Home>>அறிக்கைகள்>>உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கும் ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகளை பலி கொண்ட 4 குழந்தைகளுக்கான இருமல் மற்றும் சளி சார்ந்த இந்திய நிறுவன மருந்துகள்
அறிக்கைகள்உடல்நலம்உலகம்செய்திகள்மருத்துவம்

உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கும் ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகளை பலி கொண்ட 4 குழந்தைகளுக்கான இருமல் மற்றும் சளி சார்ந்த இந்திய நிறுவன மருந்துகள்

உலகில் நடக்கும் ஒவ்வொரு விடயங்களும் இயற்கையிலிருந்து மனிதன் விலகிப் போனதன் விளைவு தான் என்பது திண்ணமாகிறது.இரண்டு வருட உள்ளிருப்பு போராட்டத்திற்கு பிறகு பெருந்தொற்று நோயிலிருந்து விடுபட்டு இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் பணம் ஒன்றையே நோக்காக கொண்டு அறம் என்பது அறவே மறந்த வியாபார நிறுவனங்களின் கையில் கல்வியும் மருத்துவமும் சென்றால் என்னவெல்லாம் நடக்கும் என்பதுதான் தற்போது ஆப்பிரிக்க நாடான கேம்பியா நாட்டில் 66 குழந்தைகளின் உயிர் பறிபோன இந்த கொடூரமான பதறவைக்கும் நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.

இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனமான புது தில்லியை தலைமையிடமாக கொண்டு அரியானா மாநிலத்தில் செயல்பட்டு வரும் Maiden Pharmaceuticals Limited என்ற நிறுவனத்தின் 4 குழந்தைகளுக்கான இருமல் மற்றும் சளி தொந்தரவுக்கான மருந்துகளில் அளவுக்கு அதிகமாக சேர்க்கப்பட்ட Diethylene Glycol/Ethylene Glycol காரணமாகவே 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டு உயிழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது தெரியவந்திருக்கிறது.

இது குறித்து உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கூறுகையில், காம்பியாவில் குழந்தைகள் இறப்புடன் 4 இருமல் மருந்துகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று அறியப்படுகிறது. இந்த குறிப்பிட்ட 4 மருந்துகளால் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்த சிறு குழந்தைகளின் உயிரிழப்பு நெஞ்சைப் பிளக்கும் அளவுக்கு வேதனை தருகிறது. அவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆறுதலைத் தெரிவிக்கிறேன். சந்தேகத்துக்குரிய 4 இருமல் மருந்துகள் குறித்தும் இந்தியாவின் மெய்டன் ஃபார்மாசுட்டிக்கல்ஸ் லிமிடட் நிறுவனத்திடமும், இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை ஆணையத்திடமும் விசாரணை மேற்கொண்டுள்ளோம் என்றார்.

சர்ச்சைக்குரிய 4 மருந்துகள்:

1.ப்ரோமேதசைன் ஓரல் சல்யூஷன்
2.கோஃபெக்ஸ்மாலின் பேபி காஃப் சிரப்
3.மேக்காஃப் பேபி காஃப் சிரப்
4.மேக்ரிப் என் கோல்டு சிரப்

ஆகிய 4 மருந்துகள் தான் தற்போது விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளன. இதுவரை இந்த 4 மருந்துகளின் தயாரிப்பு நிறுவனமானது உலக சுகாதார நிறுவனத்திற்கு இவற்றின் பாதுகாப்பு தன்மை மற்றும் தரம் பற்றி எதுவும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மருந்துகளை ஆய்வுக்கு உட்படுத்தியபோது இவற்றில் ஏற்றுக்கொள்ளத்தக்கதைவிட அதிகளவில் டை எத்தலீன் க்ளைக்கால் மற்றும் எத்திலீன் க்ளைக்கால் ஆகியன உள்ளது தெரியவந்துள்ளது. இந்த மருந்துகளில் உள்ள மூலப் பொருட்கள் மனித உயிர்களுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியவையே. இதனால் அடிவயிற்று வலி, வாந்தி, வயிற்றோட்டம், சிறுநீர் கழிப்பதில் சிக்கல், தலைவலி, மனநிலையில் குழப்பம், சிறுநீரக பாதிப்பு ஆகியன ஏற்படலாம்.

காம்பியா நாட்டு சுகாதார அமைச்சகமானது கடந்த மாதம் பாராசிட்டமால் சிரப் பயன்பாட்டைத் தவிர்க்கக் கூறியிருந்தது. அப்போது அங்கு 28 குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்திருந்தனர். இந்நிலையில் இப்போது இருமல் மருந்தால் 68 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவின் மத்திய மருந்துகள் தரம் கட்டுப்பாட்டு அமைப்பு அனுப்பிய தகவலின்படி சம்பந்தப்பட்ட நிறுவனம் மாசுபட்ட மருந்துகளையே காம்பியாவுக்கு ஏற்றுமதி செய்திருப்பது உறுதியாகியுள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

குழந்தைகளுக்கு லேசாக இருமல் சற்று தொடங்கினால் உடனே அருகில் இருக்கும் மருந்து கடைக்கு சென்று கையில் கிடைக்கும் ஒரு மருந்தை வாங்கி கொடுக்கும் வழக்கத்தை நாம் கொண்டுள்ளோம். இனியாவது எச்சரிக்கையோடு இருப்போம். முடிந்தவரை இயற்கையோடு இயைந்த வாழ்வை வாழ்வோம். இருமலுக்கு பனங்கற்கண்டு போல ஒரு அருமையான மருந்து இந்த உலகத்தில் வேறெங்கும் பார்க்க முடியாது. அதேபோல தேன், எலுமிச்சை பழம், இஞ்சி போன்ற எத்தனையோ விடயங்கள் இயற்கை எமக்கு கொடுத்திருக்கிறது .இயற்கையோடு இயைந்த வாழ்வு மட்டுமே மனிதகுலத்தை பிழைக்க வைக்கும். இயற்கைக்குத் திரும்புவோம். உண்மையை உணர்ந்து கொள்வோம். மனித குலத்தை காப்போம். எதிர்கால சந்ததியினருக்கு நல்லதொரு உலகத்தை விட்டுச் செல்வோம்.

செய்தி சேகரிப்பு
இளவரசி இளங்கோவன்
மொன்றியல் , கனடா

Leave a Reply