Home>>அரசியல்>>வடலூரில் வள்ளலார் பெருவெளியில் புதிய கட்டுமானங்கள் கூடாது.
அரசியல்செய்திகள்தமிழ்நாடு

வடலூரில் வள்ளலார் பெருவெளியில் புதிய கட்டுமானங்கள் கூடாது.

வடலூரில் வள்ளலார் பெருவெளியில் புதிய கட்டுமானங்கள் கூடாது என்று அரசுக்குக் கோரிக்கை வைத்து, ஆர்ப்பாட்டம் நடத்த முனைந்தோரைத் தடுத்து, அவமானப்படுத்தி மாணவர்களைத் துன்புறுத்திய கடலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தற்போது வடலூர் வளர்மதி திருமண மண்டபம் ஒன்றில் காவல்துறையின் முன் தடுப்புக் கைதில் இருந்து தமிழ்நாடு காவல்துறை தலைவருக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அவர்கள் அனுப்பிய கடிதம் பின்வருமாறு…

அனுப்புநர்:
பெ. மணியரசன்,
ஒருங்கிணைப்பாளர்,
தெய்வத் தமிழ்ப் பேரவை,
150, புது ஆற்றுச் சாலை,
சமீன்தார் குடியிருப்பு,
தஞ்சாவூர்.
கைப்பேசி – 9443274002

(தற்சமயம் வடலூர் வளர்மதி திருமண மண்டபம் ஒன்றில் காவல்துறையின் முன் தடுப்புக் கைதில்)

பெறுநர்:
உயர்திரு. காவல்துறை தலைமை இயக்குநர் (D.G.P) அவர்கள்,
காவல்துறை தலைமையகம்,
சென்னை.

மதிப்பிற்குரிய ஐயா…
பொருள்: வடலூர் வள்ளலார் பெருவெளியில் புதிய கட்டுமானங்கள் கூடாது என்று அரசுக்குக் கோரிக்கை வைத்து, ஆர்ப்பாட்டம் நடத்த முனைந்தோரைத் தடுத்து, அவமானப்படுத்தி மாணவர்களைத் துன்புறுத்திய கடலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை கோருதல் – தொடர்பாக

கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள வளர்மதி திருமண மண்டபத்தில் காவல்துறையின் தடுப்புக் காவலில் நானும், 40 பெண்கள் உள்ளிட்டு 353 பேரும் அடைத்து வைக்கப்பட்டுள்ளோம்.

இன்று (10.04.2024) வடலூர் வள்ளலார் சத்திய ஞானசபை பெருவெளிக்கு வெளியே அதன் நுழைவு வாயிலில் விருதாச்சலம் செல்லும் சாலை ஓரத்தில் மக்கள் திரள் கோரிக்கை ஆர்ப்பாட்டம் ஒன்றை தமிழ்நாடு அரசு நோக்கி வைத்திருந்தோம். அதற்கான அனுமதி கோரி 02.04.2024 அன்று வள்ளலார் பணியகத்தின் கடலூர் மாவட்ட அமைப்பாளர் திரு. க. முருகன் அவர்கள், வடலூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. இராஜராஜன் அவர்களை நேரில் சந்தித்து மனு அளித்தார். அம் மனுவை வாங்க மறுத்த அவர், குறிஞ்சிப்பாடியில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரி அவர்களிடம் அளிக்கக் கூறினார். அதன் பிறகு 04.04.2024 அன்று கடலூர் மாவட்ட நாடாளுமன்றத் தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்களை, அவரது அலுவலகத்திற்குச் சென்று மேற்படி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கோரி கடிதம் கொடுத்தார். அத்தகவலையும் வடலூர் காவல் நிலையத்திற்கு தெரிவித்தார்.

அந்த வேண்டுகோள் கடிதத்திற்கு பதில் வராத நிலையில், நேற்று (09.04.2024) காலை மாவட்டத் தேர்தல் அதிகாரி அவர்களை, அணுகி எங்கள் ஆர்ப்பாட்ட விண்ணப்பத்திற்கு இன்னும் அனுமதி கடிதம் வரவில்லை அனுமதி கடிதம் கொடுங்கள் என்று திரு. முருகன் அவர்கள் கேட்டார். அதற்கு அங்கிருந்த ஓர் பொறுப்பு அதிகாரி, “உங்களுக்கு அனுமதிக் கடிதம் கோட்டாட்சியருக்கு அனுப்பப்பட்டு விட்டது” என்றார்கள். கோட்டாட்சியர் அலுவலகத்தில் கேட்டதற்கு குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுமதிக் கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறது என்றார்கள். அந்த அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, “எங்களுக்கு நீங்கள் சொல்லும் ஆர்ப்பாட்டம் குறித்து எந்தக் கடிதமும் வட்டாட்சியருக்கு வரவில்லை” என்று சொல்லிவிட்டார்கள்.

