Home>>ஆன்மீகம்>>தமிழ் இந்து ! ஏன்? (பகுதி – 1)

இந்து மதஒழிப்பு பேசுவோர் இந்து மதத்தைவிட்டு வெளியேறாமல் இரட்டை வேடம் போடலாமா? – தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!


நான், ஆரிய இந்து – தமிழ் இந்து என்று பிரித்துப் பேசுவதற்குக் காரணம் – ஆரிய, பிராமண – சமற்கிருத ஆதிக்கத்திலிருந்து தமிழ் இந்துக்களை விடுவித்து, தமிழரின் சமத்துவ ஆன்மிக நெறிகளான சிவநெறி, திருமால் நெறி ஆகியவற்றிற்குத் தனித் தலைமை கொடுக்கத்தான்.

தமிழ்நாட்டுக் கிறித்துவர்கள், முசுலிம்கள் தங்கள் மதத்திற்கு முன் “தமிழ்” என்று போட்டுக் கொள்ள வேண்டும் என்று நான் கூறவில்லை. அப்படித், “தமிழ்” என்ற முன்னொட்டு சேர்க்க வேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை. ஏனெனில், தமிழ்நாட்டுக் கிறித்துவர்களுக்கும், முசுலிம்களுக்கும், ஆரிய பிராமண சமற்கிருத ஆதிக்கமோ, அவாள் வழிகாட்டலோ சிறிதும் இல்லை!

மதம் என்பதற்கும் இனம் என்பதற்கும் பெரிய வேறுபாடுகள் உள்ளன. இனம் என்பது வரலாற்று மரபுவழி – குருதிவழி உறவுடன் உருவாகக் கூடியது. மதம் என்பது ஆன்மிகக் கொள்கை அடிப்படையில், “ஏற்றுக் கொள்ளப்படுவது!”.

ஒருவர் ஒரு மதத்தைக் கைவிட்டு இன்னொரு மதத்தை ஏற்றுக் கொள்ளலாம்; “இனத்தை” அவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியாது. இனம், மரபு வழியில், பிறப்பு வழியில் மற்றும் வாழ்வியல் வழியில் வருவது!

ஓர் இனத்தில் பல மதத்தவர் இருக்கலாம்; அவர்கள் அனைவரும் ஓர் இனத்தவரே! தமிழ்த்தேசிய இனத்தைச் சேர்ந்த தமிழ்நாட்டுக் கிறித்தவர்கள், முசுலிம்கள், இந்துக்கள் அனைவரும் தமிழர்களே! இவர்கள் விரும்பினால் மதத்தை மாற்றிக் கொள்ளலாம். இனத்தை மாற்றிக் கொள்ள முடியாது.

இந்து மத ஒழிப்பிற்கு என்ன செய்தார்கள்?
===========================================

நான் “தமிழ் இந்து” என்ற மாற்றுப் பெயரை முன்மொழிந்ததும், இந்து என்றால் வர்ணாசிரமம் – பார்ப்பன ஆதிக்கம் – சமற்கிருத ஆதிக்கம் – இவற்றையெல்லாம் மணியரசன் ஏற்றுக் கொள்கிறார் என்று பெரியாரியர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். நான் உடல்நலக் குறைவால் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்ததால், அவர்களுக்கு எனது மறுமொழியை உடனடியாகக் கூற முடியவில்லை.

“இந்து மத ஒழிப்பாளர்” என்று பெரியார் தம்மைப் பிரகடனப்படுத்திக் கொண்டார். இந்து மதத்தை ஒழித்தால்தான் வர்ணபேதம், சாதி பேதம், பிராமண ஆதிக்கம் முதலியவற்றை ஒழிக்க முடியும் என்று பெரியார் கூறினார்.

தமது இந்து மத ஒழிப்பு அறிவிப்பிற்குப் பெரியார் உண்மையாக நடந்து கொண்டாரா? இல்லை! அவர் இந்து மதத்தைவிட்டு வெளியேறவில்லை; இந்துத் தமிழர்களை அம்மதத்திலிருந்து வெளியேற்றும் மாற்றுத் திட்டத்தையும் அறிவிக்கவில்லை.

இந்து மதத்தில் இருக்கும் வரை தீண்டாமையை ஒழிக்க முடியாது; பிராமண ஆதிக்கத்தை – வர்ணாசிரமத்தை ஒழிக்க முடியாது என்று அறிவித்த அண்ணல் அம்பேத்கர், இந்து மதத்தைவிட்டு ஐந்து இலட்சம் மக்களுடன் வெளியேறி புத்த மதத்தில் சேர்ந்தார். அம்பேத்கர் தமது இந்து மத எதிர்ப்பில் உண்மையாக நடந்து கொண்டார். பெரியாரும் அவரின் வாரிசுகளும் தங்களது இந்துமத ஒழிப்புக் கொள்கைக்கு உண்மையாக நடந்து கொண்டார்களா? இன்றைக்காவது பெரியாரியர்கள் இந்துமத ஒழிப்புக்கு உண்மையாக நடந்து கொள்கிறார்களா? இல்லை! இந்து மதத்திலேயே இருக்கிறார்கள். தங்கள் பிள்ளைகளுக்கு இந்து மத அடையாளத்தை ஆவணங்களில் சேர்க்கிறார்கள்.

பெரியாரியர்கள் தங்களின் இந்துமத ஒழிப்பு வேலைத் திட்டத்திற்கு உண்மையாக – நேர்மையாக நடந்து கொண்டிருந்தால், அவர்கள் இந்து மதத்தைவிட்டு வெளியேறி இருக்க வேண்டும்.

