விச ஜந்துகள் கடித்ததில் விளை நிலங்கள் எண்ணியியல் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த கல்லூரி மாணவி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி – முன் அனுபவமில்லாத கல்லூரி மாணவ, மாணவியர்களை கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்துவது கடும் கண்டனத்திற்குரியது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தமிழக அரசின் விளை நிலங்கள் எண்ணியியல் கணக்கெடுப்பு எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கல்லூரி மாணவி ஒருவர் விச ஜந்துகள் கடித்ததால் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
வேளாண்மைக்கான நிலம் மற்றும் சாகுபடி பயிர் குறித்த முழுமையான விவரங்களை சேகரித்து எண்ணியியல் மயமாக்கும் நோக்கத்தில் மேற்கொள்ளப்படும் சர்வே பணிகளில் வருவாய் துறையினரை ஈடுபடுத்தாமல், வேளாண் கல்லூரி மாணவ, மாணவியர்களை ஈடுபடுத்தி அவர்களின் உயிர் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய தமிழக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
எண்ணியியல் கணக்கெடுப்பு பணிகளுக்கு தேவையான பெரும்பாலான நிதியை மத்திய அரசு ஒதுக்கும் சூழலில், அண்டை மாநிலங்கள் அந்தந்த மாநில அரசு அதிகாரிகளை பயன்படுத்தியும், பயிற்சி பெற்ற தனியார் நிறுவனங்கள் மூலமாகவும் சர்வே பணிகளை செய்து வருவதாக அறியவரும் நிலையில், தமிழக அரசு மட்டுமே அரசு அதிகாரிகளை தவிர்த்து வேளாண் கல்லூரி மாணவ, மாணவியர்களை கட்டாயப்படுத்தி சர்வே பணிகளில் ஈடுபட வைத்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.
எனவே, விச ஜந்துகள் கடித்ததில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மாணவிக்கு உரிய சிகிச்சை வழங்குவதோடு வருவாய்த்துறை மூலமாக மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டிய கணக்கெடுப்பு பணிகளில் முன் அனுபவம் இல்லாத வேளாண் கல்லூரி மாணவ, மாணவியர்களை ஈடுபடுத்தும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
—
திரு. டிடிவி. தினகரன்,
தலைவர்,
அம்மா மக்கள் முன்னேற்றம் கழகம்.