(2048 ஆவணி மாதம் திறவுகோல் மின்னிதழில் இருந்து …)
இது வரை தன்னுடைய நிறுவனத்தை பற்றி பெரும்பாலும் யாரிடமும் விவாதிக்காத விடயங்களை கூட நம்முடன் விவாதிக்க தொடங்கினார் லட்சுமி பர்னிச்சர் நிறுவனத்தின் உரிமையாளர் திரு.கார்த்திகேயன் அவர்கள்.
அவருடன் நடைபெற்ற சிறு விவாதத்தை இங்கு பகிர்கிறோம்.
தங்கள் நிறுவனம் எப்பொழுது துவங்கப்பட்டது மற்றும் அதன் முதலீடு எவ்வளவு தோழர் அன்றைய தினத்தில்?
எங்கள் பூர்விகம் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி, என் தாத்தா அழகர்சாமி, சரியாக நினைவில்லை ஆனால் அவர் காலத்தில் ரூ.100/- முதலீட்டுடன் மிதி சக்கர வண்டி கொண்டு என் தந்தையுடன் தொழிலை தொடங்கினார் என்று என் பாட்டி கூறினார்.
அன்றைய தினங்களில் மன்னார்குடி மற்றும் சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளுக்கு சென்று துணிகளை விற்பனை செய்து வந்தார்கள்.
பின் அவர்களின் கால்களுக்கும், சக்கரங்களுக்கும் ஓய்வு கொடுக்கும் வகையில் இன்று நம் நிறுவனம் இருக்கும் இதே இடத்தில் தான் அம்பிகா ஜவுளி நிறுவனமாக மாறியது அவர்கள் செய்து வந்த தொழில்.
எங்கோ உள்ளவர்களை பற்றி தெரிந்து கொள்வதை விட, உள்ளூரில் உள்ள நிறுவனங்களை பற்றி அறிவதில் எப்பொழுதும் சிறப்பு தான், ஆனால் இன்று அந்த அம்பிகா ஜவுளி நிறுவனத்தை காணவில்லையே என்றோம்….
அது தான், 15 ஆண்டுகளுக்கு முன் லட்சுமி பர்னிச்சர் என்று மாற்றப்பட்டு தற்பொழுது சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றார் கார்த்திகேயன் அவர்கள்.
சிறப்பு, கடும் உழைப்பிற்கு பின் தான் இந்த நிலையை எட்டி உள்ளீர்கள் வாழ்த்துகள் தோழர் என்று நாம் கூறும் போதே …
ஆமாம் தாத்தா மற்றும் அப்பாவின் கடின உழைப்பில் உருவான நிறுவனம், இன்று நான் நிர்வகித்து வருகிறேன். அவர்கள் எதிர்கொண்ட சிரமங்கள் அளவிற்கு எனக்கில்லை, ஆனால் எப்பொழுதும் போல் தொழிலில் ஏற்படும் சிரமங்கள் உள்ளது அதை நாம் எதிர்கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கத்தான் வேண்டும் என்றார் கார்த்திகேயன் சிரித்து கொண்டே.
அவர் சிரிக்கும் போது, அவரின் கன்னத்தில் விழும் குழிகளில் விழுந்துவிட்டோம்,
நீங்கள் தாத்தா மற்றும் அப்பாவின் உழைப்பை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லுங்கள் அவர்களும் பயனுறுவார்கள். இது பெற்றோர்கள், பிள்ளைகளுக்கு செய்யும் நற்செயல். உங்களை மகிழ்வுடன் பார்க்கும் போது அவர்களும் மகிழ்வார்கள் தோழர் என்றோம்.
தாத்தா, அப்பா இருவரும் இறந்து விட்டார்கள் என்று வருத்தத்துடன் கார்த்திகேயன் கூறும் பொழுது. அவர்களின் இழப்பு எப்படிப்பட்டது என்று அவரின் சொற்கள் உணர்த்தியது நமக்கு.
தற்போது நீங்கள் இல்லாமல் உங்களுடன் யாரும் நிர்வாகத்தில் பங்கு கொண்டு உள்ளார்களா தோழர் என்றோம்.
