையோ காதல் படங்கள் வந்திருந்தாலும் காதலை இந்த அளவுக்கு உளவியல் ரீதியாக மனிதனின் ஆழ்மனது மெல்லிய உணர்வுகளை இத்தனைத் துல்லியமாக எந்த ஒரு படமும் காட்டியதில்லை.

விஜய் சேதுபதி திரிஷா இருவருக்குமே ஆகச் சிறந்த படம் மற்றும் ஆகச் சிறந்த நடிப்பு என்றால் இந்த படம் தான். ராம் ஜானு என்ற அந்த கதாபாத்திரங்களை விட்டு எப்படி வெளியே வர முடிந்தது அவர்களால் என்று தெரியவில்லை. நம்மாலே வர முடியவில்லை.
நிச்சயம் அந்த கதாபாத்திரங்கள் தந்த பாதிப்பில் இருந்து இன்னும் முழுமையாக அவர்கள் மீண்டிருக்க வாய்ப்பில்லை.

அப்பறம் இசை கோவிந்த் வசந்தா அவர் இனிமேல் எந்த படத்துக்கும் இசையமைக்க வேண்டியதில்லை என்று சொல்லும் அளவிற்கு தன் மொத்தத்திறமையையும் அந்த ஒரு படத்திலேயே கொட்டி விட்டார். திறமையை காட்டிவிட்டார் என்று சொல்வதை விட தன் உயிரை வார்த்து விட்டார் என்று சொல்வதுதான் சரியான பதம். இதுவரை தமிழ் சினிமாவில் எத்தனையோ ஆகச்சிறந்த இசையமைப்பாளர்கள் அற்புதமான இசையை கொடுத்திருந்தாலும்,இந்தப் படத்தின் இசை யாவற்றிற்கும் அப்பாற்பட்ட ஒரு இசையாகும். அப்படி ஒரு உன்னதமான இசையை ,தெய்வீகமான இசையை வழங்கியுள்ளார் கோவிந்த்.
படத்தில் வரும் அந்த புகழ்பெற்ற வயலின் பின்னணி இசை அனைவரையும் கவர்ந்தது என்றாலும், படத்தின் பின்னணி இசையும் வசந்த காலங்கள், தாபங்களே, இரவிங்கு தீயாய் இந்த மூன்று பாடல்களும் இதுவரை எந்த ஒரு தமிழ் சினிமாவிலும் வராத அதி அற்புதமான பாடல்கள் என்று சொல்லலாம். மேற்கொண்டு அதைப்பற்றி சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. நம் உயிர் உருகும் ஓசைதான் இதற்கான விமர்சனம்.
இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆயினும் மனதை விட்டு எளிதில் அகலாது இந்த காவியம்..இளையராஜா பாடியது போல
“கொத்து நெருஞ்சி முள்ளாய் குத்தும் நம் மனதில் என்றென்றும்”

-மன்னை செந்தில் பக்கிரிசாமி.

Leave a Reply