– ரா. ராஜராஜன், மன்னார்குடி
(2048 ஆடி மாதம் திறவுகோல் மின்னிதழில் இருந்து …)
வரலாற்று உரிமையும் & காவிரி பிரச்சனையும்
காவிரி வரலாற்றை அங்கு குடிபெயர்ந்த முதல் மனித இனத்திலிருந்து தான் தொடங்க இயலும். அவ்வகையில் தமிழ் சமூகத்தை சேர்ந்த வேளிர்கள் (வேளாண் பெருமக்கள்) முதற்சித்தர் அகத்தியரின் வழிகாட்டுதலின் படி குடியேறி விவசாயம் செய்ததாகவும் அங்கு காவிரி நீரை முறையாக பாசனத்திற்கு பயன் படும் வகையில் வழித்தடங்களை அமைத்ததாகவும் வரலாறு சொல்கிறது. இவ்வரலாற்று குறிப்புகள் அகத்தியர் காலத்திற்க்கு பின் வந்த தொல்காப்பியத்திலும் , சிலப்பதிகாரத்திலும், அகநானூறிலும், பட்டினப்பாலையிலும் இருக்கின்றன என்று வரலாற்றாசிரியர்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. அதே போல் இவ்விடம் சோழர்களுக்குட்பட்ட “சோழர்கள் காடு” என்றே அழைக்கப்பட்டுள்ளது. குடக்கு என்ற தமிழ் சொல் மருவி குடகு என்றாகியுள்ளது. குடக்கு என்றால் தமிழில் மேற்கு என்று பொருள். அதே போல் எருமை நாடு என்ற தமிழ் சொல்லே மகிஷவூர் என்றாகி மைசூர் என்று மறுவியுள்ளது. எருமைக்கு வடமொழியில் மகிஷம் என்று பொருள். அதன் பிறகு 2ம் நூற்றாண்டில் முதல் அணையாக கட்டப்பட்ட கல்லணை மூலம் நம்முடைய நீர்மேலாண்மை மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை அறிய இயல்கிறது. இவ்வரலாற்றின் மூலம் கர்நாடகாவில் உள்ளோர்களின் முன்னோர்களும் தமிழ் பேசி தமிழர் நிலத்தில் வாழ்ந்து தமிழ் அரசர்களின் கீழ் வாழ்ந்தவர்கள் தான் என்பதும் நமக்கு காவிரியில் உள்ள உரிமையும் புலனாகிறது.
18ம் நூற்றாண்டுவரை இங்கு நீர் மேலாண்மையிலும் பங்கீட்டிலும் எந்த பிரச்சனையும் எழ வில்லை . 1807-ம் ஆண்டு தான் காவிரி நதி நீரைப் பங்கீட்டுக் கொள்வதில் சிக்கல் துவங்குகிறது.சென்னை மற்றும் மைசூர் மாகாணத்திற்கு இடையேயான பேச்சு வார்த்தையும் தொடங்குகிறது . பலசுற்றுப் பேச்சுவார்த்தைக்குப் பின் 1892 பிப்ரவரி 18-ம் தேதி ஒரு ஒப்பந்தம் தயராகிறது. இதுதான் காவிரி நதிநீர் பங்கீட்டில் ஏற்படுத்தப்பட்ட முதல் ஒப்பந்தம். பிறகு 1906ல் மைசூர் மாகாணம் கிருஷ்ண ராஜ சாகர் அணை கட்டும் திட்டத்தை முன்மொழிந்தது, இதனால் வேறு வழியின்றி நம் இருப்பை தக்கவைக்க மேட்டூர் அணை திட்டத்தை சென்னை மாகாணம் முன்மொழிந்தது. 1906லிருந்து சுமார் 15 வருட தொடர் பேச்சுவார்த்தைக்கு பிறகு இறுதியாக 1921ல் கிருஷ்ண ராஜ சாகர் அணைக்கான வரைவு விதிகளையும் ஒழுங்குமுறைகளையும் இரு மாகாணங்களும் இறுதி செய்தன.
