Home>>கல்வி>>பதவி உயர்வு கலந்தாய்வு சிறக்க தேவை நல்லதொரு கொள்கை முடிவு.
கல்விசெய்திகள்தமிழ்நாடுவேலைவாய்ப்பு

பதவி உயர்வு கலந்தாய்வு சிறக்க தேவை நல்லதொரு கொள்கை முடிவு.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றது போல் நடப்பு கல்வியாண்டில் மே மாதத்திற்குள் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தி கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறக்கும் முதல் வாரத்தில் பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு பெற்றவர்கள் புதிய இடத்தில் பணியேற்கும் பொருட்டு தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் பள்ளிக்கல்வித் துறை மற்றும் தொடக்கக்கல்வித் துறை முன்னெடுத்த முயற்சிகள் பாராட்டுக்குரியவை.

அதேவேளையில் சட்டத்தில் உள்ள ஓட்டைகள் மூலமாக கூரையைப் பிடித்து ஏறி கோபுரத்தின் உச்சியை அடைந்து விடலாம் என்கிற பேராசையிலும் நப்பாசையிலும் ஒரு சிலர் தற்காலிக முட்டுக்கட்டை போட்டுக் குழப்பத்தை விளைவிக்கப் பார்ப்பதைப் பணி நிமித்த அறமாக ஒருபோதும் ஏற்கமுடியாது.

இடைக்காலத் தடைகளால் கல்வித்துறையில் வேண்டுமென்றே ஒரு தலைமையின் கீழ் செவ்வனே நடைபெறும் ஆற்றொழுக்கான நிர்வாக நடைமுறைகளில் குந்தகம் ஏற்படுத்திக் கொஞ்சகாலம் குளிர் காயலாமே ஒழிய நிரந்தர வெற்றியை ஈட்டுவதென்பது முயற்கொம்பாகும்.

ஏனெனில், பணி நியமனம் வேறு. பதவி உயர்வு வேறு. இரண்டையும் ஒருசேர போட்டுக் குழப்பிக் கொள்ளக்கூடாது. பொதுவாக, ஆசிரியர் பணி நியமனங்களுக்குத் தகுதித் தேர்வுகள் கூடாது என்பது தான் பல்வேறு தரப்பினரின் பரவலான கோரிக்கையாகும். இந்த நிலையில் போதிய கல்வித் தகுதிகளுடன் கூடிய பணியனுபவ பணிமூப்பு முன்னுரிமை அடிப்படையிலான பதவி உயர்வுகளுக்கும் இத்தகுதித் தேர்வைக் கட்டாயப்படுத்துதல் என்பது பணியில் மூத்தோருக்கு இழைக்கும் அநீதியாகும்.

பணிமூப்பு முன்னுரிமை என்பதும் சட்டப்படி ஓர் அரசு தமக்குக் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அளிக்கும் உரிமையாகும். குறிப்பிட்ட கால இடைவெளியில் உரிய கல்வித் தகுதி அல்லது துறை சார்ந்த தேர்வுகளில் போதிய தேர்ச்சி அடைவோருக்கு தக்க பதவி உயர்வு தருவதை உறுதி செய்யும் கடமை அரசிற்கு உண்டு. அதற்கான சூழல் அமையாது போகும் போது தான் ஒரே பணியில் பத்தாண்டுகள், இருபதாண்டுகள், முப்பதாண்டுகள் தொடர்ந்து பணிபுரிவோருக்கு முறையே தேர்வு நிலை, சிறப்பு நிலை, உயர் சிறப்பு நிலை என பணி நிர்ணயம் செய்து அதற்கு புதிய ஊதிய சலுகைகள் கட்டாயம் கொடுக்கப்பட வேண்டும் என்று பணியாளர் நலன் சார்ந்த விதிகள் வலியுறுத்துவதாக உள்ளது. இதை எளிதில் புறந்தள்ளி விட முடியாது.

நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் போல் ஒற்றைத் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற, போதுமான பணியனுபவமும் நிர்வாகத் திறனும் அற்ற பணியில் இளையோர் ஒரேயடியாகத் தாவித் தலைமைப் பதவி சிம்மாசனத்தில் அமர நினைப்பது என்பது வேடிக்கையாக உள்ளது. இதுபோன்ற பகல் கனவுகள் எல்லாம் நிறைவேறத் ( ஒரு பேச்சுக்காகத் தானே) தொடங்கினால் எல்லாவிதமான திறமைகளும் திறன்களும் கற்றல் கற்பித்தல் அனுபவங்களும் ஒருங்கே அமையப் பெற்ற பணிமூப்பு ஆசிரியர்களின் நிலை என்னாவது?

