தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டம், நெய்வேலியில் மத்திய பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் மூன்று திறந்தவெளி நிலக்கரி சுரங்கங்கள் உள்ளன. மேலும் இங்கே நிரந்தர தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் என சுமார் 20,000க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு முதல் இரண்டாவது சுரங்கம் விரிவாக்கப் பணிக்காக அருகே உள்ள கிராமங்களில் நிலத்தைக் கையகப்படுத்தும் முயற்சியில் என்எல்சி நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அதற்காக சுற்றியிருக்கும் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருக்கும் விவசாய நிலங்கள் மற்றும் வீட்டு மனைகளைக் கையகப்படுத்தும் முயற்சி தொடங்கப்பட்டது.
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தால் நிலம் கையகப்படுத்தப்படும் கிராமங்களில் ஒன்றான புவனகிரி தாலுகா கத்தாழை ஊராட்சி கரிவெட்டி கிராம மக்களை பிபிசி தமிழ் சந்தித்துப் பேசியது.
அப்போது எங்களின் வாழ்வாதாரத்தை வேரோடு பிடுங்கும் இந்நிறுவனம் எங்களின் எதிர்காலம் குறித்து கவலை கொள்வதில்லை. பணத்தைக் கொண்டு ஈடு செய்யும் இவர்களால் எங்கள் கிராமத்தைப் போன்று மற்றொரு பகுதியை இழப்பீடு வழங்க முடியுமா? என்று கரிவெட்டி கிராம மக்கள் கேள்வி எழுப்பினர்.
இதில் நில கையகப்படுத்தல் என்பதை மீறி இந்த அனல்மின் நிலையை விரிவாக்கத்தின் அவசியம் என்ன என்பதை பற்றி நாம் விவாதிக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் தற்போதைய சராசரி மின்சார தேவை 14500 லிருந்து 15,500 மெகாவாட்.
தமிழ்நாட்டின் தேவையில் பாதியை அதாவது 50 சதவீத மின்சாரத்தை மரபுசாரா எரிசக்திகளான காற்று, நீர், சூரிய ஒளி வழியே பெறுகிறோம்.
கடலூர் மாவட்டத்தை பாலைவனமாக்கிக் கொண்டு தமிழ் நாட்டையே சீரழித்துக் கொண்டிருக்கும் அனல்மின் நிலையங்களிலிருந்து பெறும் மின்சாரம் வெறும் 28 சதவீதம் மட்டுமே. அதாவது தமிழ்நாட்டின் மின்சார தேவையில் நான்கில் ஒரு பங்கைத்தான் நிலக்கரித் தருகிறது.
அப்படியிருக்க அனல் மின் நிலையத்திற்காக ஏற்கனவே ஏறக்குறைய ஐம்பதாயிரம் ஏக்கர் நிலங்களை அழித்து விட்டு, 67 கிராமங்களை காணாமல் செய்துவிட்டு, தற்போது இன்னும் 25,000 ஏக்கர் நிலங்கள் தேவையென்பது அவசியமா?
கைப்பற்றி வைத்திருக்கும் நிலங்களிலிருந்து இன்னும் 20 ஆண்டுகளுக்கு நிலக்கரி வெட்டியெடுக்க முடியும்.
அனல் மின்சாரம் தயாரிப்பதை 2030க்குள் படிப்படியாக குறைப்போம் என்று உலக நாடுகள் கூட்டத்தில் கையெழுத்திட்டுள்ள இந்தியா, மாநில அரசின் துணையுடன் தமிழர் நிலங்களை பறிக்கத் துடிப்பது எதற்காக?
தமிழீழத்தில் நடத்திய இன அழிப்பை, தமிழ் நாட்டில் வளர்ச்சி என்ற பெயரில் தாய் தமிழகத்திலும் இன அழிப்பு நடத்தப் போகிறார்களா?
காற்றாலை மின்சார உற்பத்தியில் உலக அளவில் தமிழ் நாடு எட்டாவது இடத்தில் உள்ளது.
காற்றாலைகள் மூலமாக 8300 மெகாவாட் பெறுவது தமிழ் நாட்டின் சாதனை.
இந்தியாவின் காற்றாலை மின்னுற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு நம் தமிழ் நாட்டின் பெருமை.
இனியும் எதற்காக சுரங்கங்களை விரிவுபடுத்த வேண்டும்?
எதற்காக தமிழர் வளங்களை கையகப்படுத்த வேண்டும்?
அதிகாரத்தை பயன்படுத்தி அதட்டி மிரட்டி, அரசியல் தரகர்களை வைத்து ஆசை வார்த்தை பேசி அடிமாட்டு விலைக்கு வாங்குவது யாருக்கு ?
அடுத்த பத்தாண்டுகளில் எடுத்த நிலங்களில் அதானி அம்பானிகள் ரியல் எஸ்டேட் தொழில் நடத்துவதற்கு, எங்கள் பாட்டன் பூட்டனின் துண்டு நிலங்களையும் தூக்கி கொடுக்க வேண்டுமா?
—
எழுத்து:
கரிக்கட்டி முத்தையா.
செய்தி சேகரிப்பு:
மன்னை செந்தில் பக்கிரிசாமி.