பாகம் – சுரண்டல்
அறிவினாலும் ஆராய்ச்சியினாலும் இயற்கையைவிடச் சிறந்த
ஒன்றை உருவாக்க முடியும் என்று
மனித இனம் நம்புவது கேலிக்குரிய மாயை.
– மசனோபு ஃபுக்குவோக்கா (சப்பானிய இயற்கை வேளாண் விஞ்ஞானி)
உங்கள் வீட்டில் இன்னொருவன் வந்து உட்கார்ந்து கொண்டு உங்களை விரட்டினால் அல்லது நீங்கள் எப்படி வாழ வேண்டும் என நிர்பந்தித்தால் அல்லது உங்கள் வீட்டில் உங்களையே அடிமையாக வைத்திருந்தால் அல்லது இந்த மூன்றையுமே செய்தால் நீங்கள் என்ன செய்வீர்.
திருப்பி அடித்து விரட்டுவீர் தானே அல்லது குறைந்த பட்சம் எதிர்ப்பையாவது பதிவு செய்வீர்கள் தானே. இல்லை அப்படியே வாழ்ந்துட்டு போய்விடுவேன் என்று எண்ணுவீர்களா மாட்டீர்கள் தானே. உங்கள் வீட்டை அப்படியே உங்கள் தெருவாக, ஊராக, மாநிலமாக, நாடாக கற்பனை செய்து பாருங்கள்.
நிலைமையின் தீவிரம் உணர்வீர்கள். இதை நாம் நம்முடைய பொருளாதார தேடலில் சாதாரணமாக கடந்து போயிருப்போம் ஆனால் வாழ்க்கைக்கான அடிப்படையே அங்கு தான் உள்ளது. நாம் தனித்து வாழ இயலாது. நாம் உண்ணும் உணவிலிருந்து உடுக்கும் உடையிலிருந்து அனைத்தையும் அடுத்தவர்களை சார்ந்து தான் வாழ வேண்டும், அது தான் இயற்கை.
இங்கு இயற்கையே நமக்கான மிக பெரிய பாடம். இருளும் ஒளியும் மழையும் வெப்பமும் காற்றும் ஈர்ப்பும் என அனைத்தும் சேர்ந்து இருப்பதால் தான் இங்கு மனிதர்கள் வாழ கூடிய சூழல் இருக்கிறது. அதேபோல் நாமும் ஒவ்வொருவருடன் கூடி வாழ்வது தான் வாழ்க்கை. அதை விடுத்து வாழ ஆரம்பிப்பது இயற்கையை மீறும் செயல்.
இந்த சமநிலை ஒவ்வொரு காலகட்டத்திலும் இருந்துள்ளது, அக்காலத்தில் யார் எதிரி என மக்களுக்கு நேரடியாக தெரியும் அதனை எதிர்கொள்ள அவர்கள் தயாராக இருந்தனர், இவ்வளவு காலம் தற்காத்து கொண்டும் இருந்தனர். ஆனால் இப்பொழுது கண்ணனுக்கு தெரியாத ஏன் சிந்தித்தால் கூட அறிய இயலாத வகையில் தான் நம் எதிரிகள் ஒன்றுடன் ஒன்று கலந்துள்ளனர். இவற்றை ஏற்கனவே உணர்ந்தவர்கள் ஒன்று போராடி கொண்டிருப்பார்கள் அல்லது ஒடுக்கப்பட்டிருப்பார்கள்.
நீங்கள் நினைக்கலாம் அப்படி என்றால் நாமும் ஒடுக்கபடுவோமே என்று. உங்களுக்கு சிறு வயதில் கண்டிப்பாக ஒரு கதை சொல்லி இருப்பார்கள் அதன் அடிப்படையாக “ஒற்றுமையாக இருந்தால் உண்டு வாழ்வு” என்று சொல்லி முடித்திருப்பார்கள்.
அது ஒரு ஆப்ரிக்க நாடு. அவர்கள் அங்கு அமைதியாக ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர். நாட்டில் பெருவாரியான பகுதிகள் காடுகளாக, விவசாய நிலங்களாக, சதுப்பு நிலங்களாக இருந்த பசுமை படர்ந்த நாடு. விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன் பிடித்தல் போன்ற தொழில்கள் தான் பிரதானம். பூமிக்குமேல் அந்நிலங்கள் எவ்வளவு வளமாக இருந்ததோ அதேபோல் பூமிக்கு கீழ் எண்ணெய் நிரம்பி இருந்தது. அவற்றை கண்டறிந்த அமெரிக்க எண்ணெய் நிறுவனம் 1960களில் அங்கு நுழைந்தது.