பெரியாரும் அவருடைய வாரிசுகளும் கடவுள் மறுப்பாளர்கள் மட்டுமில்ல, கடவுள் ஒழிப்பாளர்கள். “கடவுளை உண்டாக்கியவன் முட்டாள், கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி, கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்” என்பவை பெரியாரின் பகுத்தறிவுப் பொன்மொழிகள்! அவர் சிலைகளின் கீழ் இன்றைக்கும் இவ்வரிகள் பொறிக்கப்பட்டுள்ளன.

கடவுள் ஒழிப்பு, இந்துமத ஒழிப்பு ஆகிய பெரியாரது கொள்கைகளுக்குப் பெரியாரும், பெரியாரியர்களும் உண்மையாக இருந்திருந்தால், அவர்கள் அனைவரும் இந்து மதத்தைவிட்டு வெளியேறி இருக்க வேண்டும். கடவுள் நம்பிக்கையற்ற – மத நம்பிக்கை அற்ற ஒரு சமூகப் பிரிவை உருவாக்கி இருக்க வேண்டும். பெரியார் தம்மைப் பின்பற்றிய இலட்சக்கணக்கான தொண்டர்களுடன் இந்து மதத்தைவிட்டு வெளியேறி கடவுளற்ற – மதமற்ற – சாதியற்ற ஒரு முற்போக்கு “சமூகப் பிரிவை”த் தமிழ்நாட்டில் உருவாக்கி இருக்க முடியும். அதற்கு இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடமிருக்கிறது. வளர்ச்சிப் போக்கில் அச்சமூகப் பிரிவுக்கு இடஒதுக்கீடும் வாங்கியிருக்க முடியும். பெரியார் தொண்டர்கள்தாம் 1967லிருந்து தமிழ்நாட்டு மாநில ஆட்சியை நடத்துகிறார்கள். இம்மாநிலக் கட்சிகள் இந்திய அரசில் கூட்டணி அமைச்சரவையிலும் அவ்வப்போது இடம் பெறுகின்றன.

ஏன் பெரியார், இந்து மத ஒழிப்பிற்கு மாற்றுச் செயல்திட்டம் ஒன்றை வைக்கவில்லை? கடைசிவரை இந்து மதத்திலேயே இருந்தது ஏன்? இன்றையப் பெரியாரியர்களும் அதே “இந்து ஒழிப்புத் திட்டத்தைப்” பேசுகிறார்கள். மாற்றுத் திட்டத்தை முன்வைத்து செயல்பட மறுக்கிறார்கள். ஏன்?

சமூகக் கெடுதல்கள் என்று தாம் உணர்பவற்றைப் பெரியார் ஒழிக்கப் பரப்புரை செய்வார். மாறறுத் திட்டத்தை முன்வைக்க மாட்டார். மாற்றுத் திட்டம் அவருக்குத் தெரியாமல் இருந்திருக்க வேண்டும் அல்லது தெரிந்திருந்தாலும் மாற்றுத் திட்டத்தைச் செயல்படுத்திடப் பொறுப்பெடுக்கப் பெரியாருக்குத் தயக்கமோ, அச்சமோ இருந்திருக்க வேண்டும்.

பெரியார் தம்மைப் பற்றிப் பெருமையாக என்ன வர்ணித்துக் கொண்டார்? “நான் அழிவு வேலைக்காரன்!” என்றார். இவ்வாறு அடிக்கடி தம்மைப் பற்றிச் சொல்லிக் கொண்டார். பெரியாரியர்கள் இப்பொன்மொழியை இப்போதும் சொல்லிக் கொண்டுள்ளார்கள். “ஆக்க வேலைத் திட்டம்” துல்லியமாகப் பெரியாரிடம் இல்லை. அவர் முன்வைத்த முன்மாதிரிச் சமூகம் அவர் காலத்திய ஐரோப்பியச் சமூகம்; ஆங்கிலேயச் சமூகம்!

பெரியாரைப் பொறுத்தவரை, ஆங்கிலம் முற்போக்கான மொழி – பகுத்தறிவு மொழி; உண்மையான பயன்பாட்டு மொழி! அக்கருத்து அடிப்படையில்தான் “ஆங்கிலம் படியுங்கள்; வீட்டில் மனைவியுடன், வேலைக்காரியிடம் ஆங்கிலத்திலேயே பேசக் கற்றுக் கொள்ளுங்கள்; தமிழை விட்டொழியுங்கள்” என்று 1968 வாக்கில்கூட எழுதினார். மீண்டும் 1972 டிசம்பரில் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றும், தமிழைப் படிக்காதே என்றும் பெரியார் சொன்னார். தமிழைப் படிக்காதே, வீட்டில் தமிழில் பேசாதே, ஆங்கிலத்தில் பேசிப் பழகு என்றார். (பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் – 2, பதிப்பாசிரியர் வே. ஆனைமுத்து, 1974).

மேற்கண்டவாறு 1972 டிசம்பரில் பெரியார் கூறினார். அதாவது அவர் வாழ்வின் கடைசிக் கட்டத்தில்சுகூடத் தமிழ் ஒழிப்புக் கருத்தை வலியுறுத்தி வந்தார். 1973 டிசம்பரில் பெரியார் காலமானார்.

கடைசிக் காலம் வரை தமிழ்மொழி ஒழிப்பில் கவனமாக இருந்த பெரியார், “விடுதலை” ஏட்டின் முழக்கமாய்க் கடைசிவரை “தமிழ்நாடு தமிழர்க்கே” என்று போட்டுக் கொண்டது தமிழர்களை ஈர்க்க அவர் கையாண்ட போலி உத்தி தானே!

(தொடரும்)

பகுதி 2


கட்டுரை உதவி:
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்


கட்டுரை சேகரிப்பு:
திரு. நிரஞ்சன்,
மன்னார்குடி.

Leave a Reply