1924ல் நதிநீர் தொடர்பாக இரண்டு ஒப்பந்தம் இவ்விரு மாகாணங்களுக்கு இடையில் கையெழுததானது, இது காவிரி ஒப்பந்தம் என்றழைக்க படுகிறது
- பங்கீடு ஒப்பந்தம்
மொத்தநீர் – 671 – ஆயிரம் மில்லியன் கன அடி (TMC)
சென்னை மாகாணத்திற்கு – 489 ஆ மி க
மைசூர் மாகாணத்திற்கு – 177 ஆ மி க
கேரள மாகாணத்திற்கு – 5 ஆ மி க என இறுதி செய்யப்பட்டு கையெழுத்தாகியது .
- மைசூர் அரசு காவிரியிலோ, அதன் கிளை ஆறுகளிலோ அணை கட்டுவதெனில் சென்னை மாகாணத்திடம் ஒப்புதல் பெற வேண்டும். சென்னை மாகாண அரசிற்கு காவிரியில் அனுபவ பாத்தியாய உரிமை உண்டு என்றும் இவ்வொப்பந்தத்தில் அதிகார பூர்வமாக குறிப்பிடபட்டுள்ளது.
இவ்வொப்பந்தத்தின் படி நடக்காத கர்நாடக அரசு நீரையும் ஒப்பந்த படி தராமல் கபினி , சொர்ணவதி, ஹேமாவதி போன்ற இடங்களில் அணைகளையும் இடைப்பட்ட காலத்தில் கட்டியுள்ளது. பிறகு1986ல் தமிழகத்திலிருந்து விவசாயிகள் (மன்னை ரங்கநாதன் அவர்கள்) உச்ச நீதி மன்றத்திற்கு இப்பிரச்சனையை கொண்டு செல்கின்றனர். இதன் உச்சமாக 1990ல் அமைக்க பட்ட காவிரி நடுவர் மன்றம் 1991ல் இடைக்கால ஆணை வெளியிட்டு அதனை மத்திய அரசு உத்தரவை அரசிதழில் வெளியிட்டது. அதனை எதிர்த்து கர்நாடகாவில் நடந்த வன்முறையில் சுமார் 100 தமிழர்கள் கொல்லப்பட்டனர், பல்லாயிரம் பேர் தாக்க பட்டு சொத்துக்கள் சூறையாக்கப்பட்டது.
பின் பல தொடர் வழக்கு, போராட்டத்திற்கு பிறகு 1998ல் பிரதமர் தலைமையில் காவிரி ஆணையம் அமைக்க படுகிறது . இவ்வாணையம் 2007ல் இறுதி தீர்ப்பை வெளியிட்டது. அதில்,
மொத்தநீர் – 740 ஆ மி க
தமிழ் நாட்டிற்கு – 419 ஆ மி க
கர்நாடகத்திற்கு – 270 ஆ மி க
கேரளத்திற்கு – 30 ஆ மி க
புதுவைக்கு – 7 ஆ மி க
கடலில் கலப்பதற்கு – 14 ஆ மி க என ஒதுகீடு செய்து தீர்ப்பளித்தது. இதில் கவனிக்க வேண்டிய ஒன்று , தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட 419 ஆ மி க வில் 192 ஆ மி க மட்டும் கர்நாடக தரும் மீதமுள்ள 227 ஆ மி க தமிழகத்தில் உள்ள கிளை நதிகளான பவானி, நொய்யல், அமராவதி, பாலாறு போன்றவற்றிலிருந்து பெற்று கொள்ள வேண்டும். இந்த 192 ஆ மி க என்பது நமக்கு போதுமானது இல்லாத பட்சத்திலும் தமிழகம் அதை பெருந்தன்மையுடன் ஏற்று கொள்ள தயாராக இருந்தது ஆனால் கர்நாடகம் இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ததால் தமிழகமும் மேல்முறையீடு செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ள பட்டது. அந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும் பொழுதே 2013ல் மத்திய அரசு இத்தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டது. இவ்வழக்கு 2016 செப்டம்பரில் கர்நாடகாவை தினசரி நீர் திறந்துவிட வலியுறுத்தி தீர்ப்பை உறுதி செய்தது. இதையும் கர்நாடக மதிக்காமல் அங்கு வன்முறையை கட்டவிழ்த்து தமிழர்களை தாக்கியது. மத்திய அரசும் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து தீர்ப்பை செயல்படுத்த ஆவண செய்யாமல், மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தை வஞ்சித்து.