அந்நிறுவனம் அந்நாட்டின் உள்கட்டமைப்பான சாலைகள், மின்சாரம், பள்ளிகள், மருத்துவமனைகள் போன்றவை கட்டித்தருவதாகவும் உள்ளூர் மக்களுக்கு வேலை கொடுத்து மாதாந்திர சம்பளம் கொடுப்பதாகவும் ஆசை வார்த்தை காட்டி அந்நாட்டில் எண்ணெய் எடுக்க அனுமதி வாங்கியது. இங்கு எண்ணெய் நிறுவனம் என்பது வெறுமனே நிறுவனம் மட்டும் அல்ல அமெரிக்க அரசும் தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அந்த அடிப்படை கட்டமைப்பை செய்துகொடுக்க அமெரிக்க அரசு அந்நாட்டிற்கு கடன் வழங்கும் அதற்கு வட்டியும் உண்டு. அதேபோல் அக்கட்டமைப்பு வேலைகளை செய்வதும் அமெரிக்க நிறுவனங்களே. ஆக பணத்தை கடனாக கொடுத்து அந்த பணத்தை அக்கட்டமைப்பை ஏற்படுத்தும் அமெரிக்க நிறுவனங்கள் மூலம் மீண்டும் அமெரிக்காவிற்க்கே மடைமாற்றி அந்த கடனுக்கான வட்டியையும் அந்நாட்டிடம் வசூலித்தது.
விவசாய நிலங்கள், காடுகள் அளிக்கப்பட்டு எண்ணெய் உறிஞ்சும் ஆலைகளாகவும் அந்தஆலைகளில் பணிபுரியும் வெளிநாட்டினர் தங்க அனைத்து வசதிகளும் படைத்த தங்குமிடங்களாகவும் மாற்றப்பட்டன. உலகிலேயே அதிக சதவிகித காடுகள் அழிக்க பட்ட நாடு அதுதான். அந்நாட்டில் உள்ள மொத்த காட்டில் சுமார் 60 சதவிகித காடுகள் அழிக்கப்பட்டன.
இதனால் மழை குறைந்தது. அதேபோல் ஆலையிலிருந்து வெளியேறும் கழிவுகளால் மண்ணும் கடலும் மாசடைந்தன, நிலத்தடிநீர்மட்டம் குறைந்தது அவற்றில் எண்ணைவித்துகள் கலந்தன, அவ்விடங்களில் வெப்பம் அதிகமாகி வாழ தகுதியற்ற இடங்களாயின. மண்ணும் நீரும் பாலானதால் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு அழிந்தது. கடலில் கலக்கப்பட்ட கழிவுகளால் மீன்கள் செத்து மிதந்து மீன்பிடி தொழிலும் அழிந்தன. செய்ய தொழில் இல்லாமலும் உணவு உற்பத்தி இல்லாமலும் மக்கள் வாழ்வாதத்திற்கும் உணவிற்கும் என்னசெய்வதென்றே தெரியாமல் உள்நாட்டிலேயே அகதிகளாக அலைந்தனர்.
மக்களின் புரட்சி வெடிக்கும் என்பதை முன்கூட்டியே தெரிந்திருந்த எண்ணெய் நிறுவனமும், அமெரிக்க அரசும் அங்குள்ள ஆட்சியின் சிறத்தன்மையை ஏற்கனவே கெடுத்து வைத்திருந்தது. மக்களுக்குள் மத இன துவேஷங்களை உருவாக்கி குழு குழுவாக சண்டை இட்டு கொள்ளும் படி செய்திருந்தது. உள்நாட்டு பிரச்சினைகளாலும் வறுமையாலும் அரசியல் நிலையற்ற தன்மையாலும் அந்நாடு சின்னாபின்னமானது.
இதனை பயன்படுத்தி கொண்டு அங்கு ராணுவ ஆட்சியை நிறுவியது அந்த எண்ணெய் நிறுவனம். ராணுவ ஆட்சியின் மூலம் எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிராக போராடுபவர்களை ஒடுக்கியும், தூக்கிலிட்டும் அராஜக போக்கை கடைப்பிடித்தது. அடுத்ததாக அண்டை நாடுகளுடனும் எல்லை மற்றும் மத ரீதியான பிரச்சனையை தூண்டி மக்களையும் ஆட்சியையும் திசைதிருப்பி தன்னுடைய அசுர வேக எண்ணெய் உறிஞ்சலை நடத்தியது. நாட்டிற்கு தேவையான ஆயுதங்களை வழங்கியும் அதேபோல் சில குழுக்களுக்கும் ஆயுதங்கள் விற்றும் அமெரிக்கா தன்னுடைய ஆயுத வியாபாரத்தையும் அங்கு நடத்தியது. பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது போல்.
