#திருச்சி_ஏர்போர்ட் 🛬
திருச்சி ஏர்போர்ட் நிர்வாகம்பற்றியும் அங்குள்ள வாகன நுழைவுக்கட்டணம் மற்றும் அங்குள்ள பணியாளர்களின் நடவடிக்கைகள்பற்றியும் ஏதொவொருசெய்தி தொடர்ந்து வந்தவண்ணம் இருக்கும். அவற்றை கண்காணித்து சரிசெய்யவேண்டிய திருச்சி விமான நிலைய நிர்வாகம் கண்டும்காணாமல் இருப்பதன் பின்னணி என்னவாக இருக்குமென்பதை அவரவர் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.
கடந்த திங்களன்று (03/10/2022) திருச்சியிலிருந்து சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டேன். பயணச்சீட்டின் தொகைக்கு எற்றார்போல் கையில் 10கிலோ பொருட்கள் மற்றும் தனியாக 30கிலோ பொருட்கள் கொண்டுசெல்ல அனுமதிக்கப்பட்டிருந்தது. உருளை வைத்த பெட்டியை பயன்படுத்தினால் வெறும் பெட்டியின் எடை மட்டுமே ஏறக்குறை ஐந்துமுதல் ஆறுகிலோ வந்துவிடுமென்பதால் பலரும் லேசான எடைகொண்ட அட்டைப்பெட்டியை பயன்படுத்துவதுண்டு. அப்படி பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் வீட்டிலேயே நன்றாக பேக்செய்து சுற்றியும் டேப்ஒட்டி கூடுதலாக நைலான் கயிறுகளால் கட்டிவருவார்கள். அட்டைப்பெட்டியில் கைப்பிடி இருக்காதென்பதால் அந்த நைலான் கயிற்றைக்கொண்டு தூக்குவதற்கு ஏதுவாக இருக்குமென்பதாலும் அதேசமயம் பெட்டியும் கிழிந்துபோகாமல் பாதுகாப்பாக இருக்குமென்பதாலும் பெரும்பாலானோர் அதை கடைப்பிடிப்பதுண்டு.
அப்படியிருக்க, திருச்சி ஏர்போர்ட்டின் உள்ளே நுழைந்தவுடன் போர்டிங் போடுவதற்கு முன்பாகவே தனியார் நிறுவன ஊழியர்கள் சிலர் அங்கு நின்றுகொண்டு அட்டைப்பெட்டிகளோடு வரும் பயணிகளை ஏதோ ஏர்போர்ட் அதிகாரிகள்போல் அழைத்து “இங்க வாங்க, அட்டப்பெட்டில கட்டிருக்க லக்கேஜல்லாம் இப்டி எடுத்துட்டுபோவகூடாது, இங்க பேக்பண்ணிட்டு போங்க” என்று பெட்டியை தூக்கி அவர்கள் இயந்திரத்தில் வைத்து சட்டென முன்னூறு ரூபாய்க்கான ரசீதை கொடுத்து பணம் கேட்கிறார்கள். அட்டைப்பெட்டியோடு வரும் பயணிகளும், தான் எவ்வளவு நேர்த்தியாக பேக்கிங் செய்திருந்தாலும் அந்த இடத்தில் அதிகாரிகள்போல் பேசும் அவர்களிடத்தில் என்ன சொல்வதென்று தெரியாமல் பெரும்பாலானோர் அவர்கள் கேட்கும் பணத்தை கொடுத்து பேக்கிங் செய்துகொள்கிறார்கள். அதிலும் உருளைவைத்த இழுத்துச்செல்லும் பெட்டிகளோடு வரும் சில பயணிகளிடமும் தங்களின் திறமைகளை அவ்வப்போது காட்டுவதாக சில பயணிகள் நொந்துகொள்கின்றனர். அதாவது ஒங்க லாக் ஓப்பனாயிடுச்சின்னா பொருள்லாம் மிஸ்ஸாயிடும், பேக்கிங் பண்ணிட்டா சேப்டியாருக்கும் ஒங்க பெட்டியும் ஸ்க்ராச் ஆகாதுன்னு ஒரு உருட்டு உருட்டி அவர்களிடமும் தங்கள் விளையாட்டை அவ்வப்போது அரங்கேற்றுவது வழக்கமாம்.
