இலங்கையிலுள்ள முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் தொடர் போராட்டம் இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையிலும் சர்வதேச மகளிர் தினமான இன்றைய தினத்தில் (08.03.2021) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் முல்லைத்தீவில் இடம்பெற்றது.
முல்லைத்தீவு புனித இராஜப்பர் ஆலய முன்றலில் ஆரம்பமான இந்த போராட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை சென்று அங்கு நிறைவடைந்தது .
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்ட தொடர் ஜெனீவாவில் தற்போது நடைபெற்றுவரும் தருணத்தில் வலிந்து காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவுகளுக்கான நீதியை சர்வதேச சமூகம் விரைந்து வழங்க இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்துமாறு கோரியும் இன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அதனை கறுப்பு மகளிர் தினமாக பிரகடனம் செய்தும் இந்த போராட்டம் முன்னெடுக்கபட்டது.
இப்போராட்டத்தில் பங்குத்தந்தையர்கள், அரசியல் வாதிகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சமூக மட்ட பிரதிநிதிகள், கலந்து கவனயீர்ப்பு போராட்டத்தை வலுப்படுத்தினர்.இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களால்
“உலகெல்லாம் பெண்கள் உரிமை பேசும் இந்நாளில் தெருவில் கிடந்து அழ வைத்திருக்கிறது இந்த அரசு,
எமது பிள்ளைகளை நீங்கள் பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது ஒப்படைத்தோம்,
கால அவகாசம் வேண்டாம் முறையான நீதி விசாரணையே வேண்டும்.ஐ.நாவின் மனித உரிமை கூட்டத்தொடரில் இணை அனுசரணை வழங்கும் நாடுகள் இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றில் பாரப்படுத்த ஆதரவு நல்க வேண்டும்.
கோட்டா அரசே நீ கொண்டு போனவர்கள் எங்கே?
இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எமது பிள்ளைகளுக்கு மரணச்சான்றிதழ் தான் பதில் என்றால் கொலையாளி யார் ?
தெற்கில் சுதந்திரம் வடக்கில் அடக்குமுறை”
போன்ற வாசகங்களை தமிழ், ஆங்கிலம், சிங்கள மொழியிலான நீண்ட பதாதைகளை கையில் ஏந்தி கண்ணீருடன் கவயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை இராணுவம், இராணுவ புலனாய்வாளர்கள் மற்றும் சிவில் உடை தரித்த பொலிஸார் புகைப்படங்களை எடுத்து அச்சுறுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டனர்.
காணாமல் போனோருக்கு விடுதலை கிடைத்து கண்ணீருக்கு விடை கிடைக்குமா? போராட்டத்தின் முடிவு தான் என்ன? சர்வதேச நீதிமன்றத்துக்கு கேட்குமா இந்த கதறல்? என்ற கேள்விகளை தங்கி நிற்கிறது தமிழ் சமூகம்.
செய்தி சேகரிப்பு
இளவரசி இளங்கோவன் , கனடா