மிக அவசியமான இடத்தில், அதுவும் கணக்கு வழக்குகளை பார்த்து கொள்வதில் என் மனைவி உள்ளார், என் சித்தப்பா மேலாளராக உள்ளார். இது தவிர நீண்ட நாட்களாக பணியாளர்களாக சுமார் 18 நபர்கள் பயணிக்கிறார்கள்.
அதே போல் நடைமுறை பிரச்சனைகள் என்னவெல்லாம் உள்ளது உள்ளூரில் தொழில் செய்வதால்?
இணைய தளங்கள் தான் மிகவும் பாதிப்பு ஏற்படுத்துகிறது, கடையில் எங்களிடம் பொருள்களை தேர்வு செய்து விட்டு, இணையத்திற்கு சென்று விலையை பார்த்து விட்டு இவ்வளவு குறைவாக உள்ளது என்று கூறுவார்கள்
இணையத்தில் வாங்கினால் warranty பிரச்சனை வரும், அதில் ஏமாற்றம் ஏற்பட்ட பின்பு தான் உணர்வார்கள். பலர் ஏமாற்றுகிறார்கள் என்பதை.
எங்களிடம் வாங்கினால் சர்விஸ் சரியில்லை எனில் மாற்றி கொடுக்கவும் இல்லை என்றால் பிரச்சனை செய்வேன் என்பார்கள்.
இணைய வியாபாரத்தில் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு அழைத்து பதிவு செய்து, பணியாளர்கள் வரும் வரை காத்திருக்க வேண்டியதுதான், வேறு வழியில்லை.
எல் இ டி போன்ற விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் பொழுதே 1 வருட உத்திரவாதம் தான் என்று கூறி விற்பனை செய்வோம். ஆனால் warranty முடிந்து 1 மாதம் 2 மாதத்தில் பழுதாகும் பொழுது நீங்கள் விற்பனை செய்யும் பொருட்கள் 1 வருடம் தான் வேலை செய்யுமா என்று கூறி பிரச்சனை செய்வார்கள். அந்த எல் இ டி டிவி பேனல் 13000 ஆகும் பட்சத்தில் உற்பத்தி செய்யும் நிறுவனத்திடம் பேசி மாற்றி தர வேண்டும் இல்லை என்றால் நாங்கள் எங்கள் பணத்தில் மாற்றி தர வேண்டும்.
எனக்கு தெரிந்த வாடிக்கையாளர் 32 அகலம் கொண்ட மைக்ரோ மேக்ஸ் எல் இடி வாங்கி சென்றார் மற்றும் மீதம் கொஞ்ச பணத்தை பின் வந்து தருவதாக கூறி சென்றார். நான் 20 முறை தொடர்பு கொண்டு விட்டேன் வருகிறேன் என்று கூறினார் இது வரை வரவே இல்லை.
இப்படி பல பிரச்சனைகள் உள்ளது, ஆனாலும் மன்னார்குடியில் தொழில் செய்வது மற்றும் நம் மக்களுடன் நாட்களை செலவிடுவது தான் தனக்கு மகிழ்ச்சி என்றார் கார்த்திகேயன்.
அதே போல் உள்ளூர் உற்பத்தியில் உருவாகும் பொருள்களையும் லட்சுமி பர்னிச்சர் நிறுவனம் விற்க தயாராக உள்ளோம். குறிப்பாக மாணாக்கர்களின் சிறு சிறு கண்டுபிடிப்புகளை சந்தைக்கு கொண்டு வந்து விற்க திட்டமிட்டு வருகிறோம் என்று கூடுதல் தகவலையும் நமக்கு தந்தார்.
இதைவிட தொழில் செய்யும் ஊருக்கு சிறப்பாக என்ன செய்ய இயலும் என்று கூறியும், அதே நேரத்தில் மீண்டும் அவர்கள் ஏற்கனவே செய்து வந்த ஆடை நிறுவனத்தை மீண்டும் மன்னைக்கு கொண்டு வாருங்கள் என்று சொல்லியும் விடை பெற்றோம்.