Home>>அரசியல்>>நாயக்கநேரி பட்டியலின பெண் ஊராட்சி தலைவர் இந்துமதிக்கு உடனடியாக பதவி பிரமாணம் செய்து வைத்திடுக!
அரசியல்இந்தியாகாவல்துறைசெய்திகள்தமிழ்நாடுவரலாறு

நாயக்கநேரி பட்டியலின பெண் ஊராட்சி தலைவர் இந்துமதிக்கு உடனடியாக பதவி பிரமாணம் செய்து வைத்திடுக!

உள்ளாட்சி தேர்தலில் போட்டியின்றி தேர்வான நாயக்கநேரி பட்டியலின பெண் ஊராட்சி தலைவர் இந்துமதிக்கு உடனடியாக பதவி பிரமாணம் செய்து வைத்திடுக! தலைமைச் செயலாளரை நேரில் சந்தித்து சிபிஐ (எம்) மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் முறையீடு!


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் க. சுவாமிநாதன், தென்சென்னை மாவட்ட செயலாளர் ஆர். வேல்முருகன் ஆகியோர் இன்று (26.9.2023) திருப்பத்தூர் மாவட்டம், நாயக்கநேரி ஊராட்சி தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட திருமதி இந்துமதிக்கு உடனடியாக பதவி பிரமாணம் செய்து வைக்க வலியுறுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென உயர்திரு தலைமைச் செயலாளர் அவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்தி மனு அளித்துள்ளனர். அம்மனு கீழே தரப்பட்டுள்ளது.

26.09.2023

பெறுதல்
உயர்திரு தலைமைச் செயலாளர் அவர்கள்,
தமிழ்நாடு அரசு,
தலைமைச் செயலகம்,
சென்னை – 600 009.

வணக்கம்

பொருள்:- திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஊராட்சி ஒன்றியம், நாயக்கநேரி ஊராட்சி மன்ற தலைவராக 2021 செப்டம்பர் தேர்தலில் போட்டியின்றி தேர்வான பட்டியலினத்தை சேர்ந்த திருமதி இந்துமதி, க/பெ பாண்டியன் அவர்களுக்கு – இதுவரை பதவி பிரமாணம் செய்யாதது – தாங்கள் தலையிட்டு உடனடியாக பதவி பிரமாணம் செய்திட உரிய நடவடிக்கை எடுக்க கோருதல் தொடர்பாக:

பார்வை:- 1. திருமதி இந்துமதியின் 13.2.2023 தேதியிட்ட மனு

2. ஊரிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள மக்கள் காவல்துறை அதிகாரிகளுக்கு அளித்துள்ள 18.07.2022 தேதியிட்ட புகார் மனு:

திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஊராட்சி ஒன்றியம், நாயக்கநேரி ஊராட்சியில் 2021ல் நடைபெற்ற தேர்தலில் பட்டியல் சாதி (பெண்) ஒதுக்கீட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றிக்கான சான்றிதழையும் முறைப்படி பெற்றுள்ள இந்துமதி என்பவருக்கு இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்று வரை பதவி பிரமாணம் செய்து வைக்க அரசு அதிகாரிகள் தவறியுள்ளனர்.

நாயக்கநேரி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சிவக்குமார் என்பவர் இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடுத்த உயர்நீதிமன்ற வழக்கை காரணம் காட்டி மாவட்ட ஆட்சியர், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் இழுத்தடித்து வந்துள்ளனர்.

நாயக்கநேரி பஞ்சாயத்தில் பட்டியல் சாதி மக்கள் தொகை மிகக் குறைவாக இருக்கும் பட்சத்தில் அது பட்டியல் சாதியினருக்கான பஞ்சாயத்தாக எப்படி ஒதுக்கீடு செய்யப்படலாம் என்ற வாதமே வழக்கில் முன் வைக்கப்பட்டுள்ளது. வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் நீதிமன்றம் தேர்தலை நிறுத்தி வைக்கவோ, தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரை பதவி பிரமாணம் செய்வதற்கு தடை உத்தரவோ பிறப்பிக்கவில்லை. முறைப்படி தேர்தல் நடந்து போட்டியின்றி வெற்றிபெற்ற இந்துமதிக்கு வெற்றிபெற்றதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. 2021 செப்டம்பரில் பல மாவட்டங்களில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மற்ற ஊராட்சித் தலைவர்கள் பதவி ஏற்ற நிலையில் நாயக்கநேரியில் மட்டும் பதவி பிரமாணம் செய்வதை வேண்டுமென்றே அரசு அதிகாரிகள் தவிர்த்து வருவது சட்ட விதிகளுக்கு புறம்பான நடவடிக்கையாகும் என்பதை கவனப்படுத்துகிறோம்.

இந்துமதி தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளிடமும், மே 1, 2023 அன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டும் இப் பிரச்சினை குறித்துப் பேசியுள்ளார். மாவட்ட ஆட்சியரும் இருந்துள்ளார். என்றாலும் தீர்வு தரப்படவில்லை. இந்துமதி தனக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க கோரி 13.02.2023 அன்று தமிழ்நாடு முதலமைச்சர், தலைமைச் செயலாளர், முதன்மை செயலாளர், தேர்தல் ஆணையர், மாவட்ட ஆட்சி தலைவர், மாவட்ட கண்காணிப்பாளர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு மனுக்களை அனுப்பியுள்ளார். இருப்பினும் அதிகாரிகள் பதவி பிரமாணம் செய்து வைக்க தவறியுள்ளார்கள்.

நாயக்கநேரி ஊராட்சி தேர்தலை சிவக்குமார் (அதிமுக பிரமுகர்) என்பவரது தூண்டுதல் பேரில் மக்கள் புறக்கணித்தனர். ஊராட்சி தலைவர் தேர்தலில் இந்துமதிக்கு ஆதரவு தந்த 21 குடும்பங்கள் ஊர் விலக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஊர் விலக்கத்திற்கு ஆளானவர்கள் பால் வியாபாரம் செய்ய முடியவில்லை. நிலங்களில் விவசாயம் செய்ய முடியவில்லை. ஆகவே 21 குடும்பங்களில் பலர் ஊரை விட்டு வெளியேறி விட்டனர். இப்போதும் அங்கே குடி இருக்கும் இரண்டு குடும்பங்கள் மிரட்டலுக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் 18.07.2022 அன்று தந்த புகார் மீதும் மேல் நடவடிக்கை எதுவும் காவல் துறையால் மேற்கொள்ளப்படவில்லை.

எனவே,

1. நாயக்கநேரி ஊராட்சி தலைவராக வெற்றிபெற்று இரண்டு ஆண்டுகள் ஆகியும் இதுவரை பதவி பிரமாணம் செய்து வைக்காமல் இருக்கும் திருமதி இந்துமதிக்கு உடனடியாக பதவி பிரமாணம் செய்து வைப்பதோடு – எந்தவித இடையூறும் இல்லாமல் அவர் சுதந்திரமாக பணியாற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்;

2. இந்துமதிக்கு ஆதரவாக செயல்பட்ட 21 பட்டியலின குடும்பங்களை மிரட்டி ஊர் கட்டுப்பாடு போட்டு, ஊரில் வாழ முடியாமல் ஊரை விட்டு விரட்டியுள்ள முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார் மற்றும் பிறர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்திட வேண்டுமெனவும்,

3. இந்துமதி மற்றும் அவ்வூரில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்திட வேண்டுமெனவும், உயர்திரு தலைமைச் செயலாளர் அவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.


நன்றி,
கே. பாலகிருஷ்ணன்
மாநில செயலாளர்

Leave a Reply