Home>>இந்தியா>>பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் போட்டித் தொடர் 2023
இந்தியாவிளையாட்டு

பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் போட்டித் தொடர் 2023

பார்டர் – கவாஸ்கர் கிரிக்கெட் டெஸ்ட் போட்டித்தொடர்.

ஒரு நாள் போட்டிகள் டி20 போட்டிகள் என்று உலகம் இன்று பரபரப்பாக போய்க்கொண்டிருக்கையில், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் தான் பாரம்பரியமிக்க போட்டித்தொடர்களாக கிரிக்கெட் உலகில் கருதப்படுகிறது. ஏனெனில் கிரிக்கெட்டின் வயது என்பது டெஸ்ட் கிரிக்கெட்டின் வயதைத்தான் குறிக்கும். அதிலும் ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் ஆசஸ்(ashes) தொடர் என்பது மிக நீண்ட பாரம்பரியம் கொண்டது. கிட்டத்தட்ட 150 ஆண்டுகளாக ஆடப்படும் போட்டித் தொடர்.

அதன்பின் தற்போது இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் ஆடும் பார்டர் கவாஸ்கர் கோப்பை என்பது சிறப்புத் தன்மை பெற்றதாக உள்ளது.

வரும் பிப்ரவரி 9ஆம் தேதி முதல் நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இந்தியாவில் தொடங்கயுள்ளது. அப்படிப்பட்ட இந்த பாரம்பரியமிக்க இந்த பார்டர் கவாஸ்கர் போட்டித்தொடர் பற்றிய ஒரு பார்வை.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் ஆலன்பார்டர் இவர்களுக்கு மதிப்பு தரும் வகையில் இவர்களின் நினைவாக இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடத்தப்படும் டெஸ்ட் போட்டித் தொடர்கள் தான் பார்டர் கவாஸ்கர் கோப்பை என்று அழைக்கப்படுகிறது.

சுனில் கவாஸ்கர் 1987 ஆம் ஆண்டே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஆலன் பார்டர் அவர்கள் 1994 ல் ஓய்வு பெற்றார்.

 

பார்டர் அவர்களின் ஒய்வுக்கு பிறகு 1996 ஆம் ஆண்டு முதன் முதலாக இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் போட்டித் தொடர் இந்தியாவில் நடத்தப்பட்டது.

ஒரே ஒரு டெஸ்ட் போட்டியை மட்டுமே கொண்ட அந்த தொடரில் இந்தியா வெற்றி பெற்றது. அந்த போட்டியில் இந்திய அணிக்கு சச்சின் டெண்டுல்கரும் ஆஸ்திரேலியா அணிக்கு மார்க் டெய்லரும் கேப்டன்களாக இருந்தனர்.

அந்த போட்டியில் இந்திய அணியின் அன்றைய விக்கெட் கீப்பராக செயல்பட்ட நாயன் மோங்கியா அபாரமாக விளையாடி 151 குவித்து ஆட்டநாயகன் விருது பெற்றார். ஆகவே பார்டர் கவாஸ்கர் கோப்பையின் முதல் ஆட்டநாயகன் விருதை பெற்றவர் நயன் மோங்கியா ஆவார். அது ஒரே ஒரு டெஸ்ட் போட்டித்தொடர் என்பதால் அவரே தொடர் நாயகன் விருதையும் பெற்றார்.

அதன் பின் தற்போது வரை மொத்த மாக 15 டெஸ்ட் தொடர்கள் நடந்துள்ளன. இதில் 9 தொடர்களை இந்தியாவும்,5 தொடர்களை ஆஸ்திரேலியாவும் வென்றுள்ளது. ஒரு தொடர் மட்டும் சமன் ஆகியுள்ளது.

மொத்தம் 52 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. இதில் இந்தியா 22 வெற்றிகளும், ஆஸ்திரேலியா 19 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.11 டெஸ்ட் போட்டிகள் சமனில் முடிவடைந்துள்ளன.

எனவே இந்த பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் போட்டி தொடர்களில் இந்தியா தான் அதிகம் ஆதிக்கம் செலுத்துகிறது.
அதிலும் குறிப்பாக கடைசியாக 2017, 2018 மற்றும் 2020 ஆண்டுகளில் நடைபெற்ற மூன்று தொடர்களிலுமே இந்தியா வெற்றி பெற்று ஹாட்ட்ரிக் சாதனை நிகழ்த்தி உள்ளது.

