அகில இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரான சீதாராம் யெச்சூரி அவர்கள் 72 வயதில் இன்று டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை அடைந்தார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறேன்.
ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட அவர், சென்னையில் 12.08.1952 அன்று பிறந்தார். டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்திலும், ஆந்திராவிலும் கல்வி பயின்ற சீத்தாராம் யெச்சூரி அவர்கள், மாணவப் பருவத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவான இந்திய மாணவர் சங்கக் கூட்டமைப்பில் இணைந்து கட்சி வளர்ச்சிக்காக அரும்பாடு பட்டார்.
இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டு, ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டு, மிசா கொடுமைகள் அரங்கேற்றம் செய்யப்பட்டபோது அதனை எதிர்த்து மாணவர் சக்தியைத் திரட்டிப் போராடினார். அதன் காரணமாக கைது செய்யப்பட்டு, சிறையிலும் அடைக்கப்பட்டார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினராகவும், பொலிட் பீரோ உறுப்பினராகவும் சிறப்புடன் பணியாற்றியவர். அகில இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாராகவும் 2015 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார்.
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் 2005 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை இவர் பணியாற்றினார்.
இவரது அறிவார்ந்த ஆங்கிலக் கட்டுரைகளும், நூல்களும், தீக்கதிர் ஏட்டில் வெளிவரும், பொதுச்செயலாளர் மேசையிலிருந்து என்ற பகுதியில் வெளிவரும் கருத்துக்களும் இவரின் எழுத்தாற்றலுக்குச் சான்றாகும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் போராளித் தலைவராக பணியாற்றிய இவரின் மறைவு இடதுசாரிகளுக்கும், முற்போக்குச் சிந்தனையாளர்களுக்கும் பேரிழப்பாகும். அவரது தன்னலமற்ற இயக்கப் பணிக்கு வீரவணக்கம் செலுத்துவதோடு, அவரைப் பிரிந்த துயரில் உள்ள தோழர்களுக்கும் ஆறுதலை மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.
—
ஐயா. வைகோ,
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை – 8
12.09.2024