Home>>கட்டுரைகள்>>இளைஞரின் பார்வையில் சுயதொழில்
கட்டுரைகள்வணிகம்

இளைஞரின் பார்வையில் சுயதொழில்

— பாலாஜி சுதந்திரராஜன், மன்னார்குடி
(2048 ஆடிமாதம் திறவுகோல் மின்னிதழில் இருந்து …)


என் பெயர் பாலாஜி, கடந்த ஆண்டு கல்லூரி படிப்பை முடித்தவன். தற்போது ஒரு தனியார் மருத்துவ நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன்.

நான் படித்த துறை வேறு பணியாற்றும் துறை வேறு. சில நாட்கள் கழித்து யோசிக்கும் போது தான் தோன்றியது ஏன் படிப்புக்கு சம்பந்தம் இல்லாத வேலையை செய்கிறோம், ஏன் அத்துறையை கற்றோம் என்று. இதற்கான விடை நமது வீட்டினுள்ளே தான் இருக்கிறது.

ஆம், பள்ளி சீருடை அணிந்த உடனே பெற்றோர் நம்மிடம் கூறுவது “நீ நல்லா படிச்சி நல்ல வேலைக்கு போகணும்டா கண்ணு” என்று.

நம் பெற்றோர்கள் பார்த்த சமுதாயத்தில் வியாபாரம் செய்தவர்கள் பெரும்பாலும் நட்டம் அடைந்தவர்களாகவே இருந்ததன் விளைவு. நம்மை அதை நோக்கி பயணிக்க வைக்க விரும்புவது இல்லை.

அதே நேரத்தில் நம்முடைய பலத்தையும் அவர்கள் குறைத்து பார்க்க செய்கிறார்கள் அவர்களுக்கே தெரியாமல் நம்மையும்.

இந்த இடத்திலேயே நமக்கு கொடுக்க வேண்டிய தன்னம்பிக்கையை அளிக்க தவறி விடுகிறார்கள் நம் பெற்றோர் அவர்கள் அறியாமையால்.

அதை நோக்கியே நாமும் கல்வி பயணம் மேற்கொள்கிறோம். இறுதியில் ஏதோ ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து அந்நாட்டு வணிகத்தை உயர்த்துவோம்.

ஏனோ எனக்கு தொழில் செய்வதில் தான் ஆர்வம். அதுவும் நம்மூரிலேயே. 

நானும் சில திட்டங்களுடன் சில நண்பர்களிடம் பேசினேன் அவர்கள் நல்ல திட்டம் தான் செய்யலாம் என்று ஊக்கப்படுத்தினர். அதே ஊக்கத்துடன் பெற்றோரிடம் சென்றேன். அவர்கள் “அதெல்லாம் சரியாக வராது போய் வேலைய பாரு” னு அனுப்பிட்டாங்க.

இது என் வீட்டில் நடப்பது மட்டுமில்லை, இதே நிலை தான் இன்று பல இளைஞர்களின் வீட்டிலும்.

இதில் என்ன வருத்தம் என்றால், வேலை வாய்ப்பை தேடி தான் அனைவரும் ஓடிகிறோம் அதை ஏன் உருவாக்ககூடாது? என்ற எண்ணம் நம்மில் பலருக்கு தோன்றுவது இல்லை.

கற்ற துறையில் தான் வேலைக்குத்தான் செல்ல வேண்டுமா?

ஏன் அத்துறையில் தொழில் செய்ய கூடாதா?

இதில் நிறைய பேர் சொந்த ஊரில் வேலை செய்வதையோ தொழில் செய்வதையோ அவமானமாக நினைப்பதும் உண்டு.

உள்ளூரில் தொழில் செய்கிறோம் என்றால் உள்ளூர் உற்பத்தி பெருகும். உற்பத்தி பெருகும் போது உள்ளூர் சந்தையும் பெருகுகிறது, ஊரும் வளர்ச்சி அடைகிறது.

ஆனால் இதில் சில நடைமுறை சிக்கலும் உண்டு.

பொருளாதார சிக்கல் – படித்து முடித்து தொழில் தொடங்க ஆர்வமுள்ள இளைஞர்கள் கைகளில் இன்று இருப்பது கற்ற கல்வியும் அதற்கான சான்றிதழும் தான். ஆனால் தொழில் தொடங்க அது போதாதல்லவா.

முதலுக்கு எங்கே போவது?