அந்த அலுவலகத்தில் இருந்தபடியே, திரு. முருகன் அவரகள், கடலூர் மாவட்டத் தேர்தல் அதிகாரி அலுவலகத்திற்குத் தொடர்பு கொண்டார். கைப்பேசி அழைப்பை எடுத்த அதிகாரி, “உங்களுக்கு அனுமதிக் கடிதம் கொடுக்கப்பட்டு விட்டது” என்றார்கள்.

இதை நம்பி 10.04.2024 அன்று ஏற்கெனவே நாங்கள் அறிவித்தபடி காலையில், வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபை நுழைவு வாயிலுக்கு வெளியே சாலை ஓரத்தில், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வருபவர்களை வரவேற்பதற்காக, திரு. முருகன் அவர்கள், அங்கு 9 மணி வாக்கில் போயிருந்தார். அவருடன் தமிழ்நாடு அரசின் ஓய்வு பெற்ற வேளாண் துறை அதிகாரி பன்னீர்செல்வம் அவர்களும் இருந்தார்கள். அந்த நேரத்தில் நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் என்கிற ஊரில் இருந்து எங்கள் வள்ளலார் பணியகத்தைச் சேர்ந்த மாணவர்களும் இளைஞர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள அங்கு வந்து சேர்ந்தார்கள். அவர்களை வரவேற்று நெடுஞ்சாலை ஓரமாக அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு வந்த காவல்துறையினர், “நீங்கள் என்ன போராட்டத்துக்கு வந்திர்களா?” என்றார்கள். அதற்கு திரு. முருகன் அவர்கள், “ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி வாங்கி இருக்கிறோம்” என்று சொன்னார். உடனே காவல்துறையினர், “போராட்டம் நடத்துவா வந்திருக்கிறீர்கள்? உங்களுக்கு அனுமதி இல்லை! உங்களை கைது செய்கிறோம்! வண்டியில் ஏறுங்கள்!” என்றுகூறி, அத்தோழர்களை வற்புறுத்தி காவல்துறை வண்டியில் ஏற்றிக் கொண்டு வந்து ஒரு மண்டபத்தில் அடைத்தார்கள்.

இன்று காலை 10.15 மணி அளவில் சற்றொப்ப 400 பேர் வடலூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள ரவுண்டானா அருகில் இருந்து சாலை ஓரமாக வள்ளலார் சபைக்கு அருகே செல்ல முற்பட்டோம். அப்போது காவல்துறையினர் தடுப்புகள் வைத்து எங்களைத் தடுத்து போகக்கூடாது என்றார்கள். உங்களுக்கு அனுமதி இல்லை என்று சொன்னார்கள். காவல்துறை ஆய்வாளர் திரு இராஜராஜன் தலைமையில் இதையெல்லாம் செய்தார்கள்.

“அனுமதி மறுத்து நீங்கள் எங்களுக்குக் கடிதம் கொடுக்கவில்லை. நாங்கள் உங்களிடம் அனுமதி கோரி மனு கொடுத்தபோது, அதை தேர்தல் அதிகாரியிடம் கொடுங்கள் என்று திருப்பி விட்டீர்கள். அவர்களிடம் மனு கொடுத்த பிறகு அவர்களும் அனுமதி கொடுத்துவிட்டோம் என்று சொல்லிவிட்டார்கள். இன்று காலை வரை அனுமதி இல்லை என்று எங்களிடம் யாரும் சொல்லவில்லை. இவர்கள் அனுமதி இருக்கிறது என்று பல்வேறு ஊர்களில் இருந்து வந்து விட்டார்கள். இவர்கள் கட்சிக்காரர்கள் அல்ல! தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து வந்திருக்கக்கூடிய சன்மார்க்க சபைகளைச் சார்ந்தவர்கள்.

