Home>>இலக்கியம்>>சில்ற இல்ல – சிறுகதை

“சில்ற இல்ல”.


அவன் கிடக்கிறான் சில்றப்பயன்னு எவன் சொன்னாலும் அவன் மூஞ்சில முட்டை பரோட்டாதான் போடணும்ன்னு தான் எனக்கு தோணும். முன்ன பின்ன டவுன் பஸ்ல போயிருந்தா தெரியும் சில்லறை காசுக்களின் மகிமை. கட்டு கட்டா ரூபாய் நோட்டுகள் வைத்திருக்கும் பணக்காரர்களை விட ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய் வைத்திருக்கும் ஏழை எளிய மக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஒரே இடம் பேருந்து தான்.

எட்டு ரூபா டிக்கெட்டுக்கு ஆறு ரூபாய் கொடுத்தா கூட அனுசரித்துக்கொண்டு ஏற்றுக்கொள்வார்கள் ஆனால் நூறு ரூபா தாளை நீட்டுங்க. நம்மள என்னமோ கள்ள நோட்டு கும்பல் போல நடத்துவார்கள் நடத்துனர்கள்.

அப்படி ஒரு சூழலில் தான் இன்று நான் மாட்டிக்கிட்டேன். மற்ற நாள் என்றால் பரவாயில்லை இன்னைக்கு எனக்கு ஒரு விளம்பர நிறுவனத்தில் ரொம்ப ரொம்ப முக்கியமான ஒரு நேர்முகத் தேர்வு. அதுக்கு போகத் தான் டவுன் பஸ் ஏறினேன். 8 ரூபாய் டிக்கெட். இன்னிக்குன்னு பாத்து என்கிட்ட சில்லறை இல்ல. நடத்துனரும் விடுவதாக இல்லை.

“சில்ற இல்லாம எதுக்கு பேருந்துல ஏறுறீங்க”. வீட்டில் இருந்து வரும் போதே சில்லறை எடுத்துட்டு வர மாட்டீங்களா”
அப்படி அப்படி அவர் சொன்னதுக்கு பிறகு தான் எனக்கே தோணுச்சு. சில்லறை காசு இல்லாம பேருந்தில் ஏறுவது எவ்வளவு பெரிய பயங்கரவாதம்ன்னு.

“அதைத்தான் நானும் கேட்கிறேன். பேருந்துல ஏறும் எல்லாருமா சரியா எட்டு ரூபாய் எண்ணி எடுத்து வர முடியும். நீங்க எதுக்கு சில்லறை இல்லாம வரீங்க. டெப்போல இருந்து கிளம்பும்போதே போதுமான அளவு சில்லறை எடுத்துட்டு தானே நீங்க வரணும்”.

“அதெல்லாம் எனக்கு தெரியும் வேணும்னா இந்த பையைப் பாரு. சில்லறை எங்க இருக்கு? வரவன் பூரா 100,500 ன்னு கொடுத்தா எப்படி இருக்கும்?? நான் தான் உக்காந்து அடிக்கணும். இல்லனா பஸ் ஸ்டாண்ட்ல உக்காந்து பிச்சை எடுக்கணும்”. ரொம்ப காட்டமாவே சொன்னார்.

எவ்வளவு விவாதித்தும் பலனில்லை. முடிவாக பேருந்தை விட்டுகீழே இறக்கி விடப்பட்டேன். நான் மட்டும் நல்ல நிலைமையில் இருந்தா அந்த நடத்துனர் பேசுன பேச்சுக்கெல்லாம் நான் உன்கிட்ட மீதி காசு கேட்கவே இல்லை நீயே வச்சுக்க. நல்லா இருன்னு கடுமையா திட்டிட்டு போயிருப்பேன்.

அந்த அளவுக்கு என்னை அசிங்கப்படுத்திட்டார் அந்த நடத்துனர். பாவம் அவருக்கு என்ன பிரச்சனையோ. அரசு பேருந்துகளில் நடத்துனர்கள் பாடு பெரும்பாடு தான். அவர்கள் கஷ்டம் அப்படி.

நான் இருக்கிற நிலைமையில் நூறு ரூபாய் எனக்கு 1000 ரூ போல. அதான் அமைதியா கீழ இறங்கிட்டேன்.