நிலைமை இப்படியிருக்க, நான் பயணித்த அன்றையதினம் உள்ளே அனுப்பும் பொருட்களை ஒரு அட்டைப்பெட்டியில் வைத்து நன்றாகவே பேக்செய்து அதை நைலான் கயிறுகொண்டும் கட்டிஇருந்தேன். ஏர்போர்ட் உள்ளே சென்றவுடன் பெட்டியை ஸ்கேனிங் அனுப்புவதற்கு முன்பாகவே தனியார் நிறுவனத்தைச்சேர்ந்த அந்த ஆட்கள் அங்கு நின்றுகொண்டு வழக்கமாக அவர்கள் ஆடும் விளையாட்டை ஆடத்தொடங்கினார்கள். ஒருவர் வண்டிக்கு முன்பாக ஓடிவந்து நின்றுகொண்டு “அட்டபெட்டியெல்லாம் இப்டி எடுத்துட்டுபோவகூடாது, அங்க தள்ளிட்டுபோங்க” என்று கூறி கைநீட்டிய இடத்தில் இன்னொருவர் நின்றுகொண்டு இங்க வாங்க என்று அழைத்து பட்டென மிஷினை தட்டி முன்னூறு ரூபாய்க்கான ரசீதை நீட்டினார். இதுபோன்ற பல விளையாட்டுகளில் அடியேனும் ஓரளவுக்கு நல்ல ஆட்டக்காரனென்பதால் அவர்கள் பாணியிலேயே நானும் ஆடத்தொடங்கினேன். பெட்டியதான் நான் நல்லா பேக் பண்ணிருக்கேனே அப்பறம் ஏன் திரும்ப நீங்கவேற பேக்பண்ணனும் என்று அவர்களிடம் கேட்க, சற்று சுதாரித்துக்கொண்டவராய், அப்டி இல்லசார், அப்டியே கொண்டுபோககூடாது, ஏன்னா அட்டபெட்டி ஈஸியா கிழிஞ்சிடும், அதுவுமில்லாம அங்க போர்டிங்ல அலௌவ் பண்ணமாட்டாங்க என்று அந்த பேக்கிங் ஆட்கள் கூற, புல்ட்டாஸ் பந்துகளை எதிர்கொள்ளும் பேட்ஸ்மேன்களாய் நான் மேலும் உற்சாகமாகி, அப்டின்னு யாரு சொன்னா, நீங்க ப்ரைவேட்டா இல்ல ஏர்போர்ட் அத்தாரிட்டியா என்று ஒரு ஃபோர் அடித்தவுடன், நாங்க ப்ரைவேட்தான்தான்சார், லக்கேஜ் பேக்கிங் சர்வீஸ். ஓ அப்டியா சாரி சார், நீங்க ஏர்போர்ட் அத்தாரிட்டியோன்னு ஒங்கள தப்பா நெனச்சிட்டேன், ஆமா அட்டபெட்டியோட வர்றவங்களல்லாம் ஒங்ககிட்ட பேக்பண்ணித்தான் உள்ள அனுப்பணும்னு ஒங்களுக்கு இன்ஸ்ட்ரக்ஷன் குடுத்த அதிகாரி யாருன்னு காட்டுங்க நான் அவங்ககிட்ட இதுக்கு விளக்கம் கேக்கணும் என்று ஓங்கி ஒரு சிக்ஸர் அடிக்க. இல்லசார், கம்பல்சரிலாம் கிடையாது, பேக் பண்ணிட்டுபோனா அட்டைபெட்டி சேஃபாருக்கும் அதனாலதான் சொன்னோம் என்று மீண்டும் முதல்பந்தை போட, அப்டின்னு ஒங்களுக்கு இன்ஸ்ட்ரக்ஷன் குடுத்த… என்று பேட்டை ஓங்கியவுடன், இட்ஸ் ஓகேசார் ஒங்க பேக்கிங் ஒன்னும் ப்ராப்லம் இருக்காது நீங்க போங்கசார் என்று கும்பிடாதகுறையாக கூறி, அடித்த அந்த முன்னூறுரூபாய் ரசீதை அந்த நபர் கசக்கியவிதத்தை பார்த்தபோது நம்ம பேஸ்மென்ட் கொஞ்சம் அதிர்ந்ததை ஓரளவுக்கு உணரமுடிந்தது. இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல், நல்லா மொரடா, இன்னும் நல்லா மொர என்று எனக்குள் சொல்லிக்கொண்டே நான் செய்த பேக்கிங் அட்டைபெட்டியோடு சிங்கப்பூர் வந்துசேர்ந்தேன்.