வன்முறை இன்றி கோரிக்கை ஆர்ப்பாட்டம் (demonstration) சிறிது நேரம் நடத்திக் கலையப் போகிறோம். சாலை போக்குவரத்துக்கும் இடைஞ்சல் இல்லை. சத்ய ஞான சபைக்குள்ளும் நுழைய மாட்டோம். இதை ஏன் தடுக்கிறீர்கள்?” என்று நான் கேட்டேன். “உங்களுக்கு அனுமதி இல்லை” என்றதோடு முரட்டுத்தனமாகப் பேசினார். தள்ளுமுள்ளு ஏற்படக்கூடிய நிலைமையை உருவாக்கினார்.

அதன் பிறகு எங்களை ஆண்கள் – பெண்கள் – முதியவர்கள் என அனைவரையும் கைது செய்து வடலூர் வளர்மதி திருமண மண்டபத்தில் கொண்டு வந்தார்கள். அங்கே ஏற்கெனவே வெண்ணந்தூர் மாணவர்களும் வள்ளலார் பணியக மாவட்ட தலைவர் திரு. முருகன் மற்றும் பன்னீர்செல்வம் அவர்களும் கைது செய்யப்பட்டு இருந்தார்கள்.

அந்த மாணவர்களை நாங்கள் பார்த்து ஆறுதல் கூறப் போனோம். திருமண மண்டபத்தில் காவல் பொறுப்பில் இருந்த குள்ளஞ்சாவடி ஆய்வாளர் திரு. ஜெ. அசோகன் அவர்கள், அந்த மாணவரோடு நீங்கள் பேசக்கூடாது என்று அவர்களை தனியாக கீழே தடுத்து வைக்கப் போகிறோம் என்றார்கள்.
“அவர்களெல்லாம் எங்கள் வீட்டுப்பிள்ளைகள். எங்களிடமிருந்து ஏன் பிரித்து பிரித்துக் கொண்டு போகிறீர்கள் அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள்?” என்றேன். “அவர்கள் படிக்கின்ற காலத்தில் போராட்டத்திற்கு வந்ததே குற்றம்!” என்றார். தயவுசெய்து உங்கள் மேல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு முடிவெடுங்கள் என்றேன். அதெல்லாம் எங்களுக்கு தெரியும் என்றார். பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார். அந்த மாணவர்களுடைய கைப்பேசியை பிடுங்கி சுவிட்ச் ஆப் செய்து வைத்திருக்கிறார்கள். அதைக் கொடுங்கள் என்று கேட்டேன். தர முடியாது என்று சொல்லிவிட்டார்.

அடுத்து வள்ளலார் சபையைச் சார்ந்த தாய்மார்களும் சகோதரிகளும் இந்த கோரிக்கை அறப்போராட்டத்தில் கலந்துகொண்டு கைதாகி இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் மகளிர் காவல் துணை ஆய்வாளர் பொ. சுமதி அவர்கள், ஆண்களோடு பெண்களை உட்கார வைக்க முடியாது, தனியாகத்தான் வைக்க வேண்டும் என்றார். இதுவரை பல போராட்டங்களில் நாங்கள் பெண்களோடு கலந்து கொண்டிருக்கிறோம். காவல்துறை எங்களை கைது செய்தால் ஒரே மண்டபத்தில் தான் வைப்பார்கள். இங்கே மட்டும் ஏன் இப்படி கெடுபிடி செய்கிறீர்கள் என்று கேட்டோம். “நாங்கள் அப்படித்தான் செய்வோம்” என்று இறுமாப்பாக பதில் சொன்னார்.
சாதாரணமாக நடந்து முடிந்திருக்க வேண்டிய ஒரு சனநாயக ஆர்ப்பாட்டத்தை காவல்துறையிலுள்ள சில அதிகாரிகளின் அகங்கார அணுகுமுறையினால் எங்கள் மக்களின் ஜனநாயக உரிமையும் மனித உரிமையும் பறிக்கப்பட்டுள்ளன.

காவல்துறைக்கும் மக்களுக்குமான ஒரு கசப்பான மனநிலையை இந்த சில அதிகாரிகள் உருவாக்கி விட்டார்கள்.

தாங்கள் இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட எங்களுக்கு நீதி வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.


இவண்,
பெ. மணியரசன்,
ஒருங்கிணைப்பாளர்,
தெய்வத் தமிழ்ப் பேரவை,
நாள்: 10.04.2024
இடம்: வடலூர்.


செய்தி உதவி:
மருத்துவர் பாரதிச்செல்வன்,
மன்னார்குடி.

Leave a Reply