Home>>கட்டுரைகள்>>சமூகம் பன்முகம் 
கட்டுரைகள்

சமூகம் பன்முகம் 

கோவை மாநகரம், இரவு மணி 11.30. சாலையின் இருபுறமும் மின் விளக்குகளன்றி மனித நடமாட்டமில்லாத நேரம். அருகில் அமைந்த தொழில்நுட்ப பூங்காவில் பணி நேரம் முடிந்து விடுதிக்குத்  திரும்பி கொண்டிருந்த இளம்பெண் எவ்வித சலனமுமின்றி நடைப்போட்டுக் கொண்டிருந்தாள். 

 

கடந்து செல்லும் வழியில், இரவு நேரத்தில் பணிபுரியும் இளைஞர்கள் தேநீர் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அதை கவனத்தில் கொண்ட அவள், தன் நடைப்பயணத்தை வேகப்படுத்தினாள்.

 

அவர்களும் அந்த திசையை நோக்கியே சென்றனர். தவறாக சித்தரித்துக் கொண்ட அவள், தன்னை  காப்பாற்றிகொள்ளும் பொருட்டு முன்தொடர்ந்து நால்ரோட்டின் வாயிலை அடைந்த போது, மிக பெரிய சத்தத்துடன் அலறல்கள். ரத்த வெள்ளத்தில் அந்த பெண் துடித்துக் கொண்டிருக்க, அந்த இளைஞர்கள் அவ்விடத்தை நோக்கி விரைந்தனர். பாதுகாப்பாக செல்ல நினைத்த அவள் எதிர்பாராத விதமாக நால்ரோட்டின் இடதுபுறம் வந்த அந்த சரக்கு லாரியை கவனிக்க மறந்த விளைவு, அப்பெண்ணின் உயிரை எடுத்துக் கொண்டது. சற்றுக் கூர்ந்து கவனித்தால் அந்த விபத்துக்கு காரணம் அந்த லாரியோ, இளைஞர்களோ மற்றும் அந்த பெண்ணோ கண்டிப்பாக இல்லை என்பது தான் நிதர்சனம். அருகில் வரும் ஒருவரை அச்சுறுத்தலாக நினைக்க வைத்த இந்த சமூகத்தின் பொறுப்பு சாசனம் இது தான். 

 

ஆதி முதல் அந்தம் வரை அனைத்திலும் அனைவரையும் தொழில், அந்தஸ்து, சாதி, மதம் என பலதரப்பட்ட மக்களையும் பிரித்து பிரித்து அரசாளும் இந்த அமைப்பு. வன்முறையின் உயிர்நாடியில் அண்டிப்பிழைத்திடும் வர்க்கமாக நம்மை மாற்றி வரும் நுட்ப அரசியல். வரலாற்றை திருப்ப முயலும் சமயத்தில், அதைத் தடுத்து முயற்சியை வீணடிக்கும் இந்த காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காதிருப்பதே அரிது.

 

கடல் நீர் அலையாக வருவதற்கும் அழுத்தத்தின் காரணமாக சீற்றம் அடைவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு என்பதை இந்த நேரத்தில் நினைவு கூற வேண்டும். மூடி மறைத்து ஒரு செய்தியை ஆக்கிட்டோமானால் இதே நிலை பின்னாளில் நேரிடும்.

 

நெருப்பில் கை வைத்தால் சுட்டெரிக்கும் என கற்றதால் அதை செய்ய எவரும் முனைய வாய்ப்பில்லை. ஏன்? நினைக்க கூட இயலாது. காயம் ஏற்படுமென்பதை உணர்ந்தால் அதை நோக்கிய பயணத்தை புறக்கணிப்பது தான் மனித இயல்பு. அதே வழிமுறை தான் பாலின வேறுபாட்டிலும். பிறப்பு முதல் இறப்பு வரை, இந்த வேறுபாட்டில் நடந்தேறும் பரிணாம முன்னேற்றங்கள் நம் சிந்தையிலிருந்து விலகி தொலைதூரம் கடந்தாகி விட்டது. அதன் முடிவே தற்போது அரங்கேறும் குற்றங்கள், மன்னிக்கவும் கொடூரங்கள்! என்ன இது? பாலியல் கல்வி குறித்த விழிப்புணர்வோ என எண்ண வேண்டாம் நண்பர்களே. கல்வி வேறு, அறிவு வேறு.