அதனால நான் என்ன சொல்லவர்றன்னா, முன்னூறுரூவாய்ங்குறது இங்க நிறையபேருக்கு அது ஒருநாள் உழைப்புக்கான வருமானம், ஆனா அத சில நிமிடங்கள்லயே நம்மகிட்டேருந்து பிடுங்குறதுக்கு ஒரு கூட்டம் நம்மளசுத்தி எப்பவும் இயங்கிகிட்டேருக்கு. அதனால நாம எந்த தப்பும் பண்ணலன்னா நம்ம மனசாட்சிக்கு நேர்மையா நடக்குறோம்னா, முதல்ல யாருக்கும் பயப்படாம எல்லா இடத்துலயும் தைரியமா பேச கத்துப்போம். தப்புன்னு தெரிஞ்சா துணிஞ்சி கேள்வி கேக்கணும், நமக்கெதுக்கு வம்புன்னு ஒதுங்கிப்போற நாமதான் இங்க நடக்குற ஒவ்வொரு தப்புகளுக்கும் உடந்தையாருக்கோம்ங்குற உண்மைய புரிஞ்சிக்கணும்.
திருச்சி ஏர்போர்ட்ட பயன்படுத்துற நம்ம ஆட்கள் பெரும்பாலானபேர் அரபு தேசங்கள்லயும், சிங்கப்பூர் மலேசியாபோன்றை நாடுகள்லயும் அன்றாட கூலி வேலைகளுக்கும், குறைவான சம்பளத்துக்கும் மாடா உழைக்கிற கிராமத்து ஆட்கள்தான். அதுலயும் அப்பாவியான முகத்தோட கொஞ்சம் பதட்டத்தோட இருக்க ஆட்கள ஏர்போர்ட் அத்தாரிட்டிங்க எப்டி நடத்துறாங்கன்னு உள்ள வந்து பாத்தாதான் தெரியும். ஏதோ தீண்டத்தகாதமாதிரி ஒருமையில பேசறதும், ஏதோ இவங்கதான் கடன்வாங்கி நம்மள வெளிநாடு அனுப்புறமாதிரியும் அதிகார தோரணையில பேசுறத பாக்கும்போது அடக்கமுடியாத கோவம் வரும். அதுலயும் வெளிநாடுகளுக்கு வீட்டுவேலைக்கு போற பெண்கள்கிட்ட விசாரணை பண்றேன்ங்குறபேர்ல தேவையில்லாத கேள்விகள் கேட்டு அவங்கள சங்கடப்படுத்துறதல்லாம் பாக்கும்போது அப்டியே அங்கயே கழட்டி அடிக்கணும்போலருக்கும். விவரமான ஆட்கள்கிட்டயே சிலநேரங்கள்ல போட்டுக்காட்டுவாங்க. இன்னும் எனக்கு நல்லா நியாபகம் இருக்கு, பத்தாண்டுகள் இருக்கும், ஒருமுற ஊர்லேருந்து சிங்கப்பூர் வரும்போது ஒரு சுங்க அதிகாரி நக்கலா, வெளிநாட்டுலபோயி அப்டி என்ன வேலதான்யா பாக்குற என்று கம்பியூட்டரை பார்த்துக்கொண்டே ஏதேதோ பேசிக்கொண்டிருந்தனர், பாஸ்போர்ட்டை கொடுத்தவுடன் பர்மிட்டு எங்க குடு என்று சற்று அதட்டலாக கேட்க, நான் சற்று கோவமாக என்னுடைய சிங்கப்பூர் நிரந்தரவாசி அடையாள அட்டையை எடுத்து சத்தமாக மேசையில் வைக்க, சற்றும் நிமிர்ந்துபார்க்காமல் கம்பியூட்டரை