Home>>இந்தியா>>உழுதவன் கணக்கு பார்த்தால்…

பெருமதிப்பிற்குரிய தமிழ்நில பரப்பெங்கும் வாழும் வேளாண் குடிகளே குறிப்பாக காவிரியின் கரைவாழ் மக்களே…

நாம் என்றைக்காவது வேளாண்மையை வேறு கண்ணோட்டத்தில் அணுகி இருக்கிறோமா… இன்னும் எத்தனை நாளைக்கு வேளாண்மை  நட்டம் என்று புலம்பி கொண்டே இருக்க போகிறோம், வீம்புக்கு மண் அள்ளி  திங்கத்தான் வேண்டுமா?

“உழவை முதலில் தொழிலாக பாருங்கள் நீங்கள் யாருக்காகவும் தியாகம் செய்ய வேண்டாம்..”

மூன்று மூட்டை நெல் விற்று தங்கம் வாங்கும் காலம் திரும்ப வர வேண்டாமா, உழவர்கள் தான் நாட்டின் முதுகெலும்பு என்று வாயால் கூறிவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா,…

ஆற்றில் போட்டாலும் அளந்து தான் போட வேண்டும் என்பதை நாம் ஏன் மறந்தோம்.

இந்த உலகம் முழுக்க பரவி தொழில் செய்யும் ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனத்திடம் … தமிழ்நாட்டில் ஒரு மூலையில் உள்ள கிளையில் எத்தனை காகிதம் அச்சிடுவதற்காக பயன்படுத்தப்படுகிறது என்ற கணக்கு வரை இருக்கும்…

நீங்கள் மலையை புரட்ட வேண்டாம். நம் கையில் இருந்து செல்லும் காசுகளுக்கு ஏன் நம்மிடம் கணக்கு இல்லை…

எப்படி ஒரு தனியார் நிறுவனம் இந்த உலகத்தில் வெற்றி அடைகிறது காரணம் கணக்கும் ஒன்று. இலாபமோ, நட்டமோ அவன் ஒரு ரூபாய் வரைக்கும் கணக்கு வைத்திருப்பான்…

நம்மில் எவ்வளவு பேர் கணக்கு பார்த்து உழவுத் தொழிலை செய்கிறோம் அறுவடை முடிந்தவுடன் கணக்கு பார்த்து ஈடு செய்திருக்கிறோமா… இல்லவே இல்லை…

இதுல என்னய்யா இருக்கு ஏதோ பொழப்புக்கு போட்டு ஓட்டி கிட்டு இருக்கன்… என்று தேநீர் கடைக் கி தேநீர் கடைக் கி பேசினால் போதுமா…

அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டியாக இருக்கும் நாமே உழவை உதாசீனப்படுத்தினால் அடுத்த தலைமுறை எப்படி அடி எடுத்து வைப்பார்கள் அவர்களுக்கு யார் வழி காட்டுவது…

லாபம் இல்லை லாபமில்லை என்று கூறிக்கொண்டு நம் நிலத்தை வடக்கர்களுக்கும் பெரிய பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தாரை வார்க்க த்தான் போகிறோமா?

வேளாண்மையை மட்டுமே நாடித்துடிப்பாக கொண்டவர்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டாமா?

எதற்கு இவ்வளவு உரம்…..
எதற்கு இவ்வளவு மருந்து …….

என்று என்றைக்காவது நாம் சிந்தித்து இருக்கிறோமா? இந்த மண் உங்களிடம் கேட்கிறதா என்ன…

மனிதனைப் போலத்தான் மண்ணும் என்ற உயர்ந்த தத்துவத்தை, உயர்ந்த அறிவியலை நாம் ஏன் மறந்தோம்.

 நம் உடல் எவ்வளவு உணவு இருந்தாலும் எவ்வளவு செல்வங்கள் கொட்டிக் கிடந்தாலும் அளவுக்கு மீறி எடுக்காது… அதுபோலத்தான் இந்த மண்ணும் நீங்கள் மூட்டை மூட்டையாக ரசாயனங்களை கொட்டினாலும் அது மண்ணை மலடாக்கத்தான் பயன்படுமே தவிர அதை மண் எடுக்காது..