 

இந்த வேறுபாட்டின் அறியாமையில் தவிக்கும் வேளையில் சினம் கொண்டு வீறு நடை போடும் கலியுக புத்திரர்கள் முளைக்கும் காலகட்டம் இது. எவற்றையும் மறைத்தும் பயனில்லை, மறுத்தும் விடவில்லை என்கிற போக்கில் ஆற்றோடையில் சரிந்து, மெலிந்து, கலந்து செல்லும் நீரைப் போல, வேண்டாவனவற்றை  தானே வடிகட்டும் தொழில்நுட்ப விஞ்ஞான பயனாளர்கள் இங்கே சங்கமித்து விட்டனர்.       

 

சங்கமிக்கும் நாட்களில் துயர் உணரும் பெண்களுக்காக, துடைக்கும் ஆண்களுக்காக  சில வரிகளுடன் முற்று.

 

“சந்தர்ப்ப வாயிலில் காலங்கள் கழிவதுமே 

அட்சாரம் போட்டதோர் மாயையில் தந்திரமாய் 

வித்திட்ட சக்கரங்கள் நடைபழக சென்றிடுமே 

பந்தயத்தின் எல்லையில் கைவீசும் மாத்திரமாய் 

 

ஏமாற்றம் அகராதியில் புன்னகைக்கும்  

கரையோரம் அலைகளில் தத்தளிக்கும் 

நீந்திடும் வேளையது தூண்டிலில் சிக்கியே 

வேடிக்கை ரசித்திடும் பன்முக சாஸ்திரங்கள் 

 

கனவுகள் கண்டிடும் பருவங்கள் ஓரமாய் 

உறக்கங்கள் தொலையுமே துருவங்கள் கரையுமே 

 

வர்க்கங்கள் ஆட்சியே பெண்ணியம் சாரமாய் 

சுழன்றிடும் இறகுகள் கோட்டையின் சிற்பமே 

இமைத்திடும் காரிகை விழித்திடும் நேரமே 

கரங்களும் கோர்த்திடும் சித்திரமும் வரைந்திடும்  

 

சித்திரம் பேசிடும் மையினது துளிகளுடன் 

கோர்த்தோருக்கும் வரைந்தோருக்கும்”. 

 

இந்த பதிவு வெறும் வார்த்தைகள் அல்ல, இதயக் கூக்குரலின் வெளிப்பாடு.

பொள்ளாச்சியில் நடந்த பயங்கரம் அனைவரும் அறிந்ததே, நெஞ்சை உலுக்கும் காணொளிகள் காணும் அனைவரின் கண்களிலும் நீர் தேக்கும்.

 

இத்தகைய சம்பவங்கள் எதிர்வரும் காலங்களில் முற்றிலும் துடைத்தெறிய இருக்கும் சிறிய சுதந்திரத்தையும் பெண்களிடம் இருந்து பிடுங்கி எறியாமல்  உறவுகளின் உன்னதத்தையும், மனித இன மாண்பினையும் வார்த்தெடுக்கும் பெற்றோர், சுற்றோர் என அத்துனைப் பேரும் போதித்தோமானால் ஒழிய, சந்திர வெளிச்சம் குளிர்விக்காது. 

 

நம் நாட்டின் சுதந்திரம், வேறெந்த நாட்டிற்கும் கிடைக்காத அறிய பெட்டகம். இதை மறந்து அரபு நாடுகளை போன்று கையில் சூடு போட்டுக் கொள்ளும் எண்ணம் மறந்து குற்றங்களின் தீர்வாய் தண்டனை பற்றிய விவாதம் விடுத்து நல்லெண்ணம் புகட்டும் பாதையைக் கண்டறிவீர். இறுதியில் தனிமனித ஒழுக்கம் வேர் வரை ஓங்கட்டும், தமிழ் மறை செழிக்கட்டும்…! 

 

அஜய் பிரசாத், மன்னார்குடி

(2050  பங்குனி மாத மின்னிதழிலிருந்து)

 

Leave a Reply