Home>>அரசியல்>>தேவை வர்ணாசிரம ஒழிப்பு! – மன்னர் மன்னன்

தமிழகத்தில் சாதி மறுப்புத் திருமணங்கள் வெறும் 3%தான் என்று 2011ல் வந்த ஆய்வு முடிவை திராவிடர்கள் மறுக்கிறார்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணம் ‘அந்த ஆய்வில் ஒரே வர்ணத்தில் உள்ள இரண்டு வெவ்வேறு சாதியினரின் திருமணத்தை சாதி மறுப்பு திருமணமாக எடுக்காமல், இரண்டு வெவ்வேறு வர்ணங்களுக்கு இடையில் நடக்கும் திருமணங்களையே சாதி மறுப்புத் திருமணமாக ஏற்கிறார்கள், அதனால்தான் தமிழகத்தில் எண்ணிக்கை குறைவாக வந்துள்ளது’ – என்பது.

தமிழகத்தின் சீரழிவுக்குக் காரணம் சாதியல்ல வர்ணமே என்று நான் தொடர்ந்து எழுதியும், பேசியும் வருகிறேன். அதற்கான சான்றுதான் இது. தமிழகத்தில் சாதியை ஒழிப்போம் என்றவர்கள் வர்ணாசிரமத்தை வலுவாகக் கட்டமைத்து இருக்கிறார்கள்!

தமிழகத்தில் குடி என்ற முறை சங்ககாலத்தில் இருந்தது, சோழர் காலத்தில் அதன் பெயர் சாதி என்று திரிந்தது. ஆனால் இந்த இரண்டு காலத்திலும் புறமணத்திற்கு தடை இல்லை, ஆணவப் படுகொலை நடக்கவும் இல்லை.

பின்னர் கி.பி.13ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆந்திராவில் இருந்து தலைகாட்டி, பின்னர் தெலுங்கு ஆட்சியாளர்களின் ஆட்சியில் தமிழகத்தில் நிலைபெற்ற வர்ணாசிரமம்தான் தமிழகத்தில் இப்போதும் வலுவாக உள்ளது. ஆணவப் படுகொலையும் கட்டாய அகமண முறையும் சாதித் தீண்டாமையும் வர்ணாசிரமத்தின் பிள்ளைகள்தான். அந்த வர்ணாசிரமம்தான் அகற்றப்பட வேண்டியது.

தமிழகத்திற்குள் இடையில் வந்து, தமிழகத்தை சீரழித்த வர்ணாசிரமம் குறித்து வாயே திறக்காமல், எந்த வர்ணாசிரமம் இன்றும் காணப்படுகிறதோ அதை கண் மூடிக் கடந்து கொண்டே, ‘சாதிதான் அனைத்திற்கும் காரணம், சாதியை ஒழிப்போம்’ – என்பது மக்களை திசை திருப்பும் வேலை மட்டுமே.

அந்த வேலையை வர்ணாசிரமத்தை தமிழகத்தில் வலுவாகப் புகுத்திய விஜயநகரின் வாரிசுகள் தொடர்ந்து செய்கிறார்கள்.

தமிழகம் மீண்டும் நலம்பெற சாதிகளின் நடுவில் இருந்த சமத்துவத்தைக் குலைத்து, சாதிப் படிநிலையை உருவாக்கிய வர்ணாசிரமத்தை ஒழிப்போம். அது குறித்து பேசத் தயங்கும் வர்ணாசிரம ஆதரவாளர்களை அடையாளம் காண்போம்.

வர்ணங்களுக்கு இடையில் நடக்காத திருமணம் ஏற்றத்தாழ்வை மாற்றுவது இல்லை. அது யாருக்கும் சாதனையும் அல்ல. ஏமாறாமல் இருப்போம்.


திரு. மன்னர் மன்னன்,
தமிழ் வரலாற்று ஆய்வாளர்.

Leave a Reply