Home>>கல்வி>>மழைக்கால கற்றல் பாதிப்புகளை எதிர்கொள்ள மாணவர்களுக்கு மழைபாதுகாப்பு உடை வழங்கிடுக
கல்விசெய்திகள்தமிழ்நாடுமன்னார்குடி

மழைக்கால கற்றல் பாதிப்புகளை எதிர்கொள்ள மாணவர்களுக்கு மழைபாதுகாப்பு உடை வழங்கிடுக

தமிழகத்தில் தற்போது வடகிழக்குப் பருவ மழை தொடங்கி விட்டதை நாம் நன்கறிவோம். மேலும், இந்த ஆண்டு பருவ மழையின் தாக்கம் அதிகம் இருக்கும் என்று வானிலையாளர்கள் கணித்து அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தவிர, கோவிட் 19 நோய் பெருந்தொற்று காரணமாக மாணவர் இன்றி ஒன்றரை ஆண்டுகளாக மூடிக்கிடந்த வகுப்பறைகள் எதிர்வரும் நவம்பர் 1 முதல் திறக்கப்பட இருப்பதாக அண்மையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பள்ளித் திறக்கப்படாமல் ஊரடங்கு காரணமாக அனைவரும் தேர்ச்சி பெற்று நேரடியாக இரண்டு வகுப்புகளைக் கடந்து வரும் மாணவர்களிடையே போதுமான அடிப்படைக் கற்றலடைவுகள் இருக்கும் என்பது உறுதியாகக் கூறமுடியாது.

மேலும், பள்ளி வேலைநாள்கள் முழுமையாக இருந்தால்கூட அனைத்துப் பாடப்பகுதிகளையும் நிறைவாக நடத்தி முடிக்க இயலாத நிலையிலேயே இன்றைய பாடத்திட்டங்கள் பெரும்பாலும் உள்ளன. உயர்தரமான, உலகத் தரமான கல்வி என்று உரக்கக் கூவி பாடச்சுமையை வெகுவாக அதிகரித்ததன் விளைவு ஆசிரியர்களும் மாணவர்களும் போதிய கற்றல் இலக்குகளை அடைய முடியாமல் ஒருசேர திணறிக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய சூழலில், தீவிர பருவ மழைக்கால விடுமுறைகள் மாவட்ட நிர்வாகத்தின்மூலம் அறிவிக்கப்படுவது ஒருபுறம் என்றால் மாணவர்கள் தினசரி வருகையை மழை பாதிப்பது மறுபுறம் எனலாம்.

சரியாக சொல்ல வேண்டுமேயானால், ஒவ்வொரு கல்வியாண்டிலும் இரண்டாம் பருவ காலமென்பது பருவமழைக் காலமாக இருந்து வருகிறது. இக்காலகட்டத்தில், கற்றல் கற்பித்தல் நிகழ்வுகள் பெரும்பாலும் முழு அளவில் திருப்திகரமாக நடைபெறுவதென்பது முயற்கொம்பேயாகும்.

‘நடுவுல கொஞ்சம் கற்றலைக் காணோம்!’ என்கிற இயற்கை பேரிடர் நிலையில் வழக்கத்திற்கு மாறாக இந்த முறை தொடக்கக்கல்வித்துறையின் கீழுள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்படுவதே இந்த வடகிழக்குப் பருவமழை காலமாக இருப்பது வேதனையான ஒன்று.

ஏழ்மையும் வறுமையும் அறியாமையும் பள்ளிப் பிள்ளைகளைப் படிக்க விடாமல் தொடர்ந்து பின்னோக்கி இழுத்து வந்தாலும் அரசின் பல்வேறு மாணவர் நலன் முன்னெடுப்புகளால் இந்திய ஒன்றிய அளவில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க இடத்தில் முன்னணியில் இருப்பது பாராட்டுக்குரியது. இதில் பருவ மழைக்காலம் என்பது மிக மோசம். நடப்பில் மாணவர் வருகைப்பதிவானது பெரிய வீழ்ச்சி காணும்.

குறிப்பாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய, விளிம்பு நிலைக் குழந்தைகள் மழைக்காலத்தில் பள்ளி வருவது பேரிடராக இருப்பது உண்மை. பெய்யும் மழையிலிருந்து தம்மைக் காத்துக்கொள்ள போதிய மழைப் பாதுகாப்புப் பொருள்களான குடைகள் மற்றும் கவச உடைகள் வீடுகளில் இல்லாத நிலையே அதிகமுள்ளது. கிழிந்த, உடைந்த குடைகளில் தம்பி தங்கைகளோடு முக்கால்வாசி நனைந்த நிலையிலேயே பள்ளி வரும் அவலநிலை பல பள்ளிகளில் காணக்கூடியதாக உள்ளது.

இதுதவிர, நெகிழிக் கோணிப்பையைத் தலையில் கவிழ்த்துவரும் கொடுமையும் அரங்கேறி வருவது பரிதாபத்திற்குரியது. மேலும், மழைக்காலத் தொற்று மற்றும் இதர நோய்கள் தாக்கப்படுவதும் அவதியுறுவதும் படிப்புப் பாதிப்பதும் நடப்பாக இருப்பது கவலைக்குரிய ஒன்றாகும். கொரோனா கால பாதுகாப்பு வழிமுறைகளுடன் மழைக்கால கற்றல் கற்பித்தல் தடுப்புப் பேரிடர்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இத்தகைய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் அனைத்துப் பள்ளிக் குழந்தைகளுக்கும் கல்வி நலன் மற்றும் உடல் நலன் பேணுதல் பொருட்டு நல்ல, தரமான மழைப்பாதுகாப்புக் கவச உடைகளை (Rain Coats) அவசர அவசியம் கருதி உடன் வழங்கிட தக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் இன்றியமையாதது ஆகும்.


கட்டுரை:
முனைவர் மணி. கணேசன்,
பள்ளி ஆசிரியர்.


பட உதவி: Photo by Alesia Kazantceva on Unsplash

Leave a Reply