அடுத்த பேருந்தில் போகவும் தைரியம் இல்லை. அங்கேயும் இதே நிலைமை வரலாம். சில்லரை மாத்திகிட்டு போறதுதான் அறிவார்ந்த செயல்ன்னு உணர்ந்தேன். பக்கத்துல ஒரு பெட்டி கடையில போயிட்டு 12ரூபாய்க்கு ஒரு பன்னீர் சோடா வாங்கினேன். சும்மா சில்லறை கேட்டா யார் தருவா. பொறுப்பா வாங்கி குடிக்கிறதுக்கு முன்னாடி நூறு ரூபாய்க்கு சில்லறை இருக்கான்னு கேட்டேன். என் நேரம் அவர் இல்லைன்னுட்டாரு. அந்த பேருந்து நிறுத்தத்தில் சட்டுனு வேறு ஒரு கடை கண்ணில் மாட்ட மாட்டேங்குது. இப்ப என்னடா பண்றது நேர்முகத் தேர்வுக்கு வேற நேரம் ஆகுதுன்னு யோசிச்சிட்டு இருக்கும் வேலையில, தெய்வாதீனமா என் பழைய நண்பன் ஒருத்தன் வந்தான். எதிர்பாராத சந்திப்பு அவன் கூட பேசிட்டு அப்படியே அவனுக்கும் ஒரு பன்னீர் சோடா வாங்கி கொடுத்தேன். பாவிப் பய ஒரு சிகரெட் வேற வாங்கிகிட்டான். மொத்தமா 30ரூ ஆச்சு.

எட்டு ரூபா டிக்கெட்டுக்கு 38 ரூபாய் செலவு பண்ணி ஒரு வழியா நேர்முகத் தேர்வு நடக்கும் இடத்திற்கு சரியான நேரத்தில் சென்று விட்டேன்.

முதல் கட்ட நேர்முகத் தேர்வு முடிந்து அதில் நான் தேர்வு செய்யப்பட்டேன். நான் உட்பட 20 பேர் அடுத்த கட்ட குழு கலந்துரையாடலுக்கு (group discussion) தேர்வு செய்யப்பட்டார்கள்.

நீண்ட நேரம் ஆங்கிலத்தில் பல விஷயங்கள் பேசினார்கள். அவர்கள் பேசியதின் சாராம்சம் என்னவென்றால்,
அவர்கள் ஒரு வளர்கின்ற விளம்பரக் கம்பெனி. அவர்களுக்கு sildra என்னும் ஒரு புதிய குளிர்பான நிறுவனத்திடமிருந்து ஒரு பெரிய ஆர்டர் வந்து இருக்கு. அவர்கள் குளிர்பானத்தை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த ஒரு நல்ல விளம்பரம் செய்ய வேண்டும் என்பதுதான் அந்த நோக்கம்.

அந்த விளம்பரத்துக்கான ஒரு நல்ல கருவைக் கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்களுக்கான சவால். ஒவ்வொருவராக ஒவ்வொரு விதமான கருவைச் சொன்னார்கள்.

அதிலொருவர்…

“சார்! இந்த மாதிரி ஒரு இன்டர்வியூ சார். அதுல ரொம்ப கஷ்டமான கேள்வி எல்லாம் கேக்குறாங்க அவனால பதில் சொல்ல முடியல. தொண்டை சிக்கிக்குதும்இருமுறான். அப்ப அந்த மேனேஜர் அவனுக்கு முன்னாடி தண்ணீர் பாட்டிலை நீட்டுறார். அதை வேணான்னு மறுத்துட்டு தான் பையில இருந்து நம்ம கம்பெனி கூல்டிரிங்ஸ் sildra வை எடுத்து குடிக்கிறான் உடனே அவனுக்கு புத்துணர்ச்சி வருது. அவங்க கேட்ட எல்லா கேள்விக்கும் ரொம்ப அற்புதமா பதில் சொல்றான் சார். உடனே யூ ஆர் அப்பாயிண்டெட் அப்படின்னு சொல்றாங்க.

இங்க நாம போடுறோம் கேப்சன்.sildra குடிங்க .உங்க தன்னம்பிக்கையை வளர்த்துக்கோங்க. எதையும் சாதிப்பீர்கள்ன்னு.”
எனக்கு அத கேட்ட உடனே பரவால்ல கான்செப்ட் நல்லா இருக்கோ இல்லையோ இவன் கிட்ட ஐடியான்னு ஏதோ ஒண்ணு இருக்கு. நம்மகிட்டஒண்ணுமே இல்லையே என்ன பண்ண போறேன்ன்னு யோசிச்சேன்.
ஆனால் அங்க நடந்ததே வேற.

