Home>>அரசியல்>>முக்குலத்தோர் சமூகத்தினரைக் குறிவைத்து தாக்கும் தேவர்குளம் காவல்துறையினர்.
செந்தமிழன் சீமான்
அரசியல்காவல்துறைசெய்திகள்தமிழர்கள்தமிழ்நாடு

முக்குலத்தோர் சமூகத்தினரைக் குறிவைத்து தாக்கும் தேவர்குளம் காவல்துறையினர்.

முக்குலத்தோர் சமூகத்தினரைக் குறிவைத்து தாக்கும் தேவர்குளம் காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள தேவர்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றும் பவுல், அருள்ராஜ், கார்த்திக், சபாபதி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை வேண்டுமென்றே பழிவாங்கும்போக்குடன் வழக்குப் பதிந்து கைது செய்வது வன்மையான கண்டனத்துக்குரியது.

காவல்துறையினரின் தொடர்ச்சியான இத்தகைய அதிகார அத்துமீறல் குறித்து முறையிடுவதற்காக கடந்த 09.05.2024 அன்று காவல்நிலையத்தை முற்றுகையிட்ட தேவர்குளம், வன்னிக்கோனேந்தல், பனவடலிசத்திரம், குருக்கள்பட்டி, சண்முகநல்லூர் உள்ளிட்ட 9 கிராம மக்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியதோடு, நீதி கேட்கச்சென்ற 50 பேர் மீது வழக்கு பதிந்து கைது செய்திருப்பது எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும்.

தேவர்குளம் சுற்றுவட்டாரப்பகுதியில் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர்களுடன் எவ்வித பிரச்சனைகளும் இன்றி ஒரு தாய் வயிற்று மக்களாக அமைதியாக வாழ்ந்துவரும் நிலையில், காவல்துறையினர் தேவையில்லாமல் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் குறிவைத்துத் தொடர்ச்சியாக வழக்குப் பதிவதும், கைது செய்வதும் முழுக்க முழுக்க உள்நோக்கமுடையதாகும். தேவர்குளம் காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்கச் சென்றால், காவல்துறை அதிகாரிகள் பிரச்சனை குறித்து கேட்காமல், சாதி என்னவென்று கேட்பதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர். காவல்துறையினரின் இத்தகைய ஒருதலை பட்சமான பழிவாங்கும் போக்குகள் ஒற்றுமையுடன் வாழும் தமிழ் மக்களிடம் சாதியப்பகையைத் தூண்டி அப்பகுதியின் அமைதியைச் சீர்குலைக்கவே வழிவகுக்கும்.

ஆகவே, தமிழ்நாடு அரசு உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு, சாதிய வன்முறையைத் தூண்டி சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும் நோக்குடன் முக்குலத்தோர் சமூகத்தினரைக் குறிவைத்து தாக்கும் தேவர்குளம் காவல்துறை அதிகாரிகள் மீது நீதி விசாரணை நடத்தி, சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். காவல்துறையினரின் அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடியதற்காக, கைது செய்யப்பட்டுள்ள முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த 50 பேர் மீதான வழக்குகளைத் திரும்பப்பெற்று, அவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.


திரு. செந்தமிழன் சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி.

Leave a Reply