காலத்திற்கும் இவர்கள் பதவி உயர்வுகள் ஏதுமில்லாமல் தகுதித் தேர்வு அடைவு இல்லை என்கிற நடைமுறைக்கு ஒவ்வாத, ஒன்றுக்கும் உதவாத காரணத்தைக் காட்டி மறுப்பதும் மறுதலிப்பதும் ஏற்கத்தக்கது அல்ல. 2009இல் ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்ட அனைவருக்கும் கல்விச் சட்டம் நடைமுறைக்கு வரும் முன்னரே பள்ளிகள் அனைத்திலும் தகுதி வாய்ந்த ஆசிரியப் பெருமக்கள் தாம் பணிநியமனம் செய்யப்பட்டனர். இது தமிழ்நாட்டிற்கு கிடைத்த பெருமையாகும். எந்த அரசியல், சமூக, பொருளாதார சூழ்நிலையிலும் பிற மாநிலங்களில் நிலவி வந்தது போல் தகுதியற்ற நபர்கள் ஆசிரியர்களாக வகுப்பறைகளுக்குச் சென்று பாடம் கற்பிக்க அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஆசிரியர்கள் பணியிடங்கள் மீதான தேவையைக் கருத்தில் கொண்டு தகுதி வாய்ந்த ஆசிரியர்களைத் தக்க காலத்தில் உருவாக்க ஆசிரியர் பயிற்சி பள்ளிகளும் நிறுவனங்களும் அவற்றைச் செம்மையாகக் கண்காணிக்கவும் பயிற்சிகள் வழங்கவும் பாடத் திட்டங்கள் தயாரித்து அளிக்கவும் தோற்றுவிக்கப்பட்ட மாநில ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி இயக்ககம் குறித்த பெருமிதங்கள் எண்ணத்தக்கவை. இந்திய தொடக்கக் கல்வி வரலாற்றில் தமிழ்நாட்டில் 1995 ஆம் ஆண்டில் இடைநிலை ஆசிரியர் புதிய பணி நியமனத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டித் தேர்வு நடத்தியதும் மாநிலத் தலைநகராக விளங்கும் சென்னையில் அதன்பின் 1:3 என்னும் அளவில் நேர்காணல் மேற்கொண்டு தர எண் அடிப்படையில் பள்ளிக்கல்வித் துறை மற்றும் தொடக்கக்கல்வித் துறை ஆகியவற்றிற்கான பணிநியமன ஆணைகள் அளித்ததும் என்பவை முன்மாதிரி நடவடிக்கைகளாவன.

பல்வேறு காரணங்களால் ஒரேயொரு பதவி உயர்விற்காக சற்றேறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர்களாகவே இன்றுவரை பலர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலை பள்ளிக்கல்வித் துறை மற்றும் தொடக்கக்கல்வித் துறை ஆகியவற்றில் இருந்து வருகிறது. இவர்கள் அனைவரும் ஐம்பதை நெருங்கும் வயதினர். புதிய பணி நியமனங்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வினை இவர்களும் இனி எழுதித் தேர்ச்சிப் பெற்றால்தான் பதவி உயர்வு பெறமுடியும் என்பது பல்வேறு விபரீத விளைவுகளை ஏற்படுத்தும். அதாவது, பதவி உயர்வு இனி பெற வாய்ப்பு இல்லை என்கிற நிலையில் இவர்கள் தம் பணியில் இயல்பாகவே சுணக்கமும் எரிச்சலும் அடைந்து ஏனோதானோவென்று பலவிதமான மன உளைச்சல்களுடன் இனிவரும் காலங்களை ஒரு நடைபிணமாக ஒப்பேற்றவே விழைய அதிக வாய்ப்புண்டு. இது கல்வியை, பள்ளியை, பிஞ்சுக் குழந்தைகளின் எதிர்காலத்தை நிச்சயம் பாதிக்கும்.

கோழியானது ஒவ்வொரு முட்டையாகப் போடும் வரை காத்திருப்பதுதான் புத்திசாலித்தனம் என்பார்கள். அதைவிடுத்து குறுக்கு வழியில் மொத்தமாக அபகரிக்க நினைப்பது பேதைமையாகும். இதனால் யாருக்கும் எந்த வகையிலும் பலனில்லை. நீதி வேண்டி பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் எல்லோரும் நெடுந்தொலைவு பயணப்பட்டால் ஏழை, எளிய, அடித்தட்டு, விளிம்பு நிலை மாணவ மாணவிகளின் எதிர்காலம் அதோகதிதான்! வரிசையில் நிற்கவே விழையாத சமூகமாகவே தற்கால சமூகம் இருக்கின்றது. தமக்கான முறை வரும் வரை காத்திருக்கும் பொறுமை இவர்களிடம் இருப்பதில்லை. தமக்கு முன் நிற்பவர்களை எல்லாம் மிதித்துக் கொண்டு கொத்தளத்தை எப்படியோ பிடித்து விட வேண்டும் என்கிற மனிதத் தன்மையற்ற நோக்கும் போக்கும் மலிந்து வருவது வேதனைக்குரியது.

தமிழ்நாடு அரசு இதனைக் கருத்தில் கொண்டு பணியில் மூத்தோரின் அடிப்படை பதவி உயர்வு உரிமைக்கு எந்தவொரு குந்தகமும் நேராமல் காப்பதைத் தம் முழுமுதற் கடமையாகக் கொள்ள வேண்டும். இதுகுறித்து விரிவானதொரு கலந்துரையாடல் நிகழ்த்தி, தொன்றுதொட்டு ஆசிரியர்களுக்கு இருந்து வரும் பணிமூப்பு அடிப்படையிலான பதவி உயர்வுகள் அனைத்திற்கும் பாதகம் நேராத வகையில் நல்லதொரு கொள்கை முடிவை எடுத்து தக்க அரசாணை வெளியிடுவது அவசர அவசியமாகும். அப்போதுதான் பதவி உயர்வு கலந்தாய்வு நடைமுறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகள் அனைத்தும் ஒழியும். இந்திய அளவில் கல்வி அடைவுக் குறியீட்டில் முதன்மையாக மேம்பட்டு முன்னோடியாக ஓங்கி விளங்கும் திராவிட மாடல் அரசின் மணிமகுடமாகத் திகழும் கல்வித்துறை என்றென்றும் ஒளிரும்.


கட்டுரை:
திரு. மணி கணேசன்,
எழுத்தாளர்.

Leave a Reply