எண்ணெய் எடுப்பதில் வருமானம் பார்த்தது, உள்நாட்டு கட்டமைப்பை மேம்படுத்த கடன் கொடுத்து, அக்கடனை திருப்பி செலுத்த இயலாத அந்நாட்டை அடிமை படுத்தியது, பிரச்சனைகளை தூண்டிவிட்டு அவற்றை காத்துக்கொள்ள ஆயுதம் வழங்குகிறேன் என்ற பெயரில் அதிலும் வருமானம் பார்த்தது.
இப்படி தன்னுடைய பணத்தாசையால் ஒட்டுமொத்த நாட்டையும் அம்மக்களின் வாழ்வையும் கெடுத்தது. இன்று அந்தநாடு மக்கள் வாழ தகுதியற்ற நாடாக ஐ.நா சபையின் அறிக்கையில் 186 வது பட்டியலில் உள்ளது. பசியினால் மக்கள் இறப்பு சதவிகிதம் அதிகம் உள்ள நாடு என்பதிலேயே நாம் அதன் நிலையை புரிந்து கொள்ளலாம்.
இது ஏதோ ஒரு நாட்டின் கதையல்ல. இங்குள்ள பெருவாரியான நாடுகளின் கதை. ஒருசில நிறுவனங்களால் ஒரு சில பெரும் அரசுகளால் ஏனைய நாடுகளும் நாட்டு மக்களும் சுரண்டப்பட்டு அவர்களின் வாழ்க்கை முறை சிதைக்கபடுகிறது. அடிப்படை வழிமுறை ஒன்று தான். வளர்ச்சி உள்கட்டமைப்பு என ஒரு நாட்டுக்குள் நுழைதல். இயற்கையை சுரண்டி அதன் மூலம் பணம் ஈட்டுதல், இதற்கு அந்தந்த நாட்டு அரசுகளை அடிபணிய வைத்தல்.
மக்கள் எதிர்க்காமல் இருக்க அவர்களுக்குள் சாதி மத இன வர்க்க ரீதியான பிரச்சனைகளை தூண்டி ஒற்றுமையை குழைத்தல். அண்டை நாடுகளுடன் பிரச்சனையை ஏற்படுத்துதல் இறுதியாக அனைத்தையும் கட்டுப்படுத்த என்று சொல்லி ஆயுதங்களையும் விற்று பணம் ஈட்டபடுகிறது. நம் நாட்டில் இது ஒரு படி மேலே உள்ளது.
காரணம் நம் நாடு சிதைக்கப்படும் அதே நேரத்தில் ஒரு உலக சந்தையாகவும் உள்ளது. அதனால் தான் இங்கு வளர்ச்சியும் வீழ்ச்சியும் சரிசதவிகித வழியில் உள்ளது. அனைத்து உற்பத்திகளையும் வாங்க இங்கு நுகர்வோர் உள்ளனர். அனைத்து நாடுகளுக்கும் சேவை செய்ய இங்கு பெரிய சேவை பிரிவும் உள்ளது. அவர்களின் சுரண்டலுக்காக இங்கு பெருவாரியான மக்களும் பகுதிகளும் இருக்கின்றன.
இவ்வளவு பெரிய நுகர்வும் சேவையளிக்கும் திறன் இல்லாவிட்டால் நாம் என்றோ அந்த ஆப்ரிக்க நாடுபோல் சுரண்டி அழிக்க பட்டிருப்போம். ஆக நம்மையே சுரண்டி, நம்மிடமே அதனை சந்தை படுத்தி நம்மையே அவர்களுக்கு சேவை வழங்கவும் பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் நம்மை அவர்களுடைய கதாபாத்திரங்களாக மாற்றி விட்டார்கள், அதிலிருந்து விடுபட நாம் முதலில் ஒற்றுமையாக வாழ பழக வேண்டும். முதல் பத்தியில் சொன்னதுபோல் “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு”.
ஒற்றுமையுடன்
– ரா.ராஜராஜன்,
மன்னார்குடி
(2051 ஆவணி மாதம் திறவுகோல் மின்னிதழில் இருந்து …)