அதில் 2018 மற்றும் 2020 ஆஸ்திரேலியா மண்ணில் நடைபெற்ற தொடர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல இந்த பார்டர் கவாஸ்கர் போட்டி தொடர்களில் அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன் மகேந்திர சிங் டோனி ஆவார். மொத்தம் 13 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு 8 வெற்றிகளை பெற்றுள்ளார். இவருக்கு அடுத்து 5 வெற்றிகளுடன் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாக் மற்றும் மைக்கேல் கிளார்க் உள்ளனர்.

 

அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற சாதனையை இந்தியாவின் அனில் கும்ப்ளே பெற்றுள்ளார்.

 

மொத்தம் 111 விக்கெட்களை எடுத்துள்ளார். அதன் பின் இந்தியாவின் ஹர்பஜன் சிங் 95 விக்கெட்களை எடுத்துள்ளார். தற்போது ஆடிக் கொண்டிருக்கும் பந்துவீச்சாளர்களில் ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் 94 விக்கெட்களும் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் 89 விக்கெட்களும் எடுத்துள்ளனர்.

வரும் போட்டித்தொடரில், நாதன் லியோன் இன்னும் 18 விக்கெட்கள் எடுக்கும் பட்சத்தில் அனில் கும்ப்ளே வின் 111 விக்கட் சாதனையை உடைத்து பார்டர் கவாஸ்கர் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனை படைக்கலாம். அதே நேரத்தில் அஸ்வின் 23 விக்கெடுகள் எடுக்கும் பட்சத்தில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தலாம் பார்ப்போம் யார் முந்துகிறார் என்று.

அதே நேரத்தில் பேட்டிங்கை பொறுத்தவரை சச்சின் டெண்டுல்கர் தான் ஆதிக்கம் செலுத்துகிறார். மொத்தம் 3262 ரன்கள் குவித்து முன்னணியில் உள்ளார். அடுத்து 2555 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் இரண்டாமிடத்தில் உள்ளார்.

ஆஸ்திரேலியா இந்திய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகளில் 3000 ரன்களை குவித்த ஒரே வீரர் என்ற பெருமையை பெறுபவர் சச்சின் டெண்டுல்கர். இது ஒரு உலக சாதனையாகும். ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த சாதனையாகும்.

 

அதேபோல அதிக சதங்கள் அடித்த பேட்ஸ்மேன் சச்சின் தான். ஒன்பது சதங்கள் அடித்துள்ளார் அதற்கடுத்து ரிக்கி பாண்டிங் மற்றும் விராட் கோலி 8 சதங்கள் அடித்து இரண்டாமிடத்தில் உள்ளனர்.

சச்சின் டெண்டுல்கரை பொறுத்தவரை பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கு முன்பு 1991ல் ஒரே ஒரு ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் ஆடியுள்ளார். அதில் இரண்டு சதங்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆக மொத்தம் சச்சின் டெண்டுல்கர் இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 11 சதங்கள் அடித்துள்ளார்.

ரிக்கி பாண்டிங் ஓய்வு பெற்ற நிலையில் வரும் டெஸ்ட் போட்டித் தொடரில் விராட் கோலி இரண்டு சதங்கள் அடிக்கும் பட்சத்தில் பார்டர் கவாஸ்கர் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைக்கலாம். ஒருவேளை நான்கு சதங்கள் அடிக்கும் பட்சத்தில், ஒட்டுமொத்தமாக இந்தியா ஆஸ்திரேலியா க்கு இடையேயான டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைக்கலாம்.

அதே நேரத்தில் அதிக ரன்களை பொறுத்தவரை சச்சின் டெண்டுல்கர் எட்ட முடியாத உயரத்தில் உள்ளார். எனவே தற்போதைக்கு அவரின் சாதனையை உடைக்க வாய்ப்பில்லை. தற்போது ஆடும் ஆட்டக்காரர்களில் புஜாரா மற்றும் கோலி இருவரும் 2000 ரன்களை நெருங்குகின்றனர்.

அதேபோல அதிக தொடர் நாயகன் விருது பெற்றவர் சச்சின் டெண்டுல்கர். மூன்று முறை பெற்றுள்ளார். அதிக ஆட்டநாயகன் விருதும் அவரே பெற்றுள்ளார்.ஐந்து முறை பெற்றுள்ளார்.

ஒரே தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையை  படைத்தவர் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித். 2014 -15ம் ஆண்டில் ஆஸ்திரேலியா நடந்த டெஸ்ட் தொடரில் 8 இன்னிங்ஸ்ல 769 ரன்கள் குவித்தார். இதுவே இதுவரை அதிகமாக உள்ளது.

 

 

அதேபோல ஒரே தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் இந்தியாவின் ஹர்பஜன் சிங் ஆவார்.