தீர்வுகள்: –
உடனடியாக தமிழக அரசு முன்னெடுக்க வேண்டியவைகள்
- இப்பிரச்னையில் மத்திய அரசை மொத்தமாக நம்புவதை விடுத்து கர்நாடகாவுடன் இணக்கமான பேச்சு வார்த்தையில் தொடர்ந்து ஈடுபட வேண்டும். அப்பொழுது தான் கர்நாடக அரசும் அம்மாநில மக்களுக்கு புரிதலை ஏற்படுத்த முனையும்.
- காவிரி ஆற்றில் நடக்கும் மணல் சுரண்டலை தடுக்க வேண்டும். காவிரி நீர் வரத்து குறைந்த காலங்களிலேயே இச்சுரண்டல் அதிகமாக ஆரம்பித்தது. இதில் கவனிக்க வேண்டியது இச்சுரண்டலுக்கு எதிராக போராடுபவர்களை ஒடுக்குவதும், கொலை செய்வதும் தமிழர்கள் தானே ஒழிய கன்னடர்கள் அல்ல.
- ஆற்றில் கலக்கும் கழிவுகளையும், ரசாயனங்களையும் கட்டுப்படுத்த வேண்டும்
- இங்குள்ள அனைத்து கட்சி, இயக்கம், மக்கள் என அனைவரையும் ஒன்றிணைத்து வலுவாக செயல் பட வேண்டும்
- நீர் வழிகள் மற்றும் ஏனைய நீர் நிலைகளை சீரமைக்க வேண்டும்.
நாம் செய்ய வேண்டியது —
- நாம் காவிரி நீர் பெறுதலை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல் பட வேண்டுமே ஒழிய , கர்நாடகாவை வெல்லவோ, அவர்களை தாக்கவோ, நம்முடைய அரசியல் தேவைக்கோ போராட கூடாது. காவிரி நீர் பெறுதல் மட்டுமே இலக்கு. இணக்கத்துடன், அமைதியாக நம்முடைய முன்னெடுப்பை செய்ய வேண்டும்.
- காவிரியும் நம் வாழ்வும் ஒன்றிணைந்தது என்ற புரிதலை ஏற்படுத்த வேண்டும். இறை நம்பிக்கை உள்ளோர் காவிரியை இறையாகவும் , இயற்க்கை நம்பிக்கை உள்ளோர் காவிரியை இயற்க்கை அன்னையாகவும் வணங்க ஆரம்பிக்க வேண்டும்
- இதை மாநில அரசுகளுக்குள் உள்ள பிரச்சனையாகவும், டெல்டா விவசாயிகள் பிரச்சனையாகவும் பார்க்காமல் இது தமிழர் நிலத்தின் குருதி ஓட்டமாக பார்க்க வேண்டும்.
- நம்முடைய மொழியை , வரலாற்றை, இயற்கையை பேணி காக்க பழக வேண்டும். அடுத்த தலைமுறையையும் அதுபோல் உருவாக்க வேண்டும்.
- காவிரி நெடுக பயணம் மேற்கொள்வதை தொடங்க வேண்டும் . குழந்தைகளுக்கும் இவ்வரலாறை எடுத்துரைக்க வேண்டும்.
மனிதர்கள் மீதும் இயற்க்கையின் மீதும் பற்று கொண்ட சமூகமே உண்மையான மனித சமூகம்.
— ராஜராஜன், மன்னார்குடி
(2051 ஆடி மாதம் திறவுகோல் மின்னிதழில் இருந்து …)
படஉதவி: Vasa Photography