உங்களை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் தயவு கூர்ந்து பின்நோக்கி பாருங்கள் நமது பாட்டன் பூட்டன் வழி வேளாண்மையை பாருங்கள்…

இப்படித்தான் உரத்தையும் மருந்தையும் அள்ளிக் கொண்டு போய் நிலத்தில் கொட்டினானா..

நிறைய பேர் கூறுவார்கள் உழவு செய்பவனுக்கு பேராசை என்று..

அதை ஒரு துளி கூட நான் ஒற்றுக்கொள்ள மாட்டேன்…
ஏனென்றால் அவன் நட்டத்தை ஈடுகட்டி சரி செய்யவே படாத பாடுபட்டுக் கொண்டிருக்கிறான்…
அதற்காகவே அதிக விளைச்சலுக்கு ஆசைப்படுகிறான் இதில் பேராசை ஏது…

நாம் திருந்தவில்லை என்றால் இதே நிலை நீடித்தால் உங்கள் மனநிலையோ அல்லது குடும்ப சூழ்நிலையோ உங்களை கண்டிப்பாக உழவுத் தொழிலில் இருந்து வெளியேற்றும்…

இருக்கும் பணத்தில் விதைகள் வாங்குகிறோம்…
மகள் நகை அடகு வைத்து நடவு நடுகிறோம்…
கடன் சொல்லி களை எடுக்கிறோம் …
கடன் சொல்லி உழுகிறோம்…
உளுந்து வித்து உழவு செய்கிறோம்…
ஊர் ஊரா போய் கடன் சொல்லி உரம் வாங்குகிறோம்…

கரையான் போல பூச்சிக்கொல்லிகள் நம் உடலையும் தோலையும் அரிக்க அரிக்க வயலில் நாம் மருந்து அடிக்கிறோம்… இறுதியாக கைமாத்து வாங்கி அறுவடை செய்கிறோம்…

அறுவடை முடிந்து கிடைக்கும் கண்டுமுதல் பணத்தை… வாங்கிய கடனுக்கும் வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கும்..அறுவடை இயந்திர காரனுக்கும் கொடுத்துவிட்டு…

துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு வெறுங்கையுடன் வீட்டிற்கு வந்து விட்டத்தை பார்த்து படுக்கிறாய். விடிந்ததும் அடுத்த போகத்திற்கு கடன் வாங்க சென்று விடுகிறாய்…

ஒரு பிடி கூட உனக்கு கிடைக்கவில்லை என்றால் நீ எதற்காக வேளாண்மை செய்கிறாய் யாருக்காக உழவுத்தொழிலை செய்கிறாய் என்றைக்காவது சிந்தித்துப் பார்த்ததுண்டா?

உன் பணம் எங்கே செல்கிறது நாமெல்லாம் எதிர்பார்ப்பது போல் வேளாண் உற்பத்தி பொருளுக்கு விளைவிப்பவனே விலை நிர்ணயம் செய்யும் காலம் எப்போது வரும்…

அந்த காலம் கானல் நீராகவே நம்மை கடக்கிறது. அதுவரை இந்த நிலத்தில் வாழ உனக்கு திராணி இருக்க வேண்டாமா அதற்கான வழிவகை செய்ய வேண்டாமா?

இரண்டு தொழில் செய்பவர்கள் வேறு தொழிலில் வரும் வருமானத்தை வைத்து கரை சேருவார்கள். ஆனால் நீ எப்போது கரை சேரப் போகிறாய் இறுதி வரை தத்தளிக்கதான் வேண்டுமா?

மாற வழி இல்லையா… ஏன் இல்லை??

நாம் தற்சார்பை மறந்து தறி கெட்டு திரிந்ததன் விளைவு நம்மை எங்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது தெரியுமா.

காவிரியின் கடைமடை வாசிகளாகிய நாம் முதலில் கணக்கு பார்ப்பதிலிருந்து புதிய தடத்தை உருவாக்குவோம் நமக்கு பின்னாடி வருபவர்கள் அதில் சாலை அமைத்து இந்த ஊரை கூட்டி வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

ஒரு அறிஞனின் கூற்றுப்படி
“தேவைகளில் இருந்துதான் எல்லாம் பிறக்கிறதே தவிர….
சாத்தியத்தால் அல்ல…..”

தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில்….. பாமணி ஆற்று நாகரீகத்தில், அமைந்த மன்னார்குடி வேளாண் குடிகளை வைத்து தற்சமயம் வேளாண்மை வரவு செலவுகளை கணக்கீடு செய்து பார்ப்போம்.

இந்தக் கணக்கு சிறு, குரு, பெரு உழவர்களுக்கும், தண்ணீர் வசதி இல்லாத வேளாண் வாசிகளுக்கும்,ஒரு போகம்… இரு போகம்… மூன்று போகம் உழவு செய்பவர்களுக்கும்,  நஞ்சை, புஞ்சை என அனைத்து நிலங்களுக்கும் , ஆற்றுப் பாசனம், கிணற்று பாசனம்…  ஆழ்துளை கிணறு வைத்து மின்சார வசதிகள் மூலம் உழவு செய்பவர்கள் என அனைவருக்கும் பொருந்தும்.

தஞ்சை வட்டாரத்தை பொருத்தவரை எல்லாமே குழி கணக்கு தான்

1 குழி = 144 சதுரடி
100 குழி = 1 மா
3 மா = 1 ஏக்கர்
3 குழி = 1 செண்டு

நாம் செய்யும் ஒப்பீடு: 100 குழி நிலத்தையும், 120 நாள் விளையும் நெற்பயிரையும் எடுத்துக் கொண்டு கீழ் வருமாறு அமைகிறது.

  செலவுகள் ரூபாய் 
1 விதை  நெல்  1/2 சிப்பம்  (15 கிலோ ) 550
2 விதைநெல்  வாங்கும் கடையில் இருந்து  வயலுக்கு கொண்டு  செல்ல  வண்டி  வாடகை  100
3 நாற்றங்கால்  உழவு இரண்டு சால்  200
4 நாற்றங்கால்  மட்டப்படுத்தி  விதைநெல்  வீச கூலி  200
5 நாற்றங்கால்  உரம்  200
6 நாற்றங்காலுக்கு  அடிக்கும்  மருந்து 100
7 வயல் உழவு இரண்டு  சால்  1300
8 வயல் வரப்பு  வெட்ட  கூலி  மற்றும் சாப்பாடு 400
9 நாத்து பறியல் கூலி மற்றும் சாப்பாடு 1300
10 நடவு  மற்றும்  போக்குவரத்து  ஆள்  செலவு  மற்றும்  சாப்பாடு  ( 6  ஆள் ) 1500
11 அடி உரம் மற்றும் வீசுவதற்கான கூலி  900
12 ஆள் வைத்து களை எடுப்பது அல்லது ரசாயன கொல்லியை பயன்படுத்துவது  1000
13 இரண்டாவது உரமாக சில ரசாயன  நுண்ணூட்டங்களையும் பாஸ்பரசு உரம் வாங்குவது மற்றும் வீசுவதற்கான செலவுகள்  500
14 மூன்றாவது  உரமாக  (கதிர் உரம் ) பொட்டாஷ்  உரம் மற்றும்  வீசுவதற்கான செலவுகள்  500
15 மூன்று தடவை வீசும் உரத்தையும் வயலுக்கு கொண்டு போய் சேர்க்க வண்டி வாடகை  500
16 ரசாயன மருந்து அடிப்பது இரண்டு, மூன்று முறை மருந்து வாங்கும் செலவு மற்றும் அடிக்கும் கூலி மற்றும் தெளிப்பான் வாடகை உட்பட 600
17 அறுவடை போது ஆள் வைத்து வரப்பு ஓரம் இருக்கும் கதிர்களை அறுக்க  200
18 அறுவடை (இயந்திரம் மூலம்)  1500
19 வயலில்இருந்து நெல்கொள்முதல் நிலையத்திற்கு நெல்லை கொண்ட செல்ல  200
20 அரசு கேட்கும் ஈர்ப்பத்திற்கு நெல்லை உலர்த்தி ஈரப்பதம் போக காய வைக்க 200
21 கொள்முதல் நிலையத்தில் மூட்டைக்கு இவ்வளவு என்று ஆகும்செலவுகள்  750
22 சிட்டா அடங்கல் செலவுகள்  100
23 நெல் தூற்றும் இயந்திரத்தில் தரையில் கிடக்கும் நெல்லை அள்ளி
இயந்திரத்தில் கொட்ட ஆகும் செலவு
200
1 மா நிலத்தில் நெல் பயிர் செய்ய ஆகும் செலவுகள்   13,000