2001 ல் இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 6 இன்னிங்சில் 32 விக்கெட்களை வீழ்த்தினார். இதுவே பார்டர் கவாஸ்கர் கோப்பையில் இன்று வரை அதிகபட்சமாக உள்ளது. அது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சாதனைகளில் இது  மூன்றாம்  இடம்.

 

 

இந்தியா ஆஸ்திரேலியா போட்டி என்றாலே சுவாரசியத்துக்கு பஞ்சம் இருக்காது. குறிப்பாக இந்த பார்டர் கவாஸ்கர் கோப்பையில் நடந்த பல போட்டிகளை சொல்லலாம்.
அதில் சில,

  • 1998 சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியில் மூன்றாவது இன்னிங்ஸில் சச்சின் டெண்டுல்கர் அபாரமாக விளையாடி 155 ரன்கள் குவித்து யாருமே எதிர்பாக்காத வண்ணம் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றது.

  • 2001 ல் கொல்கத்தாவில் நடந்த வரலாற்று சிறப்புமிக்க போட்டி follow on ஆன இந்திய அணி லக்ஷ்மன் மற்றும் டிராவிட்டின் அபார ஆட்டத்தினால் வெற்றி பெற்றது.

 

  • 2003 ல் ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ராகுல் ட்ராவிட்டின் அருமையான இரட்டை சதத்தின் உதவியால் இந்தியா பெற்ற வெற்றி.

 

  • அதே தொடரில் சிட்னியில் நடைபெற்ற போட்டியில் கவர் டிரைவ் ஆடாமலேயே 200 ரன்கள் அடித்த சச்சின் ஆட்டம்,

 

  • 2010 ல் மொஹாலி யில் நடைபெற்ற போட்டியில் 216 ரன்கள் இலக்கை நோக்கி செல்கையில் 124 /8 என்ற நிலையில் லக்ஷ்மன் மற்றும் இஷாந்த் சர்மா இருவரும் இணைந்து 9 விக்கெட்காக 81 ரன்கள் குவித்து வெற்றியை தேடித்தந்த அந்த நிகழ்வு.

 

  • 2014 ல் ஆஸ்திரேலியால் நடந்த தொடரில் விராட் கோலியின் விஸ்வரூப எழுச்சி.மொத்தம் நான்கு சதங்கள் அந்த ஒரே தொடரில் அடித்திருந்தார்.

 

  • 2018 ல் ஆஸ்திரேலியா நடந்த தொடரை பெற்ற வெற்றி, புஜாராவின் அற்புதமான ஆட்டம்,

 

  • இவை எல்லாவற்றையும் விட இந்திய கிரிக்கெட்டின் மிக அற்புதமான நிகழ்வு என்று நாம் சொல்ல வேண்டும் என்றால் 2020-21 ல் ஆஸ்திரேலியாவில் நடந்த அந்த டெஸ்ட் தொடராகும். முற்றிலும் இளம் படையினரை வைத்து இறுதி வரை போராடி பெற்ற வெற்றி. ரிஷப் பண்ட் சுப்மன் கில், முகமது சிராஜ் என்ன மிகத்திறமையான ஆட்டக்காரர்களை உருவாக்கிய தொடர் இது.

 

அதன்பின் தற்போது இந்தியாவில் நடைபெறப்போகிறது இந்த தொடரை இந்தியா வெல்லும் பட்சத்தில் 2023 டெஸ்ட் உலகக்கோப்பைக்கான இறுதிப் போட்டிக்குத்தகுதி பெற முடியும். அதே நேரத்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நம்பர் ஒன் அணியாகவும் முன்னேற முடியும். ஏற்கனவே ஒரு நாள் போட்டி டி20களில் இந்தியா முதலிடத்தைப் பெற்றுள்ளது. இந்த டெஸ்ட் உடனே வெல்லும் பட்சத்தில் கிரிக்கெட்டின் அனைத்துவிதமான போட்டிகளிலும் முதலிடத்தை இந்திய அணி பெறும்.

இன்று ஐபிஎல் டி20 போட்டிகளின் ஆதிக்கம் அதிகமாக இருந்தாலும் இது போன்ற தொடர்கள் தான் டெஸ்ட் போட்டிகளின் மீது மக்களுக்கு ஆர்வத்தை வரவழைக்கின்றன.

உச்சகட்ட எதிர்பார்ப்பில் மொத்தம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், வரும் வியாழன் (பிப்ரவரி 9) அன்று முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற உள்ளது. ஆவலோடு எதிர்பார்ப்போம்…


மன்னை செந்தில் பக்கிரிசாமி.


படங்கள்:
இணையம்

Leave a Reply