திமுக அரசே! அலங்காநல்லூர் சல்லிக்கட்டு அரங்கத்திற்கு மதுரையை ஆண்ட ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பெயரைச் சூட்டு!
சல்லிக்கட்டு மீட்புக்கான போராட்டம் என்பது பதினொரு ஆண்டுகாலப் போராட்டமாகும். 2006 ஆம் ஆண்டு முதல் பீட்டா அமைப்பு தூண்டுதலின் பேரில் பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்பட்டன.
பீட்டாவோடு அன்றைய காங்கிரஸ் அரசும் கைகோர்த்துக் கொண்டு தமிழர் பாரம்பரிய விளையாட்டை அழிக்க நினைத்தது. 2011ஆம் ஆண்டில் சல்லிக்கட்டு போட்டிகளில் காளைகள் சித்திரவதை செய்யப்படுவதாகக் கூறி, பாதுகாக்கப்படும் விலங்குகள் பட்டியலில் காளை மாட்டைச் சேர்த்தது அன்றைய காங்கிரஸ் அரசு. அப்போது கூட்டணியில் இருந்த கட்சி தி.மு.க.வாகும்.
அதனைத் தொடர்ந்து சல்லிக்கட்டு போட்டிக்கான தடை விதிக்கும் அறிவிப்பை வெளியிட்டது பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு.
இந்த அறிவிப்பை வெளியிட்டவர் அப்போதைய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ். இதைத் தொடர்ந்து, 2014-ம் ஆண்டு இத்தடை அறிவிப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.
இதனால், அந்தாண்டு சல்லிக்கட்டு போட்டி நடைபெறவில்லை. அதேபோல, 2015-ஆம் ஆண்டும் சல்லிக்கட்டு நடைபெறவில்லை. 2016ஆம் ஆண்டில் சல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டி காட்டுமிராண்டித்தனமானது என்றும், உச்ச நீதிமன்றம் தடை செய்ததை வரவேற்றும் திமிரோடு பேசி வந்தவர்தான் இந்த ஜெய்ராம் ரமேஷ்.
2017-ஆம் ஆண்டு சல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழ்நாடே பொங்கி எழுந்தது. இலட்சக்கணக்கில் தமிழர்கள் ஒவ்வொரு ஊரிலும் அணி திரண்டு போராட்டம் நடத்தினர். மெரீனா கடற்கரையில் வெள்ளமென தமிழர் கூட்டம் திரண்டது.
தமிழன்டா என்ற முழக்கமே அப்போது தில்லியை ஆண்ட மோடி அரசைப் பணிய வைத்தது. தமிழர்கள் நடத்திய போராட்டமே சல்லிக்கட்டை மீட்டது.
சல்லிக்கட்டு போட்டிக்கு பீட்டா போன்ற அமைப்புகள் தடை விதிக்கக் கோரியதை ஆதரித்ததோடு தமிழர்களின் சல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் மூலம் தடை வாங்கித் தந்த காங்கிரஸ் கட்சியில் தான் அப்போது திமுகவும் அங்கம் வகித்தது.
காங்கிரஸ் அரசைக் கண்டித்து அதற்காக திமுக பதவியை விட்டு விலகவேவில்லை. சல்லிக்கட்டுக்கும் திமுகவிற்கும் ஒரு தொடர்பும் இல்லை. காங்கிரஸ் அமைச்சரவையில் பங்கெடுத்து தமிழர்களின் பாரம்பரியத்தை காக்க முன்வராமல் துரோகம் செய்தது திமுக.
இதையெல்லாம் மூடி மறைத்து விட்டு, அலங்காநல்லூர் அருகே 44 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அரங்கத்திற்கு கருணாநிதி நூற்றாண்டு அரங்கம் என்று பெயர் சூட்டியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏறுதழுவல் விளையாட்டுப் போட்டி மூலம் தமிழர் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பாதுகாத்தவர்கள் மதுரையை ஆண்ட சங்ககாலப் பாண்டியர்கள்.
மதுரையில் அந்தப் பாண்டிய மன்னர்களுக்கென்று எந்த நினைவுச் சின்னமும் இல்லை. மதுரையை ஆண்ட பாண்டியர்களில் முதன்மையானவரும், வட ஆரிய மன்னர்களை போரில் வெற்றி கொண்டவருமான ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் பெயரைச் சூட்டுவது தான் மிகப் பொருத்தமானது.
தமிழர் பாரம்பரிய சல்லிக்கட்டை அழிக்க முயன்ற ஆரியத்துவா கும்பலுக்கு பதிலடி தரும் வகையில் மதுரையை ஆண்ட ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பெயரைச் சூட்டி மதுரைக்கு புகழ் சேர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
—
திரு. கதிர் நிலவன்.