உச்சநீதி மன்றத்தின் புதிய தீர்ப்பின் அடிப்படையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
கடந்த 03.08.2021 அன்று, அரியானா மாநிலத்தை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி ஒருவரின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அவ்வழக்கில் முக்கியமான தீர்ப்பு ஒன்றை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது.
அதாவது,அரசமைப்புச் சட்ட உறுப்பு 161 கீழ் மாநில அரசு தண்டனைக் குறைப்பு வழங்க முழு அதிகாரம் கொண்டிருக்கிறது. ஆளுநரின் தனிப்பட்ட விருப்பு இங்கு செயல்பட முடியாது. தொடர்புடைய மாநில அரசின் பரிந்துரை ஆளுநரை கட்டுப்படுத்தும் அதிகாரம் படைத்தது. தண்டனைக் குறைப்பு குறித்து மாநில அமைச்சரவை பரிந்துரை அளிக்கும் போது ஆளுநர் அதற்கு கட்டுப்பட்டு கையெழுத்திட வேண்டும்” என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பின் படி, பேரறிவாளன் உள்ளிட்ட ஈழ தமிழர்களை விடுதலை செய்வதற்கான வழிவகை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 161-வது பிரிவின் படி, மாநில ஆளுநருக்கு அதிகாரம் உண்டு என்று கடந்த 2018இல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அத்தீர்ப்பின் அடிப்படையில், அப்போதைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால் அத்தீர்மானத்தை மதிக்காத ஆளுநர், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டினார். பின்னர், திமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், அரசியல் இயக்கங்களும் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, காலம் கடந்து குடியரசுத்தலைவருக்கு தீர்மானத்தை அனுப்பி வைத்தார் ஆளுநர்.
இந்த நிலையில், ஆயுள் தண்டனை கைதி ஒருவரின் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு, 7 தமிழர் வழக்கிற்கும் பொருந்தும்.
எனவே, மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், அமைச்சரவையை கூட்டி பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்யும் வகையில் தீர்மானத்தை நிறைவேற்றி தமிழ்நாடு ஆளுநருக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
செய்தி சேகரிப்பு:
இரா. செந்தில்குமரன்,
மன்னார்குடி