“இது ரொம்ப பழசா இருக்கு நிறைய கம்பெனி இதை யூஸ் பண்ணிட்டாங்க. புதுசா ஏதாவது சொல்லுங்க.தவிர தன்னம்பிக்கைக்கும் கூல் ட்ரிங்க்ஸ் க்கும் என்ன சம்பந்தம்”

“அடுத்து வேற யாரவது சொல்லுங்க”ன்னு அந்த ஐடியாவை நிராகரித்து விட்டார்கள்.
என் சோலி இதோட முடிஞ்சதுன்னு முடிவே பண்ணிட்டேன்.

அடுத்து ஒருத்தன்…

“லவ்வர்ஸ் டே. ஒருத்தன் தான் ரொம்ப நாளா காதலிச்ச பொண்ணு கிட்ட ப்ரொபோஸ் பண்றதுக்காக ஒரு டைமண்ட் ரிங் எடுத்துட்டு போய் அவகிட்ட முட்டி போட்டு ப்ரொபோஸ் பண்றான். ஆனா அவ அதை கண்டுக்கவே இல்லை. அங்க நம்ம ஹீரோ ஒரு மரத்தடியில இருந்துகிட்டு நம்ம கூல்டிரிங்சை என்ஜாய் பண்ணி குடிச்சிட்டு இருக்கார். அதை யதேச்சையாக பார்த்த அந்த பொண்ணு நேரா அவன்கிட்ட போய் அவன் குடிச்சிட்டு இருந்த நம்ம கூல் ட்ரிங்கை வெடுக்குன்னு புடுங்கி குடிக்கிறா சார். அதன் சுவை அவளை மயக்குது.உடனே அடுத்த ஷாட் ரெண்டு பேரும் ஒருத்தர் தோள் மேல ஒருத்தர் கையை போட்டுக்கிட்டு சாஞ்சுகிட்டு ரொமான்ஸா போறாங்க. இதை பார்த்த அந்த ப்ரொபோஸ் பண்ணவன் கையில் இருந்த டைமண்ட் ரிங்கை ரொம்ப சோகமா பாக்குறான்.

அப்ப போடுறோம்.
sildra குடி.ஜோடியைப் புடி. ஆளையே மயக்கி விடும் சுவை.

“ஓகே. இது பரவாயில்லை. consider பன்றோம்.அடுத்து வேற ஏதாவது பெட்டரா வருதான்னு பார்ப்போம்”.
வரிசையாக பலர் சொன்னார்கள். பலது எனக்கு ரொம்ப மொக்கையா இருந்துச்சு. எதையுமே அவர்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. நெருக்கி எல்லாரும் முடிச்சுட்டாங்க. எனக்கு முன்னாடி ஒரே ஒரு பையன். அப்பறம் நான் தான் கடைசி.

“எல்லாருமே ரொம்ப பழசா யோசிக்கிறீங்க. பல பேர் பயன்படுத்துன பழைய லாஜிக்கே நீங்களும் யூஸ் பண்றீங்க புதுசா ஏதாவது ட்ரை பண்ணுங்க”
அந்த பையன் முந்திக்கிட்டான்.

“பிளைட் பிடிக்க ஏர்போர்ட் போற நம்ம ஹீரோ, தாமதமா போனதால அங்கே போர்டிங் க்ளோஸ் ஆயிடுது. எவ்ளோ கெஞ்சி பாக்குறான். ஆனால் பிளைட் டேக் ஆஃ ஆயிடுது. அப்ப என்ன பண்றதுன்னு தெரியாம ஒரே குழப்பத்தில் இருக்கிற நம்ம ஹீரோ திடீர்ன்னு அங்கே இருக்கிற ஒரு கடைல விக்கிற நம்ம கூல் ட்ரிங்கை வாங்கி குடிக்கிறார். உடனே அவருக்கு ஒரு ஐடியா வருது. அங்கே இருக்கிற ஒரு போன் பூத் ல இருந்து கண்ட்ரோல் ரூம் க்கு போன் பண்றார் பிளைட்ல பாம் இருக்குன்னு, பிளைட் உடனே திரும்பி லேன்ட் ஆஃ ஆயிடுது. பிளைட் டிலேன்னு அறிவிப்பு விடுறாங்க…

வெற்றிப் புன்னகையோடு நம்ம ஹீரோ.

அங்கே போடுறோம்.
Slira “nothing is impossible ” ன்னு.

இப்படியெல்லாம் எப்படிதாண்டா மனசாட்சியே இல்லாம யோசிக்கிறீங்கன்னு நான் நினைத்த அதே நேரத்தில், “கொஞ்சமாவது லாஜிக் யூஸ் பண்ணுங்க. நாம விக்க போறது ஒண்ணும் பெரிய ராயல் ஐட்டம் இல்ல. வெறும் 200 ml 8 ரூ சில்ற காசுக்கு சாதாரண மக்கள்கிட்ட விக்க போற ஒரு சின்ன ஐட்டம். அதுக்கு தான் sildra ன்னு பேர் வச்சு இருக்கோம். அதுக்கு ஏத்த மாதிரி ரொம்ப சிம்பிளா யதார்த்தமா யோசிங்க. புரியுதா??”.

அவர் சொன்ன எதுவுமே என் மனசுல நிக்கல ஆனா சில்ற காசு எட்டு ரூபாய்ன்னு சொன்னது என் மனசுல நல்லாப்பதிந்துச்சு. இந்த சில்ற பிரச்சனை என் வாழ்க்கைல பலமுறை வந்திருக்கு. அதுவும் இன்னைக்கு காலைல நான் பட்ட பாடு என் கண்ணு முன்னாடி வந்துட்டு போனுச்சி. அப்பதான் திடீர்னு எனக்குள்ள ஒரு ஐடியா வந்துச்சு.

அதை தைரியமா அங்க சொன்னேன். நானே எதிர்பார்க்கல அது அவங்களுக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. என்னை தேர்வும் செய்து விட்டார்கள். அப்பாயின்மென்ட் ஆர்டர் விரைவில் வரும் என்றார்கள்.

நானும் நல்ல வேலை எனக்கு கிடைச்சிருச்சுங்கிற மகிழ்ச்சியில நண்பர்கள் பலருக்கும் விருந்து வெச்சேன். அப்படியே ஒரு மாசம் ஓடிட்டு. அப்பாயின்மென்ட் ஆர்டர் வந்த பாடு இல்லை. போன் போட்டு கேட்டாலும் பெருசா ஒன்னும் பதில் இல்லை. ஒரு நாள் நேரடியா அந்த நிறுவன தலைமையகத்துக்கு சென்றேன்.

அங்கதான் ஒரு குண்டை தூக்கிப் போட்டாங்க. அவங்களுக்கு கிடைக்க வேண்டிய ஆர்டர் எதுவும் சரியா வரலையாம். அவங்க நிறுவனம் ரொம்ப நட்டத்துல போறதால இருக்கிற ஆளுங்களையே வேலையை விட்டு கொஞ்சம் கொஞ்சமா அனுப்பிட்டு இருக்காங்களாம்.

அதனால இப்போதைக்கு புதுசா யாரையும் வேலைக்கு சேர்க்கிற எண்ணம் இல்ல .கொஞ்ச நாள் காத்திருங்க. திரும்ப புது ஆர்டர் வந்தா வேலைக்கு இழுக்கறோம்னு சொல்லி அனுப்பிவிட்டார்கள்.

என்னடா நம்ம வாழ்க்கை இப்படி ஆயிட்டு. பல நேர்முகத்தேர்வுகளில் கலந்து கொண்டு இறுதியாக ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணேன்னு ஒரு வேலை கிடைச்சுச்சு. அதுவும் மண்ணாப் போச்சேன்னு கவலை எனக்கு.

அதுக்கப்புறம் கொரோனா லாக்டவுன் வேற.அப்படியே ஒரு வருடம் போச்சு. இத்தனை நாளா வீட்ல டிவி, செல்போன்ன்னு பொழுதுபோச்சு. ஒருநாள் தொலைக்காட்சியில பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த பொழுது இடைவேளையில் ஒரு விளம்பரம் வந்தது. இது மாதிரி ஒரு நிகழ்ச்சிக்கு இடையில் ஏராளமான விளம்பரங்கள் வரும். நானும் அந்த சமயங்களில் வேற சேனல் மாத்தி விடுவேன். ஆனால் அந்த ஒரு விளம்பரம் என்னை ஆச்சரியப்படுத்தியது. அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்றே சொல்லலாம்.

ஒரு சாதரண பெட்டிக்கடை. அங்கே நிறைய குளிர் பானங்கள் இருக்கின்றன. அப்போது அங்கே வந்த ஒருவர் 100 ரூபாய் தாளை நீட்டி ஒரு குறிப்பிட்ட குளிர்பானத்தை கைய காட்டுகிறார். சில்லறை இல்லை என்று அந்த 100 ரூபாய் தாளை திரும்பி கொடுத்து விடுகிறார் கடைக்காரர். இன்னொருவரும் அதே போல 100 ரூபாய் தாளை கொடுக்கிறார் இந்த முறை கடும் கோபத்துடன் தூக்கி வீசி எறிகிறார் அந்த நோட்டை. அதேபோல வேறு சிலருக்கும் செய்கிறார். அந்த நேரத்தில் அந்த விளம்பரத்தின் நாயகன் தன் பர்ஸை எடுத்து பார்க்கிறான்.

அதில் 500 ரூபாய் மட்டுமே இருக்கிறது. ஒரு தயக்கத்துடன் அந்த 500 தாளை அந்த கடைக்காரரிடம் கொடுத்து ஒரு குறிப்பிட்ட குளிர்பானத்தை நோக்கி கையை காட்டுகிறான். எப்படியும் திருப்பி அனுப்பி விடப் போகிறார் என்ற பயத்தில் இருந்த அவனை, அதுவரை கடுகடு என்று முகத்தை வைத்துக்கொண்டு அனைவரையும் சில்லறை இல்லை என்று விரட்டிக் கொண்டிருந்த அந்த கடைக்காரர் புன்முருவலோடு அந்த குளிர்பானத்தை எடுத்துக் கொடுக்கிறார். பதிலுக்கு இவன் தனது 500 ரூ நோட்டை எடுத்துக் கொடுக்கிறான். அவரும் மகிழ்ச்சியாக வாங்கிக் கொள்கிறார். இவனுக்கு ஒண்ணுமே புரியல. உண்மையிலேயே இவரிடம் சில்லறை இருக்கும்போல என்று நினைத்துக் கொண்டு அந்த குளிர்பானத்தை முழுவதுமாக ரசித்து குடிக்கிறான். அதன் சுவை இவனை ரொம்ப கவர்ந்து விடுகிறது மீண்டும் அதே குளிர்பானத்தை வாங்குகிறான்.

இப்படியே மீண்டும் மீண்டும் 30, 40 என்று அந்த கடையில் உள்ள அந்த நிறுவன குளிர்பானங்கள் அத்தனையும் வாங்கி குடிக்கிறான். 500 ரூபா தீர்ந்து போச்சு. கடைக்காரர் இப்போது நக்கலாக அவனை பார்த்து சிரிக்கிறார். இப்ப புரியுதா ன்னு கேட்பது போல இருக்கு அவர் பாவனை.அதோடு விளம்பரம் முடிகிறது. அடுத்து கேப்சன் வருகிறது.

Sitra இதன் சுவையில் உங்களை மறப்பீர்கள். உங்கள் சேமிப்பை இழப்பீர்கள். பணம் பத்ரம். subject to taste risk…

ஆம். இது நான் அந்த நேர்முகத் தேர்வில் சொன்ன அதேக்கருதான். இப்போது விளம்பர வடிவில் வந்துள்ளது. அந்த நேர்முகத் தேர்வில் அந்த மேனேஜர் சொன்ன அந்த வார்த்தை மீண்டும் ஞாபகம் வந்தது. சில்லறை காசு எட்டு ரூபாய்க்கு விக்கிறதால இதுக்கு sildra ன்னு பேர் வச்சிருக்கோம்ன்னு. அப்ப புரியல இப்ப புரியுது யாரு சில்றன்னு ஆனால் பெயர் மட்டும் மாறி உள்ளது sitraன்னு.

“Sildra” இல்ல.


மன்னை செந்தில் பக்கிரிசாமி.

Leave a Reply