குமரி மீனவர் மரணம்: சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்க!
இந்தோனிஷியாவில் குமரி மீனவர் மரணம் தொடர்பான விவகாரத்தில், சர்வதேச நீதிமன்றத்தில் வழங்குப்பதிவு செய்ய, தமிழ்நாடு அரசும், ஒன்றிய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி, குமரி மீனவ சகோதரர்கள் 8 பேர் மீன்பிடிக்க சென்றனர். குமரி மீனவர்கள் சென்ற படகு கடல் எல்லையை தாண்டி இந்தோனேஷியா கடல் பரப்பு பகுதிக்கு சென்றுவிட்டதாக, அந்நாட்டு கடற்படையால் படகும் அந்த 8 குமரி மீனவர்களும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, அவர்கள் இந்தோனேஷியா சிறையில் அடைக்கப்பட்டனர். அடுத்த சில நாட்களில் நான்கு மீனவர்கள் மட்டுமே விடுவிக்கப்பட்டனர்.
எஞ்சிய மீனவ சகோதரர்கள் தூத்தூரை சேர்ந்த மரிய ஜெசின் தாஸ், பூத்துறையை சேர்ந்த இம்மானுவேல், திருவனந்தபுரம் வெட்டுதுறையை சேர்ந்த சிவனின், மன்னாட்டு பகுதியை சேர்ந்த ஜோமோன் ஆகிய நான்கு பேரும் ஒருவர் பின் ஒருவராக உடல் நிலை பாதிக்கப்பட்டனர். குறிப்பாக, மரியஜெசின் தாஸ் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டார். அவர் திடீரென மே 20ஆம் தேதி மரணமடைந்தார்.
சமீபத்தில், மருத்துவமனை நிர்வாகம் வழங்கிய உடற்கூராய்வு அறிக்கையில், மீனவ சகோதரர் மரியஜெசின் தாசின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மரியஜெசின் தாஸை, இந்தோனேசிய அதிகாரிகள் அடித்து துன்புறுத்தியிருப்பது தெரியவருகிறது.
எனவே, இவ்விவகாரத்தில், சர்வதேச நீதிமன்றத்தில் வழங்குப்பதிவு செய்ய, தமிழ்நாடு அரசும், ஒன்றிய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.
மேலும், இந்தியா, இலங்கை, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளின் கடற்படையால், தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதனை தடுக்கும் வகையில், ஒன்றிய அரசுடன், தமிழ்நாடு அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி, மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.
—
திரு. தி. வேல்முருகன்,
பண்ருட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர்,
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்.