Home>>திரை விமர்சனம்>>தண்டட்டி -திரை விமர்சனம்
திரை விமர்சனம்

தண்டட்டி -திரை விமர்சனம்

தண்டட்டி.

தரமான திரைக்கதையோடு திரை யரங்குகளில் வெளிவரும் பல சிறிய பட்ஜெட் படங்கள் ரசிகர்களின் கவனத்தை பெறாமலேயே போய் விடுகின்றன. ஆனா பிற்பாடு ஓடிடி தளங்களில் வெளியாகி மக்களின் கவனத்தைத் பெறுகின்றன.
அப்படி ஒரு படம் தான் இந்த தண்டட்டி.

கதாநாயகன், கதாநாயகி என்ற வழக்கமான வடிவத்தில் திரைக்கதை இல்லாமல் முற்றிலும் புதிதாக இதுவரை நாம் பார்த்திராத ஒரு கதைக்களத்தில் வந்துதள்ளது .
தண்டட்டி என்ற வார்த்தைக்கான அர்த்தமே நம்மில் பலருக்கு தெரியாது. அதுவே இந்த படத்திற்கான பெரிய விளம்பரத்தை கொடுக்கவில்லை என நினைக்கிறேன்.

பெண்கள் காதில் போடும் தோடு போன்ற ஒரு ஆபரணம் தான் தண்டட்டி.பெரிய தோடு .

பெரும்பாலும் ஒரே ஒரு பொருளை படத்தின் மையக்கதையாக வைத்து ஒரு முழு படத்தையும் எடுப்பது என்பது வெகு சில படங்களே வந்துள்ளன..ஆங்கிலத்தில் bicycle theft ,தமிழில் பொல்லாதவன் பின் மலையாளத்தில் பகத் பாஸில் நடித்த டைமன்ட் நெக்லஸ் என்ற ஒரு படம் வந்தது. இது போன்ற வெகு சில படங்களே எனக்கு ஞாபகம் வருது.

அந்த வரிசையில் தண்டட்டி என்ற ஒரு ஆபரணத்தை மையமாக வைத்து அதன் பின்னணி, அதன் முக்கியத்துவம், அதன் இழப்பு என மிக அழகான ஒரு திரைக்கதையோடு படத்தை நமக்கு கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராம் சங்கையா..

கிடாரிப்பட்டி என்ற கோளாறு பிடிச்ச ஒரு கிராமத்தில் வசிக்கும் தங்கப் பொண்ணு (ரோகிணி), திடீரென காணாமல் போய்விடுகிறார். கண்டுபிடித்து தரச் சொல்கிறார்கள் அவர் பேரன் மற்றும் அவர் மகள்கள் . விவகாரமான ஊரான அங்கு செல்ல, காவலர்கள் மறுத்துவிட, புதிதாக மாற்றலாகி வந்திருக்கும் ஹெட் கான்ஸ்டபிள் சுப்பிரமணி (பசுபதி) செல்கிறார். அவரைக் கண்டுபிடித்த நிலையில் திடீரென மரணமடைகிறார் தங்கபொண்ணு. சடலமாக வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் அவரின் 4 மகள்களும் மகனும் அவர் காதில் மாட்டியிருக்கும் தண்டட்டியை எப்படி கைப்பற்றலாம் என தனித்தனியாகத் திட்டம் போடுகின்றனர். இந்நிலையில் திடீரென மாயமாகிறது தண்டட்டி. அதைத் திருடியது யார்? ஹெட்கான்ஸ்டபிள் சுப்பிரமணி அதைக் கண்டுபிடித்தாரா? அந்தத் தண்டட்டி யாருக்குச் சொந்தமானது. இறுதியில் அந்த தண்டட்டியின் நிலை என்ன என்பதைக் கொஞ்சம் நகைச்சுவை, நிறைய சுவாரஸ்யம் மற்றும் திருப்பங்களோடு ரசனையாகச் சொல்கிறது படம்.

படம் முழுக்கவே பசுபதி ஒற்றை ஆளாக தாங்கி நிற்கிறார். அவரை வைத்து தான் முழுத்திரைக்கதையும் நகர்கிறது. அற்புதமான நடிகர் பசுபதி. அவருக்கேற்ற நல்ல ஒரு படமாக அமைந்துள்ளது .அடுத்து தங்கப்பொண்ணாக வரும் ரோகிணியின் கதாபாத்திரத்தை குறிப்பிட்டே ஆக வேண்டும். படத்தின் பெரும் பகுதியில் அவர் பிணமாகவே நடித்துள்ளார். இந்த இருவரை சுற்றியே இந்த முழு திரைக்கதையும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரொம்பவே புதுமையான ஒரு முயற்சி என சொல்லலாம்.
எழவு வீட்டில் வரும் காட்சிகளை ரொம்பவே விலாவரியா எடுத்திருக்கிறார்கள். பல காட்சிகள் ரசிக்கும்படி உள்ளன. இருந்தாலும் சில காட்சிகளை குறைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

படத்தின் பின்னணி இசையை குறிப்பிட்டு சொல்ல வேண்டும். படத்தின் ஆரம்பத்தலைப்பில் இருந்தே உணர்ச்சிகரமான ஒரு இசையை படத்திற்கு வழங்கி படம் சொல்ல வரும் கருத்தை பார்வையாளர்களுக்கு முழுமையாக கடத்திருக்கிறார் சாம் cs .

இரண்டாம் பாதியில் படம் சற்று இழுவையாக போனாலும் படத்தின் கிளைமாக்ஸ் ரொம்பவே அற்புதமாக உள்ளது .

கண்டிப்பாக குடும்பத்தோடு காண ஒரு தரமான படைப்புதான் இந்த “தண்டட்டி”.

அமேசான் பிரைம் ல உள்ளது.

-மன்னை செந்தில் பக்கிரிசாமி

 

Leave a Reply