அனுபவ அறிவு பெறுவது எப்படி?

அதற்காக பல ஆண்டுகள் வேலை செய்ய வேண்டும் என்று பொருள் இல்லை. அதே நேரத்தில், அதை எப்படி கையாளுவது என்றும் நாம் கற்க வேண்டும். முடிந்தால் பள்ளி அல்லது கல்லூரி நாட்களிலேயே பகுதி நேர வேலைக்கு செல்வதும் ஒரு வகை கல்வியே.

பணம் ஈட்டுவது மட்டுமில்லாமல், அதை எப்படி கையாளும் என்பதும் அதே நேரத்தில் சந்தையில் உள்ளவர்களுடன் தொடர்பு ஏற்படுத்தி கொள்ளவும் முடியும். வாடிக்கையாளர்களை எப்படி கையாளலாம் என்பது போன்றவற்றை நாம் படிப்பை முடிக்கும் முன்பே கற்கலாம். எதிர்காலத்தில் இது நமக்கு பக்க பலமாக இருக்க கூடும்.

இல்லையென்றால் நம் படிப்பை முடித்தவுடன், பயிற்சி போன்ற கட்டத்தை கடக்கவே சில ஆண்டுகள் கழிக்க வேண்டும். அதற்கு சிலரின் அறிமுகமும் வேண்டும். அதை தான் நாம் பள்ளி, கல்லூரி நாட்களிலேயே பெறலாம் என்று கூறினேன்.

பொருளாதார பிரச்சனை இல்லாதவர்களுக்கு இது எளிதில் சாத்தியம்.

இதுவே ஒரு நடுத்தர குடும்பத்து இளைஞன் அவன் படித்ததே கல்வி கடனில் வீட்டிலும் பணம் கேட்க முடியாது, வட்டிக்கு வாங்கி தொழில் தொடங்கும் போது வாங்கிய கடனுக்கும் வட்டி கட்ட வேண்டும் கல்வி கடனும் செலுத்த வேண்டும். தொழில் தொடங்கிய உடனேயே பெரிய லாபம் எதிர்பார்க்க முடியாது.

இதற்கு அஞ்சியே பல தொழிலதிபர்களை நாம் தவற விடுகிறோம்.

இதை எப்படி எதிர்கொள்வது?

நமது நட்பு வட்டத்திலோ அல்லது உறவினர்களிளோ யாரேனும் ஒருவர் தொழில் தொடங்க ஆர்வமாக இருப்பார்கள். ஆனால் அவர்களிடத்தில் செயல்படுத்துவதற்கான வாய்ப்பு மிக குறைவாக இருக்கும். ஏனெனில் அவர்கள் வெளியூரிலோ அல்லது வெளிநாட்டிலோ வேலை செய்துக் கொண்டிருப்பர்.

அதை விட்டுவிட்டு தொழில் தொடங்குவதில் தயக்கம் இருக்கும். அவர்களும் நம்பிக்கையான செயல்பாட்டாளர்களை தான் தேடுவார்கள்.

நமக்கு முதலீட்டாளர்கள் தேவை அவர்களுக்கு செயல்பாட்டாளர்கள் தேவை. நாம் ஒன்று கூடினால் போதும் தொழில் தொடங்கலாம்.

அதே போல் இதற்கு திட்டமிடுதல் மிகவும் அவசியம்.

நாம் தொடங்க போகும் வணிகம் சார்ந்த உள்ளூர் சந்தையை நன்கு அறிந்து வைத்திருத்தல் அவசியம்.

ஆகையால், தொழில் செய்ய ஆர்வமுள்ள இளைஞர்கள் வேலை வாய்ப்பை தேடி ஓடாதீர்கள் வேலை வாய்ப்பை உருவாக்குங்கள்.

பெற்றோருக்கு ஒரு வேண்டுகோள்.  பிள்ளைகளிடம் வெளிநாடு தான் வாழ்க்கை அங்கு தான் சம்பாதிக்க முடியும் என்ற எண்ணத்தை விதைக்காதீர்கள். முதலாளி ஆக வேண்டிய பிள்ளையை நீங்களே தொழிலாளி ஆக்கி விடாதீர்கள்.

தன்னம்பிக்கையோடு உழைப்போம், நாமும் நாளைய தொழிலதிபர்களே என்பதை மனதில் நிறுத்தி.

Leave a Reply