வரவுகள் 

  • ஒரு மாவிற்கு 12 மூட்டை (60 கிலோ ) விளைச்சல் என்று  வந்தால்

12 X 60 = 720 கிலோ மகசூல் கிடைக்கும்

  • அரசு கொள்முதல் நிலைய நிலவரப்படி 40 கிலோ சிப்பம்  என கணக்கிட்டால் 18 மூட்டை கிடைக்கும்.
  • அரசு நிர்ணயித்த தொகை 1 கிலோ நெல்லிற்கு – 20.50 ரூபாய்
  • நெல்லை விற்கும் வகையில் 720 X 20.50 = 14,760 ரூபாய் கிடைக்கும்.
  • வைக்கோல் விற்கும் வகையில் வைக்கலை இயந்திரத்தால் சுருட்ட (கட்டாக ) ஆகும் செலவு போக,  ஒரு கட்டுக்கு கிடைக்கும் தொகை  – 1 கட்டு = 40 ரூபாய்

1 மாவிற்கு 12  கட்டு என வைத்துக்கொண்டால் – 12 X 40 = 480 ரூபாய் கிடைக்கும்

  • ஆக மொத்தம் கிடைக்கும் தொகை –  14760 + 480 = 15,420 ரூபாய் கிடைக்கும்.

 

1 மா நிலத்தில் ஆகும் செலவுகள் = 13,000 ரூபாய்

கிடைக்கும் வருவாய் = 15,420 ரூபாய்

இரண்டையும் கழித்தால் 1 மா நிலத்தில் 

உழவனுக்கு கிடைக்கும் லாப தொகை   = 2,420 ரூபாய்

 (*பருவ நிலை மாற்றம் மற்றும் இயற்கை பேரிடர் ஏதும் ஏற்படாமல் 120 நாட்கள் காத்திருந்தால் இந்த தொகையை பெறலாம்*)

கணக்கிடப்படாதவை:

  • அதிக பூச்சி தாக்குதலால் ஏற்படும் பூச்சிக்கொல்லி செலவு.
  • மின் விசைப்பொறி (மோட்டார்)  மற்றும் மின்சார பராமரிப்பு செலவு.
  • இயற்கை பேரிடர் கால செலவுகள், கடும் மழை மற்றும் புயல் இதர இயற்கை சீற்றங்களால் ஏற்படும் செலவுகள்.
  • பூச்சிக்கொல்லி மற்றும் உரங்களின் விலை ஏற்றம்.
  • எருவு அடித்தல்.
  • வயலுக்கான உபகரணங்கள் வம்பட்டி, அன்னக்கூடை, படுதா, இயந்திரம்  போன்ற இதர முதலீடுகள்.
  • வரப்பு பராமரிப்பு மற்றும் வேளாண்மை தொழில் ரீதியான சிறு சிறு முதலீடுகள்.
  • இயந்திரம் மற்றும் கருவிகளின் வாடகை விலை ஏற்றங்கள் மற்றும் முதலீடுகள்.
  • இதுபோக தொழிலாளி மற்றும் வயல் உரிமையாளரின் சாப்பாட்டு செலவு மற்றும் போக்குவரத்து செலவு
  • இதர செலவுகள் … தொழிலாளியின் சாராய செலவு.

இதற்கு நிரந்தர தீர்வு தான் என்ன… தீர்வு இருக்கு,,,

இதில் ஆகும் செலவை ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு மதிநுட்பத்தில் முடிந்த அளவு குறைக்கலாம்…

வயல் உரிமையாளரே இறங்கி வேலை செய்தால் கூலி செலவை சிறிதளவு குறைக்கலாம்… ஆனால் வெற்றி பெற இயலாது.

“இதற்கு ஒரே தீர்வு
இயற்கை வேளாண்மை தான்

இந்த வார்த்தையே முரண்பாடுதான், ஆனால் தற்போது உள்ள காலத்தில் இதை பயன்படுத்தியே தீர வேண்டும். ஏன் முரண்பாடு என்றால் வேளாண்மை என்பதே இயற்கை தான்…

“உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கும் கூட மிஞ்சும்”
 என்பதை பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்…


படம் & கட்டுரை:
கழிமுகத்தான்,
மன்னார்குடி.

Leave a Reply