பார்த்தபடியே அதை எடுத்து பார்த்தவர் சட்டென நிமிர்ந்து என் முகத்தைப் பார்த்தார். ஓ நீங்க சிங்கப்பூர் பி ஆரா (சிங்கப்பூர் குடியுரிமை), என்று குரல் இறங்கியது. அதன்பிறகு இப்போ பி ஆர்லாம் குடுக்குறாங்களா சார், இப்பலாம் யாருக்கும் குடுக்கறதில்லையாமே, எங்க ஆளையும் வெளிநாட்டுக்குத்தான் ட்ரைபண்ணிட்டுருக்கேன் என்று ஏதோ உறவினர்போல் வெளிநாட்டு வேலைகள்பற்றி கேட்க ஆரம்பித்தார். முதலில் பேசிய அவருடைய குரலின் தொனி உண்மையிலேயே என்னை கோபப்படுத்தியிருந்ததால் சோதனைக்கு அப்பாற்பட்டு அவர் கேட்ட தேவையற்ற கேள்விகளுக்கு எந்த பதிலும் கூறாமல் அவரையே முறைத்துப்பார்த்துக்கொண்டிருந்தேன். எனது மனநிலையை புரிந்துகொண்டவராய் வேறெதுவும் பேசாமல் உடனே பாஸ்போர்ட்டில் ஸ்டாம்ப் அடித்து தன்னுடையதரப்பு கோபத்தையும் வெளிப்படுத்தும்விதமாக விதமாக பாஸ்போர்ட்டை மேசைமீது டப்பென்று தூக்கப்போட, அதுவரை கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டிருந்த என்னால் அதற்குமேல் அமைதியாக இருக்கமுடியவில்லை. உடனே ஏன்சார் இப்ப பாஸ்போர்ட்ட அப்டி தூக்கிபோட்டீங்க, ஒங்களுக்கு என்னதான் பிரச்சனை என்று நான் சத்தம்போட, மற்ற சுங்க அதிகாரிகளும் இந்தப்பக்கம் பார்க்கலாயினர். சரிசரி போங்க என்று அலட்சியமாக அவர்கூற, ஏன் அப்டி தூக்கிபோட்டீங்கன்னு சொல்லுங்க, ஒங்களுக்கும் எனக்கும் என்ன விரோதம் இருக்கு. ஒங்களுக்குவேனா பாஸ்போர்ட்ங்குறது ரொம்ப சாதாரணமா தெரியலாம், ஆனா எங்களுக்கு அதுதான் வாழ்க்கை என்று சத்தம்போட, பக்கத்து கவுன்ட்டரில் இருந்த அதிகாரி எழுந்துநின்று, சரிப்பா தம்பி கொவச்சிக்காதீங்க நீங்க போங்க என்று கூற, மொதல்ல ஏர்போர்ட்டுக்குள்ள பேசஞ்சர்ஸ்கிட்ட எப்டி பேசணும்னு கத்துக்கசொல்லுங்கசார் அப்பறமா இந்த வேலைலாம் பாக்கலாம் என்றுகூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தேன்.
என்னைப்போல் வெளிநாடுகளில் வேலைபார்க்கும் பார்க்கும் நண்பர்கள் பலரும் இதுபோன்ற சூழல்களை சந்தித்திருக்கக்கூடும். நடவடிக்கை எடுக்குமா நிர்வாகம்??
